இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை ஹஷ்ரோன் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறைச்சாலையில் உள்ள நான்கு பலஸ்தீன் பெண் கைதிகளை 'சோதனையிடல்' என்ற பெயரில் நிர்வாணமாக்கி அவமானப்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பலஸ்தீன் பெண்கள் அஹ்ரார் சிறைக் கைதிகளுக்கான கற்கைகள் மற்றும் மனித உரிமைகள் அமைப்பிடம் தமக்கு நேர்ந்த அநீதியைப் பற்றி முறையிட்டுள்ளனர்.
இப் பெண் கைதிகளில் ஒருவரிடம் கைத்தொலைபேசி ஒன்று இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் சோதனையிடுவதாகக் கூறிய ஆக்கிரமிப்புக் காவலர்கள், பலஸ்தீன் பெண் கைதிகளை நிர்வாணப்படுத்தியுள்ளனர். இதன்போது சம்பவ இடத்தில் 10 பெண் காவலர்கள், 5 ஆண்காவலர்கள், பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் புலனாய்வுத் துறையினர் சமூகமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறைசாலை ஊழியர்கள் இப் பெண்கள் நால்வரையும் தனித்தனியே நிர்வாணப்படுத்தி, 'சோதனை'யிட்டுள்ளனர். இதன்போது சர்வதேச மனித விழுமியங்களுக்கு முற்றிலும் முரணாகத் தாம் பெரிதும் அவமதிப்புக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறி மேற்படி பெண்கைதிகள் நால்வரும் மனங்குமுறியுள்ளனர்.
மேற்படி பெண் கைதிகளைச் சோதனையிட்ட பின் அவர்கள், தொழுகைக்கு அணியும் ஆடைகள் மட்டும் அணிவிக்கப்பட்டு அங்கிருந்த விசாரணை அறைக்குள் கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் அவர்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறைக் கொட்டடி ஆக்கிரமிப்புச் சிறைக்காவலர்களால் அங்குலம் அங்குலமாகச் சோதனையிடப்பட்டது.
இந்தத் 'தேடுதல் வேட்டை' சுமார் 6 மணிநேரம் தொடர்ந்தது. பலஸ்தீன் பெண் கைதிகளின் சிறைக்கொட்டடி தலைகீழாகப் புரட்டப்பட்டு சோதனையிடப்பட்ட போதிலும், இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறைநிர்வாகம் குற்றஞ்சாட்டியது போன்ற கைத்தொலைபேசியொன்று அங்கே காணப்படவில்லை.
தேடுதல் வேட்டை இடம்பெற்ற ஆறு மணிநேரமும் மேற்படி பலஸ்தீன் பெண்கள் நால்வரும் உண்ணவோ, தொழவோ, கழிவறைக்குச் செல்லவோ அனுமதியளிக்கப்படவில்லை என்பதும், அவர்கள் மிகக் கடுமையாக அச்சுறுத்தப்பட்டுள்ளமையும் மிகத் தெளிவான மனித உரிமை மீறலாகும் என அஹ்ரார் அமைப்பின் பணிப்பாளர் ஃபுவாத் அல் குஃப்பாஷ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறைகளில் பொய்யான குற்றச்சாட்டுக்களின் பேரில் ஆண்,பெண், சிறுவர் என்ற வேறுபாடின்றி அடைத்து வைக்கப்பட்டுள்ள பலஸ்தீன் கைதிகள் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படாமலும், தம் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றம் நிரூபிக்கப்படாமலும் மிக நீண்ட காலம் பல்வேறு சித்திரவதைகளையும் அவமானங்களையும் தொடர்ந்து எதிர்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment