அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Tuesday, February 8, 2011

கப்ருக்குள்ளிருந்து பதில் வருமா?


மரணித்துப்போன நல்லடியார்கள் மகான்கள் என்பவர்களிடத்தில் உதவி தேடலாம் அவர்கள் கப்ருக்குள்ளே உயிரோடு இருக்கிறார்கள். பிராத்தனைகளுக்கு பதிலளிப்பார்கள் என்று கப்று வணக்கம் புரியும் சகோதரர்கள் வாதம் புரிகிறார்கள்.

மகான்களின் பெயரால் கப்ருகளை கட்டி புனிதப்படுத்தி பச்சைபோர்வை போர்த்தி ஊதுபத்தி பற்றவைத்து விளக்கேற்றி எண்ணெய் ஊற்றி அபிசேகம் பண்ணி வலம்வந்து சுஜூது செய்து தொட்டு முத்தமிட்டு முகத்தை தேய்த்து சாம்பளை வாயில் இட்டு எண்ணையை வாயிலும் நெற்றிலும் தடாவி கொண்டிருக்கிறார்கள். கொழும்பிலுள்ள தெவட கஹாதர்கா கப்ரு வணக்கத்திற்கு பெயர் போன இடம்!
மக்கள் தங்களது கஷ்ட நஷ்டங்களை முறையிடுவதற்கு அந்த கபுரடியில் ஒன்று கூடி தங்களது வேண்டுதல்களை முன்வைப்பார்கள். காரணம் அந்த மகான் கப்ரில் உயிரோடு இருக்கிறார். முன்வைக்கப்படும் கோரிக்கைகள் பிரார்த்தனைகளுக்கு பதிலளிப்பார் என்று நம்புகிறார்கள். திருமணம் முடித்த புதுதம்பதியினரும் தர்கா (கப்ருக்)கு வந்து நல்லாசி(!?) பெற்று செல்கிறார்கள்.
அது மட்டுமல்ல மாற்று மதத்தவர்களும் அங்கே வந்து பூஜிக்கும் காரியத்திலும் எண்ணை அபிஷேகத்திலும் அழுது பிரார்த்திக்கும் காரியத்திலும் ஈடுபடுகிறார்கள். நாட்டில் ஏதும் விசேஷம் என்றால் அல்லது அரசியல் தலைவர்களின் பிறந்த நாள் என்றால் அல்லது கோமாளிகளின் கொண்டாட்டம் என்றால் உடனே தர்காவுக்கு வந்து அபிசேகம் பண்ணுகிறார்கள். அதுமட்டுமல்லாமல் இவர்களுக்காக துஆ(?) மற்றும் யாஸீன் ஓதி பணம் வசூலிக்கும் கூட்டமும் தயாராக இருக்கிறது.
இவர்களுடைய நம்பிக்கை படி முஸ்லிமல்லாதவர்களுக்கும் யாஸீன் ஓதி அவ்லியாவிடம் உதவி தேடமுடியும். அந்த அவ்லியாவுக்கு மதம் அல்லது மாரக்கம் முக்கியமில்லை?அங்கேயுள்ள உண்டியில் நிரம்புவது தான் முக்கியம். அதிலுள்ளவர்களுக்கு பணம்தான் முக்கியம்!
ஈமானை பாலடிக்கும் இக்காரியங்களை மக்கள் நன்மையான நல்ல காரியங்கள் என்று நம்பி செயல்படுகிறார்கள்.

எந்த மனிதன் மரணித்தாலும் அவருக்கும் உலகிற்குமுள்ள தொடர்பு மரணத் தோடு முடிந்து விடுகிறது. அவர் மகானாக இருந்தாலும் சாதாரண மனிதராக இருந்தாலும் சரியே! இந்த அடிப்படையை மக்கள் புரிந்து கொள்ளும் நேரம் வந்தால் கபுரடியில் மண்டியிட்டு கிடக்கும் செயலை கண்டிப்பாக தவிர்ப்பார்கள். இந்த உண்மையை அல்லாஹ் பின்வருமாறு திருமறை குர்ஆன் வசனங்களில் கூறுகிறான்.
அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மை யாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! உங்களுக்கு பதில் தரட்டும். (7:194)
அல்லாஹ்வையன்றி யாரை அழைக்கிறார்களோ அவர்கள் எதையும் படைக்க மாட்டார்கள். அவர்களே படைக்கப்படுகின்றனர். அவர்கள் இறந்தவர்கள். உயிருடன் இருப்போர் அல்லர். எப்போது உயிர் பிக்கப்படுவார்கள் என்பதை அவர்கள் அறியமாட்டார்கள்.(16:20-21)
(நபியே!) அல்லாஹ்வையன்றி உமக்குப் பயனும், தீங்கும் தராதவற்றைப் பிரார்த்திக்காதீர் (அவ்வாறு) நீர் செய்தால் அநீதி இழைத்தவராவீர். அல்லாஹ் உமக்கு ஒரு தீங்கை அளித்தால் அவனைத்தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. உமக்கு அவன் ஒரு நன்மையை நாடினால் அவனது அருளைத் தடுப்பவன் யாரும் கிடையாது. (10:106-107)
உண்மையான பிரார்த்தனை அல்லாஹ் வுக்கு உரியது அவனையின்றி இவர்கள் யாரைப் பிரார்த்திக்கிறார்களோ அவர்கள் சிறிதளவும் இவர்களுக்குப் பதிலளிக்க மாட்டார்கள். தண்ணீர் (தானாக) வாய்க்குள் செல்ல வேண்டும் என்பதற்காக இரு கைகளையும் அதை நோக்கி விரித்து வைத்துக் கொள்பவனைப் போலவே அவர் கள் உள்ளனர். அது (தானாக) அவனது வாய்க்குள் செல்லாது (ஏக இறைவனை) மறுப்போரின் பிரார்த்தனை வீணாகவே இருக்கும். (13:14)
அவர்களையும் அல்லாஹ்வையன்றி அவர்கள் வணங்கியவற்றையும் அவன் (அல்லாஹ்) ஒன்று திரட்டும் (மறுமை) நாளில் எனது அடியார்களை நீங்கள்தான் வழிகெடுத்தீர்களா? அவர்களாக வழிகெட் டார்களா? என்று கேட்பான்.
(அதற்கு அவர்கள் யாஅல்லாஹ்!) நீ தூயவன். உன்னையன்றி அவ்லியாக் களை ஏற்படுத்துவது எங்களுக்குத் தகாது. நீ அவர்களுக்கும் அவர்களின் முன்னோர்களுக்கும் வசதிகளை அளித்தாய். (உன்னை) நினைக்க மறந்தனர். (இவர்கள்) அழிந்துபோகும் கூட்டமாக ஆகி விட்டனர் என்று அவர்கள் கூறுவார்கள். (25:17-18)
நீங்கள் அவர்களை அழைத்தால் உங் கள் அழைப்பை அவர்கள் செவியேற்க மாட்டார்கள். செவியேற்றார்கள் என்று வைத்துக் கொண்டாலும் உங்களுக்கு பதில் தரமாட்டார்கள். கியாமத்து நாளில் நீங்கள் இணைகற்பித்ததைஅவர்கள் மறுத்து விடுவார்கள். நன்கறிந்தவனைப் போல் உமக்கு எவரும் அறிவிக்க முடியாது. (35:14)
அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் பூமியில் எதைப் படைத்தனர் என்று எனக்குக் காட்டுங்கள் அல்லது வானங்களில் அவர்களுக்குப் பங்கு உண்டா? என்பதற்குப் பதில் சொல்லுங்கள். நீங்கள் உண்மையானவர்களாக இருந்தால் இதற்கு முன் சென்ற வேதத்தையோ அறிவுச் சான்றையோ என்னிடம் கொண்டு வாருங்கள் என்று நபியே கேட்பீராக.
கியாமத் நாள் வரை தமக்குப் பதில்தராத அல்லாஹ் அல்லாதோரை அழைப்பவரை விட மிகவும் வழிகெட்டவர் யார்? அவர்களோ தம்மை அழைப்பது பற்றி அறியாது உள்ளனர்.
மக்கள் ஒன்று திரட்டப்படும்போது அவர்கள் இவர்களுக்குப் பகைவர்களாக ஆவா ர்கள். இவர்கள் தம்மை வணங்கியதையும் மறுப்பார்கள். (46:4-6)

மரணித்துப்போன மனிதர்கள் அல்லது நல்லடியார்கள் மகான்கள் என்று சொல்லப்படக் கூடியவர்கள் கப்ரில் உயிரோடு இல்லை. நீங்கள் அவர்களை பிரார்தித்து அழைத்தாலும் பதில் தரமாட்டார்கள். நாளை மறுமையில் மகான்கள் என்று சொல்லப்படக் கூடிய அவர்களையும் அவர்களை அழைத்து பிரார்த்தித்தவர்களையும் அல்லாஹ் ஒன்று திரட்டி அல்லாஹ்வை விட்டு விட்டு உங்களிடம் பிரார்த்திக்கச் சொன்னீர்களா? என்று விசாரிப்பான். ஆனால், அவர்களோ நாங்கள் அப்படிச் சொல்லவில்லை. எங்களுக்கும் அவர்களது காரியங்களுக்கும் எந்த தொடர்புமில்லை என்று கூறுவார்கள் என்று அல்லாஹ் கூறுகிறான். பல முறை இந்தக் குர்ஆன் வசனங்களை அமைதியாக படித்துப் பாருங்கள்.

ஒளியும் இருளும் சமமாக மாட்டாது
குருடனும் பார்வையுடையவனும் சமமாக மாட்டான்
உறங்குபவனும் விழித்திருப்பவனும் சமமாக மாட்டான்.
மரனித்தவரும் உயிருடன் உள்ளவரும் சமமாக மாட்டார்கள் (35;22)

மரனித்தவர்கள் அவர்களது செயலின் முடிவின் பால் சென்று விட்டார்கள். நல்லவர்களாக சாலிஹானவர்களாக வாழ்ந்தால்; புது மணமகன் தூங்கவது போல் கப்றில் உறங்கு என்ற நற் செய்தியுடன் உறங்குவார் என நபி (ஸல்) அவர்கள் தெளிவுப்படுத்துகிறாரகள்.
எனவே உயிருடன் இருப்பவர்கள் தாங்;கள் புரியும் செயல்களை நன்மையானதாக்கி வாழவேண்டியவர்களாக இருக்கிறார்கள்.
இதனை புரிந்து கொண்டால் உண்மையை விரைவாக புரிந்து கொள்ளலாம்.
மேலும் அல்லாஹ்விடம் தங்களது கஷ்ட துன்பங்களை முறையிட்டு பிராத்திக்காத வர்களை வழிகேடர்கள் என்று அல்லாஹ் கண்டிக்கிறான். வழிகேடர்கள் நரகத்திற்குரியவர்கள் என்று மேலும் பல குர்ஆன் வசனங்களில் அல்லாஹ் கண்டிக்கிறான்.
எனவே அன்புக்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! மரணித்துப் போனவர்க ளின் கப்ரடியில் மண்டியிட்டு கிடக்காமல் மண்ணறைக்கு சென்று அங்கு அடக்கம் செய்யப்பட்டவர்களுக்காக துஆ செய்யுங்கள். மரணத்தை நினையுங்கள். அடக்கம் செய்யப்பட்டவர்களிடம் மன்றாடாதீர்கள். அல்லாஹ் ஒருபோதும் மரணித்துவிடுபவனுமல்ல. தன் காரியத்தை இன்னுமொருவரிடம் கொடுத்து விட்டு ஓய்வெடுப்பவனுமல்ல.
உங்களை படைத்து இருபத்தி நான்கு மணித்தியாலங்களும் உங்களை கண்காணித்துக் கொண்டு உங்கள் பிரார்த்தனைகளுக்கு பதிலனித்துக் கொண்டும் என்றும் உயிரோடு இருக்கும் அல்லாஹ்விடம் கேளுங்கள் அவனிடமே சரணடையுங்கள். ஈமானைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
இந்த கட்டுரையை எழுதியவர்:---உஸ்தாத் இம்தியாஸ் ஸலபி

No comments: