அஸ்மா பின்த் அபூபக்கர் (ரழி)
;இப்போது நாம், இஸ்லாமிய வரலாற்றில் புகழுடன் ஒளிவீசும் தாரகையாய்த் திகழ்கின்ற ஒரு மகத்தான பெண்மணியின் சரிதையைக் காணப் போகின்றோம்.அண்ணல் நபியின் ஆருயிர்த் தோழர் அபூபக்கர் (ரழி) அவர்களின் மூத்த புதல்வியும் சுவனத்தைக் கொண்டு நற்செய்தி சொல்லப்பட்டவர்களில் ஒருவரான ஜூபைர் இப்னுல் அவ்வாம் (ரழி) அவர்களின் மனைவியும் மாபெரும் வீரத் தியாகியாய்த் திகழ்ந்த அப்துல்லாஹ் ஜூபைர் (ரழி)யின் அன்பு அன்னையுமான மரியாதைக்குரிய அஸ்மா (ரழி) அவர்களின் வரலாறுதான் அது!
இறைவனின் மீது உண்மையான - உறுதியான நம்பிக்கை கொண்ட அஸ்மா (ரழி) அவர்கள் சிறுவயது முதலே இஸ்லாத்தின் வெற்றிக்காக அரும்பெரும் பணிகளை ஆற்றும் நல்வாய்ப்பைப் பெற்றார்கள்!
ஜூபைர் (ரழி) அவர்களின் குடும்பத் தலைவியை வறுமையும் துன்பமும் வந்து வாட்டிய காலமும் உண்டு. அப்போது அவர்கள் பொருமையின் சிகரமாய் ஒளிர்ந்தார்கள். பிறகு செழிப்பும் வளவாழ்வும் வந்து மகிழ்வித்தன. அப்போது கிஞ்சிற்றும் செருக்குறாமல் குணத்தின் குன்றாய் வாழ்ந்துகாட்டி பெண்குலத்திற்கு ஒரு சிறந்த முன்மாதிரியைப் படைத்தார்கள்.
அவர்களின் வாழ்க்கை
வறுமைக்கு இலக்காகும் இல்லத்தரசிகளுக்கு ஒரு நம்பிக்கை நட்சத்திரம்! பெண்ணினத்தை இழிவுக் கண்கொண்டு பார்ப்பவர்களுக்கு - ஒரு பெண் ஆணைவிடவும் அதிக அறிவு பெற்றவளாக, சிறந்தவளாக திகழ முடியும் எனும் உண்மையின் நிரூபணம்!
பெண் என்றால் ஓர் இன்பப் பொருளாகவே இருக்க வேண்டும், வெளியலங்காரத்தையும் பகட்டையும் தவிர வேறெந்த நன்மையோ குறிக்கோளோ அவளிடம் இல்லை என்று கருதுபவர்களுக்கு -
பெண் என்பவள் வெறும் வெளியலங்காரம் எனும் நிலையை விட்டு உயர்ந்தவள், சமுதாயப் புத்தமைப்பில் ஓர் அங்கமாகவும் சமுதாயத்தின் உயர்வையும் சிறப்பையும் நிலைநாட்டுவதற்கு உறுதுணையாகவும் அவள் இருந்திட முடியும் எனும் உண்மையின் தெளிவுரை!
இஸ்லாத்தைத் தழுவுதல்
அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அழைப்பை ஏற்று சுமார் 17 பேர் மட்டுமே இரகசியமான முறையில் இஸ்லாத்தைத் தழுவியிருந்த காலத்திலேயே 18வது நபராக அஸ்மா (ரழி) அவர்கள் இஸ்லாத்தின் முன்னணிப படையில் தம்மை இணைத்துக் கொண்டார்கள்!
மக்காவில் இஸ்லாத்தின் அழைப்புப் பணி பகிரங்கமாக மேற்கொள்ளப்படத் தொடங்கிய ஆரம்ப காலத்தில் இணை வைப்பாளர்களான குறைஷிகளின் உள்ளத்தில் கோபக்கனல் பொங்கி எழுந்ததும் - பிறகு எத்துணை பயங்கரமான கொடுமைகள் தலைவிரித்தாடின என்பதும் யாவரும் அறிந்ததே!
அல்லாஹ்வின் அருமைத் தூதரும் அவர் தம் ஆருயிர்த் தோழர் அபூபக்கர் ஸித்தீக் (ரழி) அவர்களும்கூட அக்கொடுமைகளிலிருந்து தப்பித்திருக்க முடியவில்லை. இவை அனைத்தையும் கண்ணுற்ற சிறுவயதுப் பெண்ணாய் இருந்த அஸ்மா (ரழி) அவர்களின் உள்ளத்தில் ஈமான் மென்மேலும் உறுதிப்பட்டது. எவ்விதத் தளர்வோ தயக்கமோ அடைந்தார்களில்லை. இக்கொடுமைகளுக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்கப்பட வேண்டுமெனப் பொறுமையுடன் எதிர்பார்த்திருந்தார்கள்!
இறுதியில் மதீனா நகர் நோக்கி ஹிஜ்ரத் செய்வதற்கு இறைவன் தன் அன்புத் தூதருக்கும் அவர்தம் தோழர்களுக்கும் அனுமதி வழங்கினான்! வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அப்பயணம் வெற்றிபெற அஸ்மா (ரழி) அவர்கள் ஆற்றிய சேவை என்ன?
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மக்காவைத் துறந்து மதீனா புறப்பட்ட இந்நிகழ்ச்சி வெளிரங்கத்தில் - ஏதோ இரு மனிதர்கள் மக்காவிலிருந்து மதீனாவுக்குப் புறப்பட்டார்கள் எனும் வகையில் ஒரு சாதாரணமான பயணமாகத் தெறியலாம்! ஆனால் அந்தப் பயணம் - அதன் விளைவைப் பொறுத்து மகத்தானதொரு நிகழ்ச்சியே!
ஆம்! ஹிஜ்ரத் ஒரு சாதாரணப் பயணம் அல்ல! அண்ணலார் அவர்கள் 13 ஆண்டுகாலமாக மக்காவில் ஆற்றிவந்த ஏகத்துவப் பிரச்சாரத்தின் வீரப்பயணம்!
இஸ்லாத்தின் அழைப்புப்பணி ஒளிவுமறைவு, பலவீனம் எனும் நிலையிலிருந்து விடுபட்டு மனத்திண்மையுடனும் வலிமையுடனும் வெற்றிச் சிகரத்தை எட்டிப்பிடிக்கத் தொடங்கிய பயணம்!
ஒரு மாபெரும் சகாப்தத்தின் தொடக்கமான இந்த ஹிஜ்ரத் பயணம் அன்று தோல்வி அடைந்திருக்குமாயின், இறுதித் தூதரின் உயிரே பேராபத்திற்குள்ளாகும் நிலைமை!
ஆகையால்தான் நபியவர்கள் அந்தப் பயணத்தை மிகமிக இரகசியமாக மேற்கொண்டார்கள்! மிகவும் முக்கியமானவர்களுக்குத்தான் அதன் இரகசியம் தெரியும். அத்தகையவர்கள் மட்டுமே அதில் துணைபுரிய அனுமதிக்கப்பட்டார்கள்! அண்ணலாரின் குடும்பத்தைச் சார்ந்தவர்களில் அலீ (ரழி) அவர்களுக்குத் தெரியும்! அடுத்து, சித்தீகுல் அக்பரின் மூத்த புதல்வி அஸ்மா (ரழி) அவர்களுக்கும் அந்தப் பயணத்தின் அனைத்து விபரங்களும் தெரியும்! அவர்கள்தான் அதில் நபியவர்களுக்கும் தம் தந்தை அபூபக்கர் (ரழி) அவர்களுக்கும் மற்றவர்களைக் காட்டிலும் அதிகமாக பொறுப்புமிக்க உதவிகளை அளித்தார்கள்.!
அஸ்மா (ரழி) அவர்களின் சாதுர்யம்
அண்ணல் நபி (ஸல்) அவர்கள், குறைஷி குலத்து வன்னெஞ்சர்களால் முற்றுகையிடப்பட்டிருந்த தம்முடைய இல்லத்திலிருந்து இரகசியமாக வெளியேறி - தம் தோழர் அபூபக்கர் (ரழி) அவர்களுடன் மக்காவின் அருகிலிருந்த தௌர் குகையை அடைந்தார்கள். எதிரிகளின் நிலைமைகளை அனுசரித்து சில நாட்களாக அங்கே தங்கியிருக்க வேண்டும் என்பதும் - அந்நாட்களில் அஸ்மா (ரழி) அவர்கள்தான் அவ்விருவருக்கும் உணவு தயாரித்து மிகமிக இரகசியமாகக் குகைக்குச் சென்று கொடுத்து வரவேண்டும் என்பதும் திட்டம்!
அங்கே மக்காவில்.......! அண்ணலாரின் வீட்டுக்கு வெளியே தங்களின் கொடிய கொலைபாதகத் திட்டத்தை நிறைறே;றுவதற்காக நபியவர்கள் எப்போது வெளியே வருவார்கள் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த எதிரிகளுக்கு....... பாவம.;....! வீட்டினுள் விரிப்பில் படுத்துக் கொண்டிருப்பது முஹம்மத் (ஸல்) அல்ல, அலீ (ரழி) தான் என்பது அதிகாலை நேரம் புலர்ந்ததும் தான் தெரிய வந்தது! ஆனால் அப்போது அவர்களால் என்ன செய்திட முடியும்?
அவர்களின் தலைவன் அபுஜஹ்ல் தன்னுடைய திட்டம் தோல்வி அடைந்தது கண்டு வெகுண்டெழுந்தான்.......! அவனுக்குப் பைத்தியமே பிடித்து விடும்போல் இருந்தது!
அவனும் அவனுடைய தோழர்களும் அவர்களுக்கே உரிய போலிப் பகட்டெனும் செருக்குடனும் அபூபக்கர் (ரழி) அவர்களின் இல்லத்திற்கு வந்தார்கள். அபூஜஹ்ல் வேகமாகக் கதவைத்தட்டினான்! உள்ளே இருந்து வெளியே வந்தது வேறு யாருமல்ல, இளம் வயதுப் பெண்மணியாகிய அஸ்மா (ரழி) தான்! குகையில் தங்கியுள்ள அண்ணலாருக்கம் தம் அன்புத் தந்தையாருக்கும் வீட்டில் உணவு தயார் செய்து கொண்டிருந்தார்கள்!.
உன் தந்தை எங்கே? இது அபூஜஹ்லின் அகங்காரக் கேள்வி! அவர்களைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது:
உரிய பதில் வராததைக் கண்டதும் அபூஜஹ்ல் அதட்டினான்: மிரட்டினான் ஆனால் அஸ்மா (ரழி) அவர்கள் எதற்கும் அஞ்சவில்லை: அசைந்து கொடுக்கவில்லை. அப்போது கொடியோன் அபூஜஹ்ல் அன்பே உருவான அஸ்மா (ரழி) அவர்களின் அழகிய கன்னத்தில் கையை ஓங்கி பளீரென அறைந்தான்!
ஆத்திரத்தால் அறிவிழந்தவர்கள் இப்படித்தான் செய்வார்கள் ஆண்களிடம் தங்களின் ஜம்பம் பலிக்காவிட்டால் பாவம்! பெண்களைத்தான் அடிப்பார்கள்!
பொறுமைக் கடலான அஸ்மா (ரழி) அவர்கள் அந்த அற்பனின் அடியைத் தாங்கிக்கொண்டு ஆற்ற வேண்டிய பணிகளை முறையோடு கவனி;த்திடலானார்கள். அந்தக் கோழைகளின் மிரட்டல்களுக்கெல்லாம் அஞ்சி நடுங்கிச் சோர்ந்து உட்கார்ந்து விடவில்லை - ஹிஜ்ரத் பயணம் இப்போது முன்னைவிட ஜாக்கிரதையாக தௌர் குகையிலிருந்து தொடர்ந்திட வேண்டியதிருப்பதால்!
அஸ்மா (ரழி)யின் சகோதரர் - அபூபக்கர் அவர்களின் மூத்த புதல்வர் அப்துல்லாஹ் என்பவர் (அதுவரை அவர் முஸ்லீம் ஆகாமல் இருந்தார்) பகல் நேரங்களில் மக்காவின் தெருக்களில் சுற்றித் திரிந்து எதிரிகளின் திட்டங்கள், செயல்பாடுகள் என்னவென்பதை அறிந்து கொண்டு வருவார். மாலை நேரத்தில் தம் சகோதரியுடன் குகைக்கு வந்து எல்லாச் செய்திகளையும் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் தெரிவிப்பார்!
அபூபக்கர் (ரழி) அவர்களின் வேலையாள் அமீர் இப்னு ஃபுஹைரா என்பவரின் மூலம் ஒரு தற்காப்புப் பணி மேற்கொள்ளப்பட்டது! அது என்ன? அவர் அபூபக்கர் (ரழி) அவர்களுக்குச் சொந்தமான ஆடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டிக்கொண்டே சென்று குகை அருகே வருவார். அங்கு அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கும் அபூபக்கர் (ரழி) அவர்களுக்கும் பால் கறந்து கொடுத்துவிட்டு, பிறகு அஸ்மா (ரழி) அவர்களும் அவர்தம் சகோதரரும் குகையிலிருந்து வீட்டுக்குத் திரும்பும்போது பின்னாலேயே அந்த ஆடுகளை ஓட்டிக்கொண்டு வருவார்! அதன்மூலம் அவ்விருவரின் காலடிச் சுவடுகளை அழித்து விடுவார். எதிரிகளில் எவனாவது ஒருவன் அவ்விருவரின் காலடிச் சுவடுகளைப் பின்பற்றிச் சென்றுவிட்டால்..! இரகசியம் வெளிப்படுவதற்கான அந்த வழியும் இந்த ஏற்பாட்டினால் அடைக்கப்பட்டது!
இளம் வயதுடைய அஸ்மா (ரழி) அவர்கள் இத்தகைய நுட்பமான ஏற்பாடுகளையெல்லாம் செவ்வனே நிறைவேற்றினார்களெனில் அவர்களின் அறிவுத் திறனை என்னவென்றுரைப்பது!
குகையில் மூன்று நாட்கள் தங்கியிருந்த பிறகு நபி (ஸல்) அவர்கள் அஸ்மா (ரழி) அவர்களிடம் கூறினார்கள், 'அலீ (ரழி) அவர்களிடம் சென்று நாளை இரவு இரு ஒட்டகங்களையும் வழிகாட்டியாக நியமிக்கப் பட்டவரையும் அழைத்துக் கொண்டு இங்கு வரவேண்டும் என்று அறிவித்து விடுவீராக!
..அலீ (ரழி) அவர்கள் இரு ஒட்டகங்களையும் வழிகாட்டியையும் அழைத்துக் கொண்டு உரிய நேரத்தில் கட்டளைப்படி வந்து சேர்ந்தார்கள்!
மறுபுறத்தில்.. அஸ்மா (ரழி) அவர்கள் பல நாட்களுக்குப் போதுமான உணவையும் தண்ணீரையும் தயார் செய்து கொண்டு வந்தார்கள்! அங்கே உணவு மற்றும் தண்ணீர் நிரம்பிய தோல் பைகளை முறையாகக் கட்டுவதற்கு கயிறு எதுவும் கிடைக்கவில்லை! என்ன செய்வது? சித்தீகின் மகளுக்கு பளிச்சென்று ஒரு யோசனை பட்டது!
உடனே தனது இடுப்பில் கட்டியிருந்த வார்த் துணியை அவிழ்த்து இரண்டாகக் கிழித்து இரு பைகளையும் கட்டினார்கள்.
இந்த புத்திசாலித்தனத்தைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் ஷதாதுந் நிதாகைன்| (இரு வாருடையவரே!) என்று அழைத்தார்கள்! அன்றிலிருந்து இன்று வரை அஸ்மா (ரழி) அவர்கள் இதே பெயரில் புகழடைந்துள்ளார்கள்!
பணமும் பாட்டனாரும்
அஸ்மா (ரழி) அவர்களின் அறிவு அவர்களின் ஈமானைப் போன்று உயர்வானதாய் இருந்தது. அவர்களின் நடவடிக்கைகள் அனைத்தும் அறிவுப்பூர்வமாய் அமைந்திருந்தன. இதோ! மற்றொரு நிகழ்ச்சி!
அபூபக்கர் (ரழி) அவர்கள் ஹிஜ்ரத்தின்போது வீட்டிலிருந்த பணம் முழுவதையும் எடுத்துச் சென்றிருந்தார்கள்! எதற்காக? தம் குடும்பத்தினருக்கு எதுவும் கொடுக்கக் கூடாது என்பதற்காக அல்ல! மாறாக, முஹம்மர் (ஸல்) அவர்களுக்கு உதவ வேண்டும், அவர்கள் மேற்கொண்ட அழைப்புப் பணி உலகமெங்கும் பரவிட வேண்டும் என்பதற்காகத்தான்! தம்மை விடவும் தம் குடும்பத்தை விடவும் உயர்வாய்க் கருதிக் கொண்டிருந்த ஏகத்துவப் பிரச்சாரத்தை வெற்றியடையச் செய்ய வேண்டும் எனும் உன்னதக் குறிக்கோளுக்காகத்தான் அபூபக்கர் (ரழி) அவர்கள் இவ்வாறு செய்தார்கள்.
இந்த விஷயம் அவர்களின் தந்தை அபூகுஹாஃபாவுக்குத் தெரிய வருகிறது. அவர் முதியவராகவும கண்பார்வை இழந்தவராகவும் இருந்தார். அதுவரை அவர் இஸ்லாமிய நெறியை ஏற்றிருக்கவில்லை! மிகுந்த மனவேதனையுடனும் கோபத்துடனும் வந்து தம்முடைய பேத்தியான அஸ்மா (ரழி) அவர்களை நோக்கிக் கேட்டார்.
அபூபக்கர் உங்களை மற்றொரு துன்பத்தில் ஆழ்த்தியுள்ளார். உங்களைத் தன்னந்தனியே விட்டு விட்டுச் சென்றது மட்டுமல்லாமல் தன்னுடைய பணம் முழுவதையும் - உங்களுக்குத் தராமல் கொண்டு சென்று விட்டாரே?'
என் அன்புப் பாட்டனாரே! அப்படியல்ல என்று பதிலளித்த அஸ்மா (ரழி) அவர்கள் முதியவராகவும் கண்பார்வை இழந்தும் உள்ள தம் பாட்டனாரை இந்நேரத்தில் மனம் நோகவைப்பது நல்லதல்ல எனக் கருதி, சிறுசிறு கற்களைக் கொஞ்சம் பொறுக்கி எடுத்துக் கொண்டுவந்து அபூபக்கர் (ரழி) அவர்கள் பணம் வைத்துக் கொண்டிந்த பையில் அவற்றைப் போட்டு அதனைப் பணப் பெட்டியில் வைத்துவிட்டார்கள்.!
இங்கு வந்து பாருங்களேன்!' என்று கூறி பாட்டனாரின் கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு சென்று அந்தப் பையில் வைத்து 'இது என்னவென்று சொல்லுங்கள்' என்றார்கள்!
அப்போது அபூகுஹாஃபா (ரழி) அவர்கள் மனம் நிம்மதி அடைந்து, 'இதனை உங்களுக்காக விட்டுச் சென்றுள்ளாரெனில் நல்லதைத்தான் செய்துள்ளார்' என்று கூறினார்கள்.
அசத்தியவாதிகளின் நரித்தனமான பிரச்சாரம்.
ஹிஜ்ரத் மேற்கொள்ளுமாறு இறைவன் பிறப்பித்த கட்டளையை ஏற்று முஸ்லிமகள் மக்காவை விட்டு மதீனாவில் குடியேறிய தொடக்கத்தில் - மதீனாவின் தட்பவெப்ப சூழ்நிலை முதலில் அவர்களின் உடல்நிலைக்கு ஒத்துவரவில்லை. இறைவனின் நாட்டப்படி, சிறிது காலம் முஹாஜிர்களின் எந்தக் குடும்பத்திலும் குழந்தைகளே பிறக்கவில்லை.
இஸ்லாத்தின் எதிரிகளான யூதர்கள் இந்த இயற்கையான நிலையைக்கூட எதிர்ப்பு ஆயுதமாகக் பயன்படுத்தத் தவறவில்லை. உடனே வதந்திகளைக் கிளப்பினார்கள். அதாவது, முஸ்லிம்களுக்கு சூனியம் வைக்கப்பட்டுள்ளது. அதனால்தான் அவர்களில் ஒருவருக்குக்கூட குழந்தை பிறக்கவில்லை. அவர்களுக்குப் பிறகு அவர்களின் பெயரைக் கூற சந்ததிகளே இருக்கமாட்டார்கள் என்று அறிவுக்குப் புறம்பான - அநாகரீகமான பொய்யைப் பரப்பிவிட்டு, அதன்மூலம் முஸ்லிம்களின் இறைநம்பிக்கையைப் பலவீனப்படுத்த முயன்றார்கள்.
அசத்தியவாதிகளின் எல்லா வழிகளிலும் தங்களின் நரித்தனத்தைக் காண்பித்துக் கொண்டிருப்பார்கள் என்பது இன்று வரைக்கும் நாம் கண்டுவரும் உண்மைதானே!
அஸ்மா (ரழி) அவர்கள் இதுவரை ஹிஜ்ரத் செய்து மதீனாவுக்கு வரவில்லை. அவர்களின் மாமி மகன் ஜுபைர் இப்னு அவ்வாம் (ரழி) அவர்களுடன் மக்காவிலேயே அவர்களுக்குத் திருமணம் நடைபெற்றிருந்தது!
ஓரிரு மாதங்களுக்குப் பிறகு நபி (ஸல்) அவர்கள் தம் மனைவியரையும் ஏனைய நெருங்கிய உறவினர்களையும் அழைத்து வருவதற்காக ஜைத் இப்னு ஹாரிஸா (ரழி) மற்றும் அபூ ராஃபிஉ (ரழி) இருவரையும் மக்காவுக்கு அனுப்பினார்கள். இதுபோன்று அபூபக்கர் (ரழி) அவர்கள் தம் பணியாளின் மூலம் தம் மகன் அப்துல்லாஹ்வுக்குக் கடிதம் கொடுத்து விட்டார்கள். அதில் அப்துல்லாஹ்வின் தாயார் உம்மு ரூமானையும் (அபூபக்கர் (ரழி) அவர்களின் இரண்டாவது மனைவி) அவரது சகோதரிகளையும் மதீனாவுக்கு அழைத்து வருமாறு ஏவப்பட்டிருந்தார்.
அதற்கு ஏற்ப அப்துல்லாஹ் தம் தாயாரையும் சகோதரிகள் அஸ்மா, ஆயிஷா (ரழி) இருவரையும் அழைத்துக் கொண்டு மதீனா நோக்கிப் புறப்பட்டார்!
அஸ்மா (ரழி) அவர்கள் மதீனாவுக்கு வந்ததும் கொஞ்ச நாட்களில் அவர்களுக்கு ஓர் ஆண்குழந்தை பிறந்தது! ஹிஜ்ரத்திற்குப் பிறகு முஹாஜிர்களில் முதன் முதலில் பிறந்த குழந்தை இதுவே! இதனை அறிந்த முஸ்லிம்கள் அளவிலா மகிழ்ச்சி அடைந்தார்கள். ஆனந்த மிகுதியால் ஷஅல்லாஹூ அக்பர்| என்று முழங்கினார்கள்.
அஸ்மா (ரழி) அவர்கள் தம் குழந்தைக்கு அப்துல்லாஹ் எனப் பெயர் சூட்டி, அதனைத் தூக்கிக் கொண்டு அண்ணல் நபி (ஸல்) அவர்களின் திருச்சமூகம் வந்தார்கள். மாநபி (ஸல்) அவர்கள் மகிழ்வோடு குழந்தையை வாங்கி, மடியில் வைத்துக் கொண்டு ஒரு பேரீச்சம் பழத்தைத் தம் திருவாயில் இட்டு மென்று அதனைக் குழந்தைக்கு ஊட்டினார்கள். பிறகு குழந்தைக்காக நற்பாக்கியம் வேண்டி இறைவனிடம் பிரார்த்தனை செய்தார்கள்!
இந்தச் செய்தியைக் கேட்ட யூதர்கள் பொறாமைத் தீயில் வெந்தார்கள்.
ஏழை மணாளரின் மனைவி!
அஸ்மா (ரழி) அவர்கள் பிறந்து வளர்ந்த குடும்பமும் வாழ்க்கைப்பட்ட குடும்பமும் மக்கா நகரில் பெரும் செல்வாக்குப் பெற்ற, வளம் கொண்ட குடும்பங்களாய் இருந்தன. ஆம்! அவர்கள் மக்கா நகரின் பெருந்தலைவரின் (அபூபக்கர் (ரழி) அவர்களின்) மகள், மாபெரும் தலைமைக் கோத்திரத்தின் செல்வச் செழிப்புள்ள இளைஞரின் (ஜூபைர் (ரழி) அவர்களின்) மனைவி! குறைஷிகளிடையே மதிப்பு மரியாதை கொண்ட தலைவரான அப்துல் உஸ்ஸா என்பவரின் மகளார் கதீலா என்பவர்தான் அவர்களின் தாயார்!
ஆயினும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட குற்றத்திற்காக| மக்கத்து குறைஷிகளின் தயவினால்| எவ்வாறு பெரிய பெரிய மனிதர்களின் பொருளாதார நிலை பாழாக்கப்பட்டதோ - அவ்வாறே அஸ்மா (ரழி) அவர்களின் கணவர் ஜூபைர் (ரழி) அவர்களும் எல்லாவற்றையும் இழக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. வறுமையின் கோரப் பிடிக்குள் தள்ளப்பட்டார்கள்!
ஜூபைர் (ரழி) அவர்கள் அப்போது 17 வயது இளைஞர். இஸ்லாத்தை தழுவியதற்காக முதலில் அவர்களுடைய குடும்பத்தினர் அவர்களை அடித்து உதைத்தார்கள். வீட்டில் அடைத்த வைத்தார்கள். அப்படியும் அவர்களின் பிடிவாதம்|தெளியவில்லை என்றானபோது அவர்களை வீட்டிலிருந்து விரட்டினார்கள். இறுதியில் ஜூபைர் (ரழி) அவர்கள் அபிசீனியா நோக்கி ஹிஜ்ரத் மேற்கொள்ள வேண்டியதாயிற்று!
செல்வம் கொழித்த குடும்பத்தின் இந்த ஏழை| மணாளருக்குத்தான் அஸ்மா (ரழி) அவர்கள் மணம் முடிக்கப்பட்டார்கள். அவர்கள் மனம் சோர்ந்திடவில்லை. ஏழை என்றாலும் பரவாயில்லை. அவர் ஓர் இறைநம்பிக்கையாளர் எனும் வகையில் மகிழ்வோடு அந்தத் திருமணத்தை அஸ்மா (ரழி) அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள்.
கொஞ்ச நாட்களுக்குப் பிறகு இருவரும் ஒருவர் பின் ஒருவராக ஹிஜ்ரத் மேற்கொண்டு மதீனாவுக்கு வந்தபோது கொஞ்சநஞ்சம் இருந்த பொருள்களும் மக்காவில் மாட்டிக் கொண்டன! இப்போது மதீனாவில் அவ்விருவருக்கும் அல்லாஹ்வின் பெயரைத் தவிர வேறு எந்தச் சொத்தும் இல்லை! ஒருசில நாட்களுக்குப் பிறகு அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஒரு சிறிய பேரீச்சந் தோட்டத்தை வழங்கினார்கள்!
மதீனாவில் ஆரம்ப காலத்தில் தாம் பட்ட கஷ்டங்களைப் பற்றிய ஒரு சித்திரத்தை அஸ்மா (ரழி) அவர்களே விளக்கிக் காட்டியுள்ளார்கள். அதனை அவர்களின் வாய்மொழியாகவே கேட்டால் நல்லது என்கின்றீர்களா? இதோ கூறுகின்றார்கள், கேளுங்கள்!
ஜூபைர் (ரழி) அவர்களுடன் எனக்குத் திருமணம் நடைபெற்ற நேரத்தில் அவரிடம் பணம் இல்லை, எந்தப் பணியாளும் இல்லை! வறுமை வயப்பட்டும் அளவு கடந்த துன்பத்திற்குள்ளானவராகவும் இருந்தார்கள். அவருக்கென உரியவை ஒரு குதிரையும் ஓர் ஒட்டகமும்தான்! மேலும் நானே அவற்றைக் கவனித்துக் கொள்ள வேண்டியதாயிற்று!
மதீனாவுக்கு வந்தபோது நபி (ஸல்) அவர்கள் பேரிச்சந் தோட்டமாக கொஞ்சம் நிலத்தை ஜூபைர் (ரழி) அவர்களுக்கு வழங்கினார்கள். அது மதீனாவிலிருந்து சுமார் ஒன்பது மைல் தொலைவில் இருந்தது! நான் தினமும் அங்கு சென்று பேரீச்சங் கொட்டைகளை பொறுக்கி, ஒன்று சேர்த்து மூட்டையாகக் கட்டி தலையில் சுமந்து கொண்டு வருவேன். வீட்டிற்கு வந்து அவற்றை எனது கையாலேயே உடைத்து ஒட்டகத்திற்கு தீனியாகப் போடுவேன். வாளியினால் தண்ணீர் இறைத்து நிரப்புவேன். மேலும் வீட்டின் எல்லா வேலைகளையும் நானே செய்து கொண்டிருந்தேன். எனக்கு நல்லவிதமாக ரொட்டி சமைக்கத் தெரியாது. ஆகையால் மாவைப் பிசைந்து மட்டும் வைத்துவிடுவேன். எனது வீட்டுக்கு அருகில் அன்ஸாரிப் பெண்கள் சிலர் வசித்தார்கள். அவர்கள் வந்து அன்புடனும் பாசத்துடனும் ரொட்டிகள் சமைத்துத் தந்து கொண்டிருந்தார்கள்!'
தினமும் இத்தகைய சிரமங்கள் எனக்கு நேர்ந்து கொண்டிருந்தன. ஒருநாள் தோட்டத்திலிருந்து பேரீச்சங் கொட்டைகளை மூட்டை கட்டி சுமந்து வந்து கொண்டிருந்தேன். வழியில் நபி (ஸல்) அவர்கள் சந்தித்தார்கள். அவர்கள் ஒட்டகத்தின் மீது இருந்தார்கள். அவர்களின் தோழர்கள் சிலரும் அவர்களுடன் வந்தார்கள்.
இவ்வாறு சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் என்னை நபியவர்கள் கண்டபோது என் மீது இரக்கப்பட்டு - ஒட்டகத்தைப் படுக்கச் செய்தார்கள். நானும் அதில் ஏறி அவர்களுக்குப் பின்னே அமர்ந்து செல்வதற்காக! ஆனால் நான் வெட்கத்தின் காரணத்தால் அதில் பயணமாகவில்லை!
இந்த நிகழ்ச்சிக்கு சில நாட்களுக்குப் பிறகு என் தந்தையார் அபூபக்கர் (ரழி) அவர்கள் எனக்கு ஒரு பணியாளைக் கொடுத்து உதவினார்கள். அதனால்; எனது சிரமம் பெருமளவு குறைந்து விட்டது.'
அபூபக்கர் (ரழி) அவர்கள் ஒரு பணியாளை நியமித்தபோது அஸ்மா (ரழி) அவர்கள் தமக்கு அரியாசனமே கிடைத்துவிட்டது போன்றுதான் உணர்ந்தார்கள்! அப்படியெனில் அவர்கள் அன்றாடம் எந்த அளவுக்கு சிரமப்பட்டு உழைத்து வாழ்நாளைக் கழித்துக் கொண்டிருந்திருப்பார்கள் என்பதைப் பாருங்கள்!
இத்தகைய ஏழ்மையின் காரணத்தால்தான் அஸ்மா (ரழி) அவர்கள் வீட்டின் தேவைகளுக்காக மிகவும் இறுக்கிப் பிடித்துச் சிக்கனமாகச் செலவு செய்து கொண்டிருந்தார்கள். மிதமிஞசிய கடும் சிக்கனப் போக்கினை ஒருநாள் நபி (ஸல்) அவர்கள் கண்டித்தார்கள். 'இவ்வாறு ஒவ்வொன்றையும் அளந்து நிறுத்திப் பார்த்து - கஞ்சத்தனம் செய்து கொண்டு இருக்காதீர்கள். அப்படிச் செய்தால் அல்லாஹ்வும் அந்த அளவுக்கே வழங்குவான்' என்று அறிவுரை பகர்ந்தார்கள்.
வறுமைப்பட்ட கணவருக்கு வாழ்க்கைப்பட்டோமே, இப்போது ஏழ்மையோடு எதிர்நீச்சல் போடவேண்டியதுள்ளதே| என்று மனம் வெதும்பி விதியை நொந்து கொண்டிருக்கும் பெண்மணிகளே, கண்மணி அஸ்மா (ரழி) அவர்களின் மீதி வரலாற்றையும் கேளுங்கள்!
அஸ்மா (ரழி) அவர்கள் துன்பங்கள் எதிர்ப்பட்ட அத்தனை சந்தர்ப்பங்களிலும் கொஞ்சமும் பொறுமையை கைவிட்டார்களில்லை! பதறிப் பரிதவிக்கவில்லை! நிராசை அடைந்து விதியை நொந்து கொள்ளவில்லை! விளைவு? அத்தகைய பொறுமைக்கான பலன் கைமேல் கிடைத்தது! ஆம்! அஸ்மா (ரழி) அவர்களை வளமான வாழ்வு தேடி வந்தது! அவர்கள் தனவந்தர் ஆனார்கள்! அவர் மீதும் அவரின் கணவர் மீதும் அல்லாஹ்வின் அருட்கொடைகள் கொட்டின. ஜூபைர் (ரழி) அவர்களுக்கு வியாபாராத்தில் நிறைய இலாபம் கிடைத்தது. இறைவன் அவர்களின் வாழ்கையை வளப்படுத்தினான்!
அவர்களுடைய வாழ்கையின் இலக்கணம் இதுதான்!
அஸ்மா (ரழி) அவர்களின் குடும்பம் எண்ணற்ற கஷ்ட - நஷ்டங்களையும் துன்ப துயரங்களையும் பொறுமையோடு தாங்கி வந்த பிறகு இப்போது பொருளாதாரத் துறையில் பிரமிக்கத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளதெனில் அது எப்படிச் சாத்தியமாயிற்று? தவறான வழி சம்பாத்தியமா? இல்லை! அவர்களின் கணவர் ஜூபைர் (ரழி) அவர்கள், 'நான் நபி (ஸல்) அவர்களின் உயிர்த் தோழர் மட்டுமல்ல, அவர்களின் நெருங்கிய இரத்த பந்தமுடைய - புனிதமான உறவு முறையுடைய குடும்பத்தைச் சார்ந்தவனும் ஆவேன்' என்று மக்களிடம் பிரபலப்படுத்திக் கொண்டு, பணம் வசூலித்துப் பணக்காரர் ஆனாரா? இல்லவே இல்லை! நீதி நேர்மையையும் கடினமான உழைப்பையும் அஸ்திவாரமாகக் கொண்ட வாணிபத்தின் வாயிலாக செல்வம் ஈட்டினார்கள்! நபித் தோழர்களில் அப்துல் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) அவர்களைப் போன்றவர்கள் எப்படி வியாபாரம் செய்து இலட்சாதிபதி ஆனார்களோ அப்படித்தான் ஜூபைர் (ரழி) அவர்களும் சம்பாதித்தார்கள்!
முஸ்லிம்கள் வாழ்ந்த வாழ்கையின் இலக்கணம் இதுதான். அவர்களின் வாழ்கையை கடின உழைப்பும் முயற்சியும் அலங்கரித்துக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் இறையச்சமும் நீதி தவறாத் நெஞ்சுரமும் அதற்குத் தூய்மையையும் புனிதத் தன்மையையும் வழங்கிக் கொண்டிருக்கும்.
இதன் காரணமாகத்தான் ஜூபைர் (ரழி) - அஸ்மா (ரழி) தம்பதிகளிடத்தில் ஆணவமோ அகங்காரமோ பிறரை இழிவாய் கருதும் மனநிலையோ எள்ளவும் காணப்படவில்லை! மரியாதைக்குரிய அஸ்மா (ரழி) அவர்கள் ஏழ்மையின்போது கடைப்பிடித்த பொறுமையையும் எழிமையையும் இப்போதும் கடைப்பிடித்தார்கள்! முரட்டு ஆடைகளை அணிபவராகவும் காய்ந்த ரொட்டிகளை உண்பவராகவும்தான் இருந்தார்கள்!
ஒருபோது அவர்களின் மகன் முன்திர் இப்னு ஜூபைர் (ரழி) அவர்கள் ஈராக்கின் போரிலிருந்து திரும்பி வரும்போது தம் தாயாருக்காக மிகவும் விலை உயர்ந்த மெல்லிய - மென்மையான சேலைகளை வாங்கி வந்தார். அவற்றைத் தம் தாயாரிடம் அவர் கொடுத்தபோது, அச்சேலைகளின் பளபளப்பையும் மென்மையையும் பார்த்த அஸ்மா (ரழி) அவர்கள், 'நான் இதுபோன்ற மெல்லிய சேலைகளை அணிவதில்லை' என்று சொல்லி திருப்பிக் கொடுத்து விட்டார்கள்!
ஆம்! அஸ்மா (ரழி) அவர்கள் வறுமையின் காரணத்தால் பல மைல்களுக்கு அப்பாலிருந்து பேரீச்சங் கொட்டைகளைச் சுமந்து... அன்று பட்ட கஷ்டங்களின் பாடங்களை| மனத்தில் பசுமையாக்கிக் கொண்டிருந்ததால் இன்று பெருமைக்கு ஆளாகவில்லை! பகட்டையும் பளபளப்பையும் விரும்பவில்லை!
ஆனால் ஒரு கேள்வி எழலாம். செல்வ நிலை ஏற்பட்ட பிறகும் அஸ்மா (ரழி) அவர்கள் முரட்டு ஆடைகளை உபயோகித்துக் கொண்டு ஏழ்மைக் கோலத்தில் வாழ்ந்தார்களெனில், பழைய கருமித்தனத்தை| இன்னும் கைவிட்டார்களில்லை என்றுதானே பொருள்?
இல்லை! அஸ்மா (ரழி) அவர்கள் தயாள குணமும் தாராள மனப்பான்மையும் பெற்றிருந்தார்கள். அல்லாஹ் வழங்கிய செல்வத்திலிருந்து ஏழை எழியவருக்கு ஈந்து மகிழும் நிலையை அடைந்தார்கள். அவர்கள் தம்முடைய பிள்ளைகளுக்கு வழங்கிய அறிவுரையைப் பாருங்கள்.
பிறருக்கு உதவி செய்வதற்காகவும் அவர்களின் தேவைகளை நிறைவு செய்வதற்காகவும்தான் இறைவன் செல்வத்தை வழங்குகிறானே தவிர, சேமித்து வைப்பதற்காக அல்ல! ஆகையால் அல்லாஹ்வின் அடிமைகளுக்கு உதவுங்கள்! உங்கள் செல்வத்திலிருந்து அல்லாஹ்வின் அடிமைகளுக்கு நீங்கள் உதவிடவில்லை யானால் அது கஞ்சத்தனம் ஆகும்! அப்போது அல்லாஹ்வும் தனது அருளையும் கருணையையும் உங்களுக்கு வழங்காது போய்விடுவான். நீங்கள் தான தர்மங்கள் செய்வீர்களாயின் உண்மையில் அதுவே உங்களுக்கான சிறந்ததொரு பொக்கிஷமாகும். அது என்றைக்கும் குறைந்து விடாது. மேலும் அது வீணாகிப் போய்விடும் என்று அச்சப்பட வேண்டியதில்லை.'
இது போன்ற அறிவுரைகளை வழங்கிய அதே நேரத்தில் செயல் ரீதியில் அவற்றை நடைமுறைப்படுத்தியும் காட்டினார்கள் அஸ்மா (ரழி) அவர்கள்! அவர்களின் மகனார் அப்துல்லாஹ் இப்னு ஜூபைர் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். 'என் தாயார் மற்றும் சிறிய தாயார் ஆயிஷா (ரழி) அவர்கள் இருவரை விடவும் அதிகமாக கொடை வழங்குபவர் எவரையும் நான் கண்டதில்லை. கொடை வழங்கும் முறை அவ்விருவரிடமும் மாறுபட்டிருந்தது. ஆயிஷா (ரழி) அவர்களின் முறை என்னவெனில், அவர்கள் தமது வருவாயைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து வைப்பார்கள். கடைசியில் கணிசமான அளவு சேர்ந்ததும் தேவைப்பட்டோருக்கு பங்கிட்டு அளித்து விடுவார்கள். ஆனால் அஸ்மா (ரழி) அவர்களின் முறை இதற்கு மாற்றமாக இருந்தது. அவர்கள் நாளொன்றுக்கு எதையும் சேமித்து வைப்பதில்லை. எது மிஞ்சினாலும் அதே நேரத்தில் பங்கிட்டு கொடுத்து விடுவார்கள்.'
பிற்காலத்தில் - அவர்களின் சகோதரி ஆயிஷா (ரழி) அவர்கள் மரணம் அடைந்தபோது ஒரு நிலத்தைத் தமது சொத்தாக விட்டுச் சென்றார்கள். அதற்கு அஸ்மா (ரழி) அவர்களைத் தவிர வேறு வாரிசுகள் யாரும் இல்லை. ஆகையால் அந்த பூமி அவர்களுக்கே கிடைத்தது! அதனை விற்றுக் கிடைத்த சுமார் ஒரு இலட்சம் திர்ஹம் முழுவதையும் தம்முடைய உறவினர்களில் தேவைப்பட்டோருக்குப் பங்கிட்டு கொடுத்து விட்டார்கள்!
இப்படிக் கணக்கின்றி வழங்கும் கரமுடையவர்களாய் அஸ்மா (ரழி) அவர்கள் திகழ்ந்தார்கள். ஆனால் அவர்களின் கணவர் ஜூபைர் (ரழி) அவர்களின் இயல்பில் கொஞ்சம் கடுமை இருந்தது. ஆகையால், அஸ்மா (ரழி) அவர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் ஒருமுறை கேட்டார்கள்.
அல்லாஹ்வின் தூதரே! என் கணவரின் சொத்திலிருந்து அவரின் அனுமதி இன்றி - அநாதைகளுக்கும் ஏழைகளுக்கும் கொடுத்து உதவலாமா?'
நபியவர்கள், 'ஆம்! கொடுக்கலாம்' என்றார்கள்.
சுவரின் நிழலும் சிறு வியாபாரியும்
அஸ்மா (ரழி) அவர்கள் இத்தகைய தாராளத்துடன் நடந்து கொண்டாலும் - வீடு வாசல்களைப் பேணுவதில் கண்ணும் கருத்துமாக இருந்தார்கள். எவ்வளவு சிறிய பிரச்சனையானாலும் அவருடைய அனுமதி பெற்றே செய்யவேண்டும் என்ற பொறுப்புணர்வு கொண்டிருந்தார்கள்!
ஒரு தடவை வீட்டில் ஜூபைர் (ரழி) அவர்கள் இல்லாதபோது ஏழை வியாபாரி ஒருவர் வந்து அஸ்மா (ரழி) அவர்களிடம் உதவி வேண்டி நிற்கின்றார். 'உங்கள் வீட்டுச் சுவரின் நிழலில் பொருட்களை வைத்து விற்பதற்கு அனுமதி தாருங்கள்' என்று கோரினார்.
அஸ்மா (ரழி) அவர்கள் கூறினார்கள்.
நான் அனமதி வழங்கிவிடுவேன் ஆனால் ஜூபைர் (ரழி) அவர்கள் வந்து மறுத்து விடுவார்களாயின் பெரிய சிக்கலாய் போய்விடும். ஆகையால் வீட்டில் அவர்கள் இருக்கும்போது வந்து கேளுங்கள்!'
ஜூபைர் (ரழி) அவர்கள் வீடு திரும்பியபோது மீண்டும் அந்த வியாபாரி வீட்டு வாசலில் வந்து நின்றுகொண்டு தனது கோரிக்கையை வத்தார்.
அப்துல்லாஹ்வின் தாயார் அவர்களே! நான் ஓர் ஏழை. அன்றாடம் சில பொருட்களை விற்றுத்தான் பிழைக்கின்றேன். உங்கள் வீட்டுச் சுவரின் நிழலில் அமர்ந்து வியாபாரம் செய்ய விரும்புகிறேன். தயை கூர்ந்து அனுமதி தாருங்கள்.'
அஸ்மா (ரழி) அவர்கள் 'எனது வீட்டை விட்டால் மதீனாவில் உமக்கு வேறு வீடு கிடைக்கவில்லையா?' என்று அதட்டுவது போன்று கேட்டார்கள்.
இந்தப் பதிலைக் கேட்டுக்கொண்டிருந்த ஜூபைர் (ரழி) அவர்கள், 'உனக்கு என்ன நேர்ந்துவிட்டது? ஓர் ஏழை வியாபாரம் செய்வதைத் தடுக்கின்றாயே?' என்று தம் மனைவியைக் கண்டித்தார்கள்!
உடனே அஸ்மா (ரழி) அவர்கள் அனுமதி வழங்கிவிட்டார்கள். அதைத்தானே அவர்கள் எதிர்பார்த்தார்கள்!
தாயின் பாசமும் இறைவசனமும்.
ஓரிறைக் கொள்கையிலும் அதன் கோட்பாடுகளிலும் அஸ்மா (ரழி) அவர்கள் உறுதியுடன் இருந்தார்கள். இறைவனை நிராகரிக்கும் போக்கும், கண்ட கண்ட பொருள்களையெல்லாம் கடவுளாகக் கருதி அவற்றை வணங்கி வழிபடுவதும் அவர்களுக்கு அறவே பிடிக்காது! எந்த அளவுக்கெனில். அப்படி வாழும் இணைவைப்பவர்களை அவர்கள் மிக நெருங்கிய உறவினர்களாயினும் சரியே, மிகக் கடுமையாக வெறுப்பவர்களாய் இருந்தார்கள்!
அன்றைய சமூகத்தில் பெரும்பாலான முஸ்லிம்களுக்கு ஒரு தர்மசங்கடமான சூழ்நிலை ஏற்பட்டிருந்தது. அவர்களுடைய நெருங்கிய உறவினர்களில் அல்லது தூரத்து உறவுமுறையுடையவர்களில் சிலர் அல்லது பலர் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாதிருந்தார்கள். அப்படி ஏற்றுக் கொள்ளாதவர்களில் சிலர் கடும் பகைவர்களாகி இஸ்லாத்தை அழிக்கும் கொடூரச் செயல்களிலும் ஈடுபட்டிருந்தனர்! இத்தகைய கடும் பகைவர்களுடன் எவ்விதத் தொடர்பும் நட்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று முஸ்லிம்களுக்குக் கட்டளையிடப்பட்டிருந்தது.
ஒருவர், இறைவன் மீதும் இஸ்லாத்தின் எதிரிகளிடமும் ஒரே நேரத்தில் நேசம் கொள்வது என்பது எப்படி சாத்தியமாகும்? நம்முடைய நெருங்கிய உறவினர்களாயிற்றே என்று அந்த எதிரிகள் மீதான அன்புக்கும் தன் உள்ளத்தில் இடம் அளித்து, அவர்களிடம் நேசம் பாராட்டி நெருங்கிப் பழகும் மனிதரை உண்மையான இறைநம்பிக்கையாளராக எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?
இந்நிலையில்தான் ஒருமுறை அஸ்மா (ரழி) அவர்களின் தாயார் கதீலா பின்த் அப்துல் உஸ்ஸா என்பவர் தம் மகளைப் பார்ப்பதற்காக மதீனா வருகின்றார். அவர் இணைவைப்புக் கொள்கையிலேயே இருந்தார். இஸ்லாத்தை பிடிவாதமாய் ஏற்றுக் கொள்ள மறுத்தார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தம் தாயாரைச் சந்திப்பதில் அஸ்மா (ரழி) அவர்களுக்கு அளவிலா மகிழ்ச்சிதான்! ஆர்வமிகுதியால் அவருடைய உள்ளம் துடிக்கின்றது. விழிகளில் பிரகாசம் மின்னிட இதழ்களில் புன்னகை மலர்ந்திட கரங்கள் கட்டித் தழுவத் துடிக்கின்றன.
பிறகு எண்ணிப் பார்க்கின்றார்கள்! அவருடைய தாயார் இணைவைப்புக் கொள்கையில இருக்கின்றார். தீனுடைய - இறைநெறியுடைய பிணைப்பு குடும்பப் பிணைப்பை விட சக்திவாய்ந்ததாகும். திருக்குர்ஆன் இப்படி அறிவுறுத்தியுள்ளது.
(நபியே) அல்லாஹ்வின் மீதும் மறுமைநாளின் மீதும் நம்பிக்கை கொண்ட மக்கள், அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் எவர்கள் விரோதித்துக் கொண்டார்களோ அவர்களை நேசிக்கக் கூடியவர்களாய் இருக்கக் காணமாட்டீர், அப்படிப்பட்டவர்கள் அவர்களின் தந்தையராகவோ மகன்களாகவோ சகோதரர்களாகளோ அவர்களுடைய குடும்பத்தினராகவோ இருந்தாலும் சரியே! (அல்குர்ஆன் 58:22)
அஸ்மா (ரழி) அவர்களின் உள்ளத்தில் இந்தக் கருத்துக்களெல்லாம் நிழலாடுகின்றன. உடனே கட்டித் தழுவத் துடித்த அவர்களின் கரங்கள் சோர்ந்து விடுகின்றன. கண்கள் பார்வையை தாழ்த்தி விடுகின்றன. அன்புடன் வரவேற்பதற்காக எழுந்த நாவு.. வாருங்கள்| என்று கூற மறுத்துவிட்டது!
என்னுடைய தாயார் நீண்ட நாட்களுக்கப் பிறகு என்னைக் காண வந்திருக்கின்றார். இறைவனை நிராகரித்துக் கொண்டுதான் இருக்கின்றார். அவரை நான் வரவேற்று உபசரிக்கலாமா? என்பதை இறைத்தூதரிடம் கேட்டுச்சொல்' என்று தன் சகோதரி ஆயிஷா (ரழி) அவர்களிடம் தூது அனுப்பினார்கள்.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் விளக்கம் அளித்தார்கள். 'ஆம்! உம்முடைய தாயாருடன் உறவு கொண்டு வாழுங்கள். அவரை வரவேற்று உபசரியுங்கள்' என்று கூறிவிட்டு பின் வரும் இறைவசனத்தை ஓதிக் காட்டினார்கள். 'எவர்கள் உங்களுடன் தீனின் - இறைநெறியின் விஷயத்தில் போரிடவில்லையோ மேலும் உங்களை உங்களின் இல்லங்களிலிருந்து வெளியேற்றவில்லையோ அவர்களுடன் நீங்கள் நல்ல முறையிலும் நீதத்துடனும் நடப்பதை விட்டும் அல்லாஹ் உங்களைத் தடுக்கவில்லை. திண்ணமாக அல்லாஹ் நீதி செலுத்துகின்றவர்களை நேசிக்கின்றான். ஆனால் எவர்கள் தீனின் விஷயத்தில் உங்களுடன் போரிட்டார்களோ - மேலும், உங்களை உங்களின் இல்லங்களிலிருந்து வெளியேற்றினார்களோ, அப்படி வெளியேற்றுவதில் பரஸ்பரம் உதவி செய்தார்களோ அவர்களுடன் நீங்கள் நட்புக் கொள்வதைத்தான் அல்லாஹ் தடுக்கின்றான். அத்தகையவர்களிடம் எவர்கள் நட்புக் கொள்கின்றார்களோ அவர்கள் அநீதியாளர்கள்தான். (அல்குர்ஆன் 60:8)
இத்தகைய நீண்ட வசனத் தொடரை ஓதிக்காட்டி மனிதர்களுக்கிடையிலான நல்ல உணர்வுகளில் இஸ்லாம் என்றைக்கும் குறுக்கீடு செய்யாது. மனத்தில் எழும் உயர்ந்த எண்ணங்களைக் கொன்று விடாது எனும் உண்மையை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அஸ்மா (ரழி) அவர்களுக்கு உணர்த்திய பிறகு, அவர்கள் தம்முடைய தாயாரை நல்ல முறையில் வரவேற்று அன்பளிப்புகளை ஏற்று உபசரித்தார்கள்!
அஸ்மா (ரழி) அவர்களின் வாழ்க்கையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நம் அனைவருக்கும் நல்லதொரு படிப்பினை இருக்கின்றது. கொள்கையில் மாறுபட்டிருக்கும் நம்முடைய உறவினர்களை விட்டு, கொள்கை மாறுபாட்டிற்காக மட்டும் நம்முடைய தொடர்பை துண்டித்துக் கொள்ளவேண்டிய அவசியம் இல்லை. அப்படிச் செய்வது தவறாகும். அதுவும் இஸ்லாத்தின் பக்கம் அழைப்பு விடுக்க வேண்டிய பொறுப்புடைய முஸ்லிம்கள் அப்படிச் செய்வது அறவே கூடாது. இரத்த பந்தமுடைய அனைத்து உறவினர்க்கும் அவர்களுக்குரிய உரிமைகளையும் கடமைகளையும் வழங்கத்தான் வேண்டும்.
ஆனால் நம்முடைய கொள்கைக்கு யார் கேடு விளைவிக்க முற்படுகின்றார்களோ, நம்முடைய உயிருக்கும் உடமைக்கும் இழப்பை ஏற்படுத்த முயல்கின்றார்களோ அத்தகையவர்களுடன் மட்டும்; அவர்கள் எவ்வளவுதான் நெருக்கமானவர்களாய் இருப்பினும் நட்பு ரீதியிலான தொடர்பை நீடிக்கச் செய்ய நமக்கு உரிமை இல்லை! இந்தத் தெளிவான கோட்பாட்டை அஸ்மா (ரழி)யின் வரலாறு நமக்க வழங்குகின்றது!
வீரம்
அஸ்மா (ரழி) அவர்கள் இவ்வாறு கொள்கையில் எஃகு போன்ற உறுதியும் பொறுமையும் பெற்றிருந்த அதே நேரத்தில் வீரத்திலும் சிறந்து விளங்கினார்கள். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மரணமைடந்த பிறகு ஒருமுறை அஸ்மா (ரழி) அவர்கள் தம்முடைய கணவர் மற்றும் மகனுடன் ஷாம் தேசத்தின் போர்க்களத்தில் பங்கு பெற்றார்கள் என்று ஓர் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும் மிகப் பயங்கரமாக நடைபெற்ற யர்மூக் யுத்தத்தில் பிற பெண்களுடன் சேர்ந்து தங்களுக்கே உரிய முக்கியமான போர்ப்பணிகளை ஆற்றியுள்ளார்கள்.
மதீனாவில் ஸயீத் இப்னு ஆஸ் (ரழி) அவர்கள் ஆளுநராக இருந்தபோது இரவு நேரங்களில் திருட்டும், கொள்ளையும் வழிப்பறியும் பரவலாக நடைபெற்று வந்தன. மக்களை பெரும் பீதியும் அச்சமும் ஆட்கொண்டிருந்தன. அப்போது அஸ்மா (ரழி) அவர்கள் தம்முடைய தலைக்கருகில் பட்டாக்கத்தியை வைத்துக் கொண்டுதான் இரவில் தூங்குவார்களாம். 'ஏன் இவ்வாறு செய்கின்றீர்கள்?' என்று மக்கள் கேட்டபோது, 'திருடனோ, கொள்ளைக்காரனோ என்னுடைய வீட்டுக்கு வந்தால் இந்தக் கத்தியினால் அவனுடைய வயிற்றைக் கிழித்து விடுவேன்' என்று பதிலளித்தார்கள்.
தாய், மகனுக்கு ஆற்றிய உரை
அன்னை அஸ்மா (ரழி) அவர்களின் வீர வரலாறு இத்துணை உறுதியான மனநிலையையும் வீர உணர்வையும் ஒரு பெண்மணி பெற்றிட முடியுமா என்ற சிந்தனையிலும் திகைப்பிலும் நம்மை ஆழ்த்திவிடுகின்றது! அவர்களுடைய மகனார் அப்துல்லாஹ் இப்னு ஜூபைர் (ரழி) அவர்களின் வீர மரணத்தின்போது சில நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அவற்றைக் கேள்விப்படும் ஒவ்வொருவரின் இதயத்திலும் அன்னை அஸ்மா (ரழி) அவர்களைப் பற்றிய மிக உயர்ந்த மரியாதையும் மதிப்பச்சமும் நிறைந்துவிடும் என்பது திண்ணம்! வரலாற்றுத் தொகுப்புகளில் பொன்னெழுத்துக்களால் பாதுகாக்கப்பட்டுவரும் அந்நிகழ்ச்சிகளைச் சுருக்கமாகக் காண்போம்.
வரலாறு சான்று வழங்குகிறது :- ஜூபைர் (ரழி) அவர்களின் குடும்பம் துணிவிலும் வீரத்திலும் தன்னிகரற்றுச் சிறந்து விளங்கும் குடும்பமாகும். புகழுக்குரிய இந்த வீரதீரப் பண்பு அக்குடும்பத்தின் முன்னோர்கள் - உறவினர்களிடமிருந்து பரம்பரை பரம்பரையாக தொடர்ந்து வரும் சிறப்பம்சமாகும்.
ஜூபைர் (ரழி) அவர்களுடைய ஆண் மக்களில் மிகச் சிறந்த வீரராகவும் துணிவுமிக்கவராகவும் விளங்கியவர் அப்துல்லாஹ் (ரழி) அவர்களாவர். அன்று ஹிஜ்ரத் சகாப்தத்தின் தொடக்கத்தில் முஹாஜிர்களுடைய எந்தக் குடும்பத்திலும் குழந்தை பிறக்காதிருந்த நிலையில் முதல் குழந்தையாக| அஸ்மா (ரழி) அவர்கள் வீட்டில் பிறந்து, அண்ணல் நபி (ஸல்) அவர்களின் சிறப்புக்குரிய பிரார்த்தனையைப் பெற்றவர் இவர்தான். எவருடைய பெயரைக் கேட்டதும் பனூஉமையாக்களின் கலீஃபாக்கள் அச்ச மேலீட்டால் இரவு முழுவதும் தூக்கம் வராமல் தவித்தார்களோ அவர் - ஜூபைரின் மகனாராகிய இந்த அப்துல்லாஹ்தான்!
இவருடைய தியாக வரலாறு என்ன?
அமீர் முஆவியா (ரழி) அவர்களுக்குப் பிறகு அவருடைய மகன் யஜீத் ஆட்சிக்கு வந்தார். கிலாஃபத் எனும் இறையாட்சித் தத்துவத்திற்கு எதிராக அவர் கலீஃபாவாக நியமிக்ப்பட்டதை முஸ்லிம் சமுதாயத்தினரில் எந்தத் தலைவரும் ஏற்றுக் கொள்ளவில்லை. யஜீதுக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளையும் அவர்களில் எவரும் மேற்கொள்ளத் துணிந்தார்களில்லை. ஆனால் இரு தலைவர்கள் மட்டுமே யஜீதுக்கு எதிராகக் குரல் எழுப்பினார்கள். செயல் ரீதியில் அவனுடன் மோதவும் செய்தார்கள். அவர்களில் ஒருவர் - கலீஃபா அலீ (ரழி) - ஃபாத்திமா (ரழி) தம்பதியினரின் மகனார் ஹூசைன் (ரழி) அவர்கள். மற்றொருவர்தான் ஜூபைர் (ரழி) - அஸ்மா (ரழி) தம்பதியினரின் வீரத்திருமகனாகிய அப்துல்லாஹ் (ரழி) அவர்கள்!
யஜீதின் படையினர் ஹுசைன் (ரழி) அவர்களின் எதிர்ப்பை சிலமணி நேரங்களில் முறியடித்து விட்டார்கள். ஆனால் அப்துல்லாஹ் இப்னு ஜூபைர் (ரழி) அவர்களை எளிதில் முறியடிக்க முடியவில்லை! உண்மை யாதெனில் பனூ உமையாக்கள், அப்துல்லாஹ் இப்னு ஜூபைர் (ரழி) அவர்களின் எதிர்ப்பைச் சமாளித்து - தங்களுடைய ஆட்சியதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ளப் பெரும் சிரத்தை எடுக்க வேண்டியதாயிருந்தது! ஆகையால் யுத்தங்களின் ஒரு நீண்ட தொடர் ஆரம்பமாகி, அப்துல்லாஹ் (ரழி) அவர்களின் வீரமரணத்துடன் முடிவுற்றது.
அப்துல்லாஹ் இப்னு ஜூபைர் (ரழி) அவர்களின் வீரமரண நிகழ்ச்சி, பல உன்னதமான படிப்பினைகளை தன்னுள் கொண்டுள்ளதாகும். ஆனால் இங்கே அஸ்மா (ரழி) அவர்களுடன் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளை மட்டும் விவரிக்கின்றோம். ஏனெனில் அவர்களுடைய வீரக்காவியத்தின் சில முன்மாதிரிகளை விளக்குவதுதானே நமது நோக்கம்!
அப்துல்லாஹ் இப்னு ஜூபைர் (ரழி) அவர்கள் தொடர்ந்து யஜீதை எதிர்த்துப் போராடி வந்தார்கள். யஜீதுக்குப் பிறகு மர்வான் என்பவர் கலீஃபா| ஆனார். இவரையும் மிகத்துணிவுடன் வெற்றிகரமாக எதிர்த்து வந்தார்கள். மர்வானுக்குப் பிறகு அப்துல் மலிக் ஆட்சிக்கு வந்தார். இவருக்கு மிகவும் அறிவுத்திறன் கொண்ட, திட்டமிட்டு செயல்படுத் சூட்சுமம் தெறிந்த ஓர் ஆளுநர் கிடைத்தார். ஹஜ்ஜாஜ் இப்னு யுசுஃப் என்று வரலாற்றில் பிரபலமாக அறியப்படும் ஆளுநர்தான். அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் (ரழி) அவர்கள் பெற்று வந்து செல்வாக்கையும் ஈட்டிவந்த ஆதரவுகளையும் குலைத்தார்!
அவரால் எவ்வாறு வெற்றியடைய முடிந்தது என்பது நமது தலைப்பை விட்டு தூரமான விஷயமாகும். உண்மையாதெனில், ஹஜ்ஜாஜ் தமது திட்டமிட்ட நடவடிக்கைகளின் மூலம் வெற்றிகளைப் பெற்றார். அப்துல்லாஹ் இப்னு ஜூபைர் (ரழி) அவர்களை அவர் எந்த அளவுக்கு அடக்கி ஒடுக்கினாரெனில் இறுதியில் அவர்கள் கஅபா ஆலயத்தினுள் அடைக்கலம் புகுந்து ஒளிந்திட நேரிட்டது!
ஹஜ்ஜாஜ் அதுமட்டுமா செய்தார்? அப்துல்லாஹ் இப்னு ஜூபைர் (ரழி) அவர்களை விட்டு அவர்களின் ஆதரவாளர்கள் கொஞ்சம் கொஞ்சமாக விலகுவதற்கும் பிறகு தன்னிடம் வந்து சேருவதற்கும் உரிய அனைத்து சூழ்ச்சிகளையும் மேற்கொண்டார். இறுதியில் உயிர்த்தியாகிகளாய் விளங்கிய, வாய்மையான வீரர்கள் ஒருசிலரே அவர்களுடன் இருந்தார்கள்.
இந்நிலையில் ஹஜ்ஜாஜை எதிர்த்து மேற்கொள்ளும் போர் எப்படி வந்து முடியும் என்பது அப்துல்லாஹ் இப்னு ஜூபைர் (ரழி) அவர்களுக்குப் புலப்பட்டது! அவர்கள் போர்க்கவசம் அணிந்து ஆயுதம் ஏந்திய வண்ணம் தம் தாயாரின் சமூகத்திற்கு வந்தார்கள். அவர்களைச் சந்தித்து விடைபெற்றுச் செல்வதற்காக! அது அவர்களது இறுதிச் சந்திப்பாகவும் இருந்தது.
அஸ்மா (ரழி) அவர்களுக்கு அப்போது 100வது வயது நெருங்கிக் கொண்டிருந்தது. அவர்கள் பார்வை மங்கிப்போய் விட்டிருந்தது. அவர்களின் பெருமைக்குரிய மகனார் எதிரே வந்து நின்றார். போரின் போக்கு எவ்வாறு உள்ளது என்பதையும் எதிர்ப்பட்டுள்ள நிலைமைகளையும் விவரித்துவிட்டு, இப்போது என்ன செய்யவேண்டும் என்று ஆலோசனை கோரினார் தாயாரிடம்!
மகனாரின் இந்தக் கேள்விக்கு சித்தீகுல் அக்பரின் மூத்த புதல்வி அளித்த பதில் வார்த்தைகளை வரலாறு பொன் எழுத்துக்களால் பதிவு செய்து வைத்துள்ளது. அவை இதோ :-
அன்பு மகனே! எது உனக்கு நன்மை அளிக்கக் கூடியது என்பதை நீயே நன்கு அறிவாய். நீ சத்தியத்தின் பக்கம்தான் இருக்கின்றாய் என்பதில் உனக்கு உறுதி இருந்தால், நீ நிலைகுலையாதிருக்க வேண்டும். நீ ஆண்மகனைப் போன்று போரிடு! உயிருக்கு அஞ்சி எவ்வித இழிவையும் சுமந்து கொள்ளாதே! வாளேந்திப் போரிட்டு கண்ணியமாக மரணிப்பது, இழிவுடன் இன்பமாய் வாழ்வதை விடச் சிறந்ததாகும். நீ வீரனாக மரணம் அடைந்தால் அப்போது நான் மகிழ்வேன். ஆனால் அழிந்து போகும் இந்த உலகை| வணங்கி வழிபடுவாயானால் உன்னை விடவும் கெட்டவன் வேறு யார் இருக்கமுடியும்? அதாவது, தானும் அழிந்து அல்லாஹ்வின் அடியார்களையும் அழிவில் சேர்க்கக் கூடிய அளவுக்கு கேடுகெட்டவன் அப்போது நீயாகத்தான் இருக்கமுடியும்! எனவே, நாம் மட்டும்தானே தன்னந்தனியாக எதிர்க்கின்றோம், ஆகவே இப்பொழுது கீழ்படிந்து செல்வதைத் தவிர வேறு வழி இல்லை என்று நீ கருதுவாயானால் - இவ்வாறு கருதுவது உன் சான்றோரின் போக்கு அல்ல! நீ எது வரையில் உயிர் வாழ்ந்திடுவாய்? என்றாவது ஒருநாள் மரணம் அடையத்தானே போகிறோம்! எனவே நற்பெயருடன் மரணமாகு, அப்பொழுதான் பெருமைப்படுவேன்!'
அன்னை அஸ்மா (ரழி) அவர்களின் இந்த வார்த்தைகளை மீண்டும் ஒரு முறை கவனமாய் படித்துப் பாருங்கள். இப்பொழுது போரில் இறங்குவதெனில், அது மரணத்தை வலிந்து அழைப்பதற்கு சமமாகும் என்பதையும் - தம்முடைய அன்பு மகனார் கண்ணெதிரிலேயே மரணப்படுகுழியில் விழப் போகின்றார் என்பதையும் அறிந்த ஒரு தாயார் அளித்த அறிவுரையாகும் இது!
அவருடைய மகனார் எப்படிப்பட்ட புகழுக்குச் சொந்தக்காரர்? அவருடைய கல்வி ஞானத்தையும் சிறப்பையும் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரழி) மற்றும் இப்னு உமர் (ரழி) போன்றோர்களே புகழ்ந்துள்ளார்கள்! அன்று வீரத்திற்கும் விவேகத்திற்கும் அவருக்கு நிகர் அவராகவே திகழ்ந்தார்! அப்படிப்பட்ட உயர் சிறப்புக்குரிய மகனார்...! ஆகா! தாயார் என்றால் இப்படி அன்றோ திகழ்ந்திட வேண்டும்!
அப்துல்லாஹ் இப்னு ஜூபைர் (ரழி) அவர்கள் தாயாரின் இத்தகைய துணிவான சொற்களைக் கேட்டதும் மனம் நெகிழ்ந்து பணிவுடன் வேண்டினார்கள்.
என் அன்புத் தாயே, ஷாம் தேசத்து மக்கள் என்னைக் கொன்று எனது உடலைப் பலவிதமாகக் கோரப்படுத்தி விடுவார்களோ எனும் அச்சம் எனக்கு உள்ளதே!||
மகனே, உன்னுடைய எண்ணம் சரிதான்! ஆனால் ஆட்டை அறுத்த பிறகு அதனுடைய தோலை உரிப்பதனாலோ அதன் சதைகளைக் கைமாவாகக் கொத்துவதனாலோ அதற்கு எந்த வேதனையும் ஏற்படாதே!||
உண்மையில் அப்துல்லாஹ் இப்னு ஜூபைர் (ரழி) அவர்கள் எதற்காக இவ்வாறு கேட்டார்களெனில் தம்மைக் கொன்று உடலைச் சிதைத்து விடுவார்களோ எனும் அச்சத்தினால் அல்ல, வயது முதிர்ந்த தமது தாய் எவ்வாறு இந்தத் துக்கத்தை தாங்கிக் கொள்கின்றார்கள் என்பதைப் பார்ப்பதற்காகத்தான்!
அப்துல்லாஹ் இப்னு ஜூபைர் (ரழி) அவர்கள் தம் தாயார் திருப்தியுடன் இருப்பதை அறிந்ததும் உடனே அவரின் கரங்களைப் பிடித்து முத்தமிட்டவாறு –
என் அன்புத் தாயே! நானும் இவ்வாறுதான் சிந்தித்துக் கொண்டிருக்கின்றேன். அதாவது சத்தியத்திற்கு எதிரில் இந்த உலகம் சாதாரணமானதுதான். மேலும் இஸ்லாத்திற்கும் அதன் கொள்கை கோட்பாடுகளுக்கும் உறுதியும் வலிமையும் சேர்ப்பதற்காகத்தான் இப்பணிகளையெல்லாம் நான் ஆற்றியுள்ளேன்!
இதன் பிறகு அப்துல்லாஹ் இப்னு ஜூபைர் (ரழி) அவர்கள் தம் தாயாருக்கு அந்தப் போரின் காரணங்களை விவரித்தார். மேலும் யஜீதுக்கு எதிராக தாம் மேற்கொண்ட போர் சத்தியத்தின் அடிப்படையிலானது என்பதை விளக்கினார். இறுதியில் பொறுமையைக் கடைப்பிடிக்குமாறு தம் அன்னையை வேண்டிக் கொண்டபோது அந்த வீரத்தாய் கூறினார் :-
மகனே, இன்'h அல்லாஹ் எனது பொறுமை மக்களுக்கு ஒரு முன் மாதிரியாக அமையும் என்று நான் எண்ணுகிறேன். நீ என் முன்னிலையில் சத்தியத்திற்காக உயிரை விடுகின்றாய் எனில் உனது தியாகம் எனக்கு நன்மை கிடைப்பதற்குக் காரணமாகவும் அமையும்! மேலும் நீ வெற்றி வெற்றி அடைந்தாலோ நான் பெருமகிழ்ச்சி அடைவேன். இப்போது அல்லாஹ்வின் பெயரை மொழிந்தவாறு புறப்படு, என்ன நடக்கிறது என்று பார்!||
இதனைக் கேட்டதும் அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் தம் தாயை கட்டித் தழுவினார்கள். அஸ்மா (ரழி) அவர்கள் பார்வை இழந்திருந்திருந்தார்கள். தம் அன்பு மகனை ஆரத் தழுவியபோது அவருடைய உடலின் மீது உருக்குக் கவசம் இருப்பதை கரங்கள் உணர்த்தின.
மகனே, யார் சத்தியத்திற்காக உயிரை தியாகம் செய்ய விரும்புகின்றார்களோ அவர்கள் கவசம் அணிந்து கொள்வதில்லை. எனவே அதனைக் கழற்றிவிடு. உடுப்பை வரிந்து கட்டிக்கொண்டு எதிரிகள் மீது தாக்குதல் தொடு!|| என்று அறிவுறுத்தினார்கள்!
அப்துல்லாஹ் இப்னு ஜூபைர் (ரழி) அவர்கள் அவ்விதமே செய்தார்கள். வீரத்துடன் போரில் குதித்து தியாக மரணத்தை மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டார்கள்!
பிறகு ஹஜ்ஜாஜ் என்ன செய்தார் தெரியுமா? அண்ணல் நபிகளாரின் அன்புத் தோழர் ஒருவரின் உடலை அவருடைய தாயாரிடம் ஒப்படைக்காமலும் முறையாக அடக்கம் செய்ய விடாமலும் கழுமரத்தில் கட்டித் தொங்கவிட உத்தரவிட்டு தான் புரிந்து வந்த கொடுமைகளின் பட்டியலில் இந்தக் கொடூரச் செயலையும் சேர்த்துக் கொண்டார்!
ஒரு கொடுங்கோலன் இனங்காட்டப்பட்டான்!
மறுநாள் அன்னை அஸ்மா (ரழி) அவர்கள் வேலைக்காரப் பெண்மணி ஒருவரின் துணையுடன் தம்முடைய அருமை மகனாரின் உடலைத் தேடி வந்தார்கள். உடல் கழுமரத்தில் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்தது. அபூபக்கர் சித்தீகின் மூத்த மகள் எஃகு போன்ற – ஏன் - அதனையும் விஞசும் அளவுக்கு மனத்திண்மை பெற்றிருந்தார். அப்பொழுது அவருடைய நாவு உச்சரித்த வார்த்தைகள் என்ன தெரியுமா?
இஸ்லாத்தின் இந்த மாவீரன் - தியாக மறவன் - இன்னும் குதிரையை விட்டு இறங்கவில்லையே!||
ஹஜ்ஜாஜ் இப்னு யுசுஃப் நல்ல பேச்சாற்றல் கொண்டவர். சொல் நயமும் கருத்து வளமும் செறிந்த அவருடைய சொற்பொழிவு மக்களிடம் நல்ல மதிப்பையும் புகழையும் பெற்றிருந்தது! அத்தகைய ஹஜ்ஜாஜிடம் அன்னை அஸ்மா (ரழி) அவர்களுடைய மனவேதனையையும் சோகத்தையும் உள்ளடக்கிய, ஆனால் வீரம் நிறைந்த இந்த வார்த்தைகள் எடுத்துச் சொல்லப்பட்டபோது அவர் கோபத்தால் தன் உதடுகளைக் கடிக்கலானார். நேராக அஸ்மா (ரழி) அவர்களிடம் வந்து ஒரு சொற்போரையே தொடங்கினார்.
உம்முடைய மகன் அப்துல்லாஹ் கஅபா ஆலயத்தினுள் உட்கார்ந்து கொண்டு இறைச் சட்டங்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கினாறெனில் அவருக்கு எவ்வளவு துணிச்சல்! ஆகையால்தான் அல்லாஹ் அவர் மீது இந்த வேதனையை இறக்கியுள்ளான்.||
நீ பொய் சொல்கின்றாய்! என்னுடைய மகன் இறைச் சட்டங்களுக்கு எதிராக செயல்படுபவன் அல்லன். அவன் நோன்பாளியாகவும், தஹஜ்ஜூத் -இரவுத் தொழுகை- தொழுபவனாகவும், பரிசுத்தவானாகவும், பக்திமானாகவும் திகழ்ந்தான்! தாய் தந்தையரின் சொல்லை மதித்து நடந்தான். ஆனால் கேள்! அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஒருபோது இவ்வாறு கூறியதை நான் கேட்டுள்ளேன். அதாவது ஸகீஃப் கோத்திரத்திலிருந்து இரண்டு மடையர்கள் தோன்றுவார்கள். முதலாமவன் பொய்யனாகவும், இரண்டாமவன் கொடுங்கோலனாகவும் இருப்பார்கள்|| - அதன்படி ஸகீஃப் குலத்தைச் சார்ந்த முக்தார்| எனும் பொய்யனை நான் பார்த்துவிட்டேன். மற்றொருவனாகிய கொடுங்கோலன் இப்பொழுது என் முன்னிலையில் நின்று கொண்டிருக்கிறான்.||
பளீரென சாட்டை கொண்டு தாக்குவது போன்று இந்தப் பதிலைக் கேட்டதும் ஹஜ்ஜாஜின் மனம் துடிதுடித்துப் போய்விட்டது. அவருடைய முகத்தில் இழிவும், கேவலமும் கூத்தாட தலையைத் தாழ்த்தியவாறு கொஞ்ச நேரம் மௌனமானார். நிலவிய நிசப்தத்தை சீக்கரமாகக் கலைத்துக் கொண்டு, உம்முடைய மகனுக்கு நான் நல்ல பாடம் புகட்டியிருக்கிறேன்,|| என்று பிதற்றினார்!
நீ என்னுடைய மகனின் உலக வாழ்க்கையைத்தான் பாழ்படுத்தினாய், பரவாயில்லை! ஆனால் என் மகனோ உனது மறுமை வாழ்வை பாழ்படுத்திவிட்டானே!
இந்த அழுத்தமான பதிலைக் கேட்டதும் ஹஜ்ஜாஜ் நிதானம் இழந்தார். உணர்ச்சி வசப்பட்ட நிலையில் அவருடைய நா உளறிக்கொட்டியது.
இரண்டு வார்களுடைய இந்தக் கிழவி மதியிழந்து போய்விட்டாள்
இந்தக் குத்தல் பேச்சைக் கேட்டதும் அஸ்மா (ரழி) அவர்கள் ஹஜ்ஜாஜை அதட்டியவாறு கூறினார்கள்.
அல்லாஹ்வின் நபியவர்கள் உண்மையைத்தான் உரைத்தார்கள். உண்மையில் எந்தக் கொடுங்கோலனைப் பற்றி நபியவர்கள் முன்னறிவிப்புச் செய்தார்களோ அந்தக் கொடுங்கோலன் நீதான். கொடுங்கோலனே, உனது ஆணவப் பேச்சுக்கு இதோ எனது பதில். ஆம், நான் இரண்டு வார்களை உடையவள்தான்! அல்லாஹ்வின் நபிதான் அவ்வாறு பெருமையாகக் கூறி என்னை அழைத்தார்கள். ஆனால் நீயோ நபியவர்கள் சூட்டிய அதே வார்த்தையைக் கூறி என்னை இழிவுபடுத்துகின்றாய்!||
ஹஜ்ஜாஜ் இதற்குப் பதில் ஏதும் கூறாமல் முகத்தைத் திருப்பிருக் கொண்டு போய்விட்டார்!
பிறகு கலீஃபா அப்துல் மலிகிடமிருந்து, அப்துல்லாஹ்வின் உடலை அவருடைய தாயாரிடம் ஒப்படைத்து விடவும்| எனும் கட்டளை வந்தது. அன்னாரது உடலின் ஒவ்வொரு பகுதியும் சிதைத்துக் கோரப்படுத்தப்பட்டிருந்தது!
வாழ்க்கையின் இறுதி நிலையை அடைந்து விட்டிருந்து அஸ்மா (ரழி) அவர்கள், நான் என்னுடைய வீரத்திருமகனின் உடலைப் பெற்று முறையாகக் குளிப்பாட்டி துணிபொதிந்து அடக்கம் செய்யாதவரை எனக்கு மரணம் வரக்கூடாது| என்று பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்கள்!
அவ்வாறே அவர்களின் பிரார்த்தனை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டது! சிதைக்கப்பட்டும் சிதைந்த நிலையிலும் இருந்த மகனாரின் உடலை – அதன் துயரமான காட்சியைக் கண்டபோதும் அஸ்மா (ரழி) அவர்களின் நாவு அல்லாஹ்வைப் புகழ்ந்து கொண்டிருந்ததெனில்.. அவர்களின் நெஞ்சுரத்தையும் நிதானமிழக்காத பொறுமையையும் வார்த்தைகளால் எப்படி வர்ணிக்க முடியும்!
உடல் மிகவும் கெட்டுப்போய் இருந்தபடியால் மிகவும் பேணுதலுடன் குளிப்பாட்டப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது!
மகனார் அடக்கப்பட்டு ஒரு வாரத்திற்குள் தாயாரும் ஏறக்குறைய 100வது வயதில் மக்கத்து திருநகரில் மரணமடைந்தார்கள்!
இதுதான் அஸ்மா (ரழி) அவர்களின் வீர வரலாறு! நபித் தோழியர்களுள் மிக நீண்டதோர் ஆயுள் காலத்தைப் பெற்றவர்கள் மிகச் சிலரே. அவர்களில் அன்னை அஸ்மா (ரழி) அவர்கள் மிகவும் முக்கியமானவர்கள். வரலாற்றில் நிகழ்ந்த எத்தனையோ ஏற்றத்தாழ்வுகளை அவர்கள் கண்டுள்ளார்கள். இஸ்லாத்திற்கு முரணான முந்திய அறியாமைக்கால வாழ்கை அமைப்பையும் கண்டார்கள். பிறகு அண்ணல் நபி (ஸல்) அவர்களின் நபித்துவ வாழ்வு முழுவதையும் - அடுத்து நேர்வழி பெற்ற கலீஃபாக்களின் பொற்கால ஆட்சியையும் காணும் நல்வாய்ப்பைப் பெற்றார்கள்.
மகத்தான சிறப்புடன் திகழ்ந்த தம்முடைய மகனார் அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் புகழின் சிகரத்தில் இருந்த காலகட்டத்தையும் பார்த்தார்கள். போரில் கொல்லப்பட்டு கொடூரமாக நடத்தப்பட்ட கோரக்காட்சியையும் பார்த்தார்கள். எண்ணற்ற துன்பங்கள் தொடர்ந்து வந்த ஒவ்வொரு காலகட்டத்திலும் இணையிலா உறுதியையும் இறைநம்பிக்கையையும் நிறைந்த பொறுமையையும் துணிவையும்தான் வெளிப்படுத்தினார்கள்.
உயர் பண்புகளையும் உன்னதப் படிப்பினைகளையும் கொண்டு முழு நிலவாய் ஒளிரும் அவர்களின் வாழ்க்கை முஸ்லிம்களுக்கும் பிற மக்களுக்கும் குறிப்பாக தீன் குலப் பெண்மணிகள் அனைவர்க்கும் என்றென்றும் வழிகாட்டும் ஒளி விளக்காய்த் திகழும்!
No comments:
Post a Comment