தென்றல் வீச மறந்த கணப் பொழுதில்,
களப்பில் எப்போதேனும் அலையெழும்.
வேதனைமிகுந்த மீனொன்று மேலெழுந்து
நெஞ்சில் அடித்தழுது
தடதடவென்று செட்டைகளை அசைத்து
வாலால் நடந்தபடி தன் துயரத்தைச் சத்தமிட்டரற்றி
நீரில் வீழ்ந்து மறைந்து போகும் - அதுவும்
உறுதியான கணமொன்றில் மாத்திரமே.
தூரக் கரைதனில் நெளியும் எல்லா ஒளிப் புள்ளிகளும்
களப்பு நீரில் நீண்ட தம் வெளிச்ச ரேகைகளை வரையும்.
கல்லடிப்பாலம்
அரண் போல உயர்ந்து எழுந்தாலும்
தன் தலை கவிழ்ந்து விழி புதைத்து
புன்னகைக்க மறந்து துயர் தாங்கும்
ஓர் அப்பாவைப் போல.
சிந்தனை மறந்த வாகனங்கள்
பாலத்தை அவசரமாய்க் கடந்து செல்லும்
அர்த்தமற்ற தம் வெளிச்சங்களை
களப்பின் மீது நீண்ட கோடுகளாய்த் தீட்டி
இந்தக் களப்பு அம்மாவைப் போன்றது.
ஆழ்ந்த விழிகளால் மெளனித்து
அனைத்துத் துயரத்தையும் தாங்கும்
முகத்தில் அலையெழுப்பும் தென்றலுக்குப் புன்னகைக்கும்
எல்லா ஒளிக்கோடுகளையும் கலக்கும் இணைக்கும்
களப்பின் மார்பு அலைகளையும் சுழிகளையும் உயிர்ப்பிக்கும்.
புத்தரின் நினைவெழும் நிக்கினி போயாகூட - வெறும்
சுண்ணாம்பாய்க் களப்பினுள் கரைகிறது,
புத்தபிரான் சொர்க்கம் நுழைந்த பினர பௌர்ணமியும் - கடும்
இருளாயே இங்கு விடிகிறது.
வசந்தம் உதயமானாலும் உதிக்க மறுக்கிறது சூரியன்
இது கிழக்கு!
No comments:
Post a Comment