பிலால் (ரழி)
பிலால் (ரழி) அவர்கள் அபிஷீனிய நாட்டைச் சார்ந்த நீக்ரோ அடிமையாவார். சில பேரித்தம் பழங்களுக்கு அடிமையாய் இருந்தவர். பிலால் (ரழி) யின் எஜமான் உமைய்யா பின் கலஃப் என்பவன். இவன் பனு ஜுமஹ் வம்சத்தை சார்ந்தவன்.
பிலால் (ரழி) அவர்களின் தந்தைப் பெயர் ரபாஹ். தாயாரின் பெயர் ஹமாமா இவரும் அடிமையாய் இருந்தார்கள். அடிமையாயிருந்த பிலால் (ரழி) ஒட்டகம் மேய்த்துக் கொண்டிருந்தார். அன்றைய அரபு உலகில் புரையோடிப் போயிருந்த பல தெய்வக் கொள்கையிலும், புரோகிதத்திலும், தனிமனித வழிபாட்டிலும் திளைத்திருந்த மக்களிடம் நபி(ஸல்) அவர்கள் ஏகத்துவக் கொள்கையை எடுத்துரைத்த போது அதனை இதயப்பூர்வமாக ஏற்றுக்கொண்டவர்களில் பிலால் (ரழி) அவர்களும் ஒருவர். அபரிதமான இணைவைப்பாளர்களுக்கு இடையில் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் இருந்த ஏகத்துவத்தை ஏற்றுக் கொண்டோரின் நிலை பரிதாபகரமாக இருந்தது. இணைவைப்பாளர்களின் கொடுமைக்கும் சித்தரவதைக்கும் ஆளாயினர்.
ஏகத்துவக் கொள்கைளின் எதிரில் இணைவைப்பும், தனிமனித வழிபாட்டின் அனுஷ்டானங்களும் புரோகிதமும் தவிடு பொடியாவதைக் கண்டு வெகுண்ட மக்கத்து இணைவைப்பாளர்கள் ஏகத்துவத்தை ஏற்றுக் கொன்டோரைக் கொடுமைப் படுத்துவதில் சிறிதும் சளைக்கவில்லை. உமைய்யா பின் கலஃப் தன் அடிமையான பிலால்(ரழி) அவர்கள் மீது ஏகத்துவக் கொள்கையை ஏற்றுக்கொண்டதற்காக சினந்து தம்வம்சத்தாரின் துணையுடன் அவரை மிகவும் கொடுமைப் படுத்தினான். சுடும் பாலைவன மணலில் அவரை ஆடையின்றி கிடத்தி நெஞ்சில் பாறாங்கல்லை வைத்து பிலால் (ரழி) அவர்கள் சற்றும் அசைய முடியாதவாறு செய்து துன்புறுத்தினான். சித்தரவதையின் உச்சநிலையை உணர்ந்த போதும் பிலால் (ரழி) அவர்கள் தான் ஏற்றிருந்த ஏகத்துவ கொள்கையிலிருந்து எள் முனையும் மாறவில்லை அவர்களின் உடல் சித்தரவதையால் சின்னா பின்னப் படுத்தப்பட்டு கசையடி, அடி உதை என தண்டனைகள் அதிகரிக்கப்பட்டும் கூட ''அஹதுன் அஹதுன்' என்றே கூறினார்கள்.
இணைவைப்பாளர்களின் இத்தண்டனைகள் சித்தரவதைகள் யாவுமே பிலால் (ரழி) அவர்கள் கொண்டிருந்த ஏகத்துவக் கொள்கையை மேன்மேலும் உறுதிப் படுத்தவே உதவியது. அடிமையாய் இருந்து இவ்வாறு சித்தரவதைகளுக்கு ஆளாகிய பிலால் (ரழி) அவர்களை விடுதலை செய்ய எண்ணிய அபூபக்கர் (ரழி) அவர்கள் அவரின் எஜமானிடம் பிலால்(ரழி)அவர்களை விலைக்கு கேட்கிறார்கள். 10 தங்க காசுகளுக்கு பிலால் (ரழி) அவர்களை அபூபக்கர் (ரழி) அவர்களிடம் உமைய்யா விற்று விட்டு எக்காளத்தில் கூறுகிறான் இவரை நீர் ஒரு தங்கக் காசுக்கு கேட்டிருந்தாலும் நான் விற்றிருப்பேன் எனக் கூறுகிறான். பிலால் (ரழி) அவர்களுக்காக வேண்டி நீ 1000 தங்கக் காசுகள் கேட்டிருந்தாலும் நான் தந்திருப்பேன் என அபூபக்கர்(ரழி) அவர்கள் அவனுக்கு பதில் அளித்தார்கள். பின்னர் பிலால்(ரழி) அவர்களை அபூபக்கர் (ரழி) அவர்கள் விடுதலை செய்தார்கள்.
மதினாவிற்கு இடம் பெயர்ந்தபின் நபி (ஸல்) அவர்களுடன் இருந்த பிலால்(ரழி)அவர்களின் நடைமுறைகள் நபிகளாரைக் கவர்ந்தன. மதீனா பள்ளியில் மக்களை தொழுகைக்கு அழைக்கும் பாங்கு கூறும் பணிக்கு நபி(ஸல்) அவர்கள் பிலால்(ரழி)யை நியமிக்கிறார்கள். அபிஷீனிய அடிமைக்கு இத்தனை பெரிய அந்தஸ்த்தா? என இணைவைப்பாளர்கள் எரிச்சலடைந்தனர். முதல் இமாம் நபி (ஸல்) முதல் முஅத்தீன் பிலால் (ரழி) என நாம் அறிகிறோம்.
பிலால் (ரழி) பத்ருப் போரில் பங்கெடுத்துக் கொண்ட சஹாபிகளில் ஒருவர். அப்போரில் இணைவைப்பாளனான உமைய்யாவை(முன்னாள் எஜமான்) பிலால் (ரழி) அவர்கள் கொன்றார்கள். மக்கா வெற்றி கொள்ளப் பட்டதும் அல்லாஹ்வின் ஆலயமாம் கஃபாவில் நபி(ஸல்) அவர்களுடன் நுழைந்த மூவரில் பிலால் (ரழி) அவர்களும் ஒருவர் அங்கிருந்த சிலைகளை அடித்து நொறுக்கி அப்புறப் படுத்திய பின்னர் முதன் முதலில் பாங்கோசையை முழங்கியவரும் அவரே. நபிகளாரின் மரணத்திற்குப் பின் அண்ணல் நபிகளின் மீது கொண்ட அளவு கடந்த பற்றினால் பாங்கு சொல்லும் போது அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் நினைவுக்கு வருவதை உணர்ந்த பிலால் (ரழி) பாங்கு கூற மறுக்கிறார்கள். தான் சிரியா சென்று ஜிஹாத் செய்யப்போவதாக அபூபக்கர் (ரழி) யிடம் சொல்கிறார்கள். அபூபக்கர் (ரழி) பிலால் (ரழி) அவர்களை பாங்கு கூறுமாறு உத்தரவிடுகிறார்கள். அதற்கு பிலால் (ரழி) அவர்கள் நீர் எம்மை அடிமைத் தளையிலிருந்து விடுவித்தது அல்லாஹ்வின் அருளை நாடியா? அல்லது உம் கட்டளைக்கு கீழ்படிய வேண்டியா? என்று வினவினார்கள். அபூபக்கர் (ரழி) அவர்கள் பிலால் (ரழி) அவர்களுக்கு சிரியா செல்ல அனுமதி தந்தார்கள். சிரியா சென்றடைந்த பிலால் (ரழி) அவர்களை உமர் (ரழி) அவர்கள் தன் ஆட்சி காலத்தில் அங்கு சென்று சந்தித்து பாங்கு கூறுமாறு கேட்டுக் கொண்டார்கள். பாங்கு கூறுகிறார்கள் பிலால் (ரழி) அவர்கள்.
பனுஜுஹ்ரா வம்சத்து பெண் ஒருவரையும் ஹிந்துல் கூலானிய்யா என்ற பெண்னையும் மணமுடித்திருந்த பிலால் (ரழி) அவர்களுக்கு குழந்தைகளேதுமில்லை. தம் 70 வது வயதில் சிரியாவின் தலை நகரான டமாஸ்கஸில் இயற்கை எய்தினார்கள். மிஃராஜ் சென்று திரும்பிய நபி(ஸல்) அவர்கள் பிலால் (ரழி) அவர்களிடம் சுவனத்தில் உமது காலடியோசையை நான் கேட்டேன். நீர் செய்யும் நல்லறம் எது? என நபிகளார் வினவியதற்கு நான் எப்பொழுது ஒலுச் செய்தாலும் உடனே 2 ரக்காஅத் தொழும் வழக்கமுடையவனாக இருக்கிறேன் என பதிலளித்தார்கள்.
படிப்பினை :
அல்லாஹ் அருள் மறையில் எங்கெல்லாம் ஈமான் கொள்வதைக் குறிப்பிடுகிறானோ அங்கெல்லாம் நல்லறங்கள் புரிவதையும் இணைத்தே கூறுகிறான்.
நான் எதை ஏவியுள்ளேனோ அதை இயன்றவரை செய்யுங்கள். நான் எதைத் தவிர்ந்து கொள்ளக் கூறினேனோ அதை முற்றிலுமாக விலக்கிக் கொள்ளுங்கள். எனும் நபி மொழிக் கேற்ப பிலால் (ரழி) அவர்களின் வாழ்வு குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் அமைந்திருந்தது. அவர்களின் வழியில் நாமும் செயல்பட்டு மறுமையில் வெற்றியடைய அல்லாஹ் அருள் புரிவானாக.
No comments:
Post a Comment