கனிமொழி, கலைஞர் தொலைக்காட்சி இயக்குநர் ஷரத்குமார், குசேகான் நிறுவன இயக்குநர்கள் ஆஸிப் பால்வா, ராஜீவ் அகர்வால் மற்றும் ஹிந்தித் திரைப்படத் தயாரிப்பாளர் கரீ்ம் மொரானி ஆகியோர் தாக்கல் செய்த மனு மீது நீதிபதி வி.கே. ஷாலி இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
கடந்த 3-ம் தேதி, கனிமொழி உள்ளிட்டோரின் ஜாமீன் மனுக்களை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து, அவர்கள் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறார்கள்.
கனிமொழி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அல்டாஃப் அகமது வாதிடும்போது, கனிமொழி உள்பட ஐந்து பேருக்கு ஜாமீன் வழங்குவதற்கு சிபிஐ ஆதரவளித்ததை சிறப்பு நீதிமன்றம் கவனத்தில் கொள்ளவில்லை என்று சுட்டிக்காட்டினார்.
அப்போது நீதிபதி ஷாலி, சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ மேற்கொண்ட நிலைப்பாட்டில் மாற்றம் இருக்கிறதா என்று கேள்வி எழுப்பினார்.
சிபிஐ சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மோகன் பராசரன், அவர்களுக்கு ஜாமீன் வழங்குவதற்கு ஆட்சேபணை இல்லை என்ற சிபிஐ நிலைப்பாட்டில் மாற்றம் ஏதும் இல்லை என்று தெரிவித்தார்.
சிபிஐ ஆட்சேபம் தெரிவிக்காத போதிலும், அது சட்டத்தின் பார்வையில் எந்தவிதத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும், வழக்கின் தீவிரத்தன்மை கருதி, அவர்களுக்கு ஜாமீன் வழங்க முடியாது என்றும் சிறப்பு நீதிமன்றம் அவர்களது மனுவைத் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.
நேரு சரணடைய இடைக்காலத் தடை
இதனிடையே, திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.என். நேருவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு, உச்சநீதிமன்றம் இன்று இடைக்காலத் தடை விதித்துள்ளது.
நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட நேரு, கடந்த அக்டோபர் 3-ம் தேதி கைது செய்யப்பட்டார். ஆனால், 7-ம் தேதிதான் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். ஒருவர் கைது செய்யப்பட்ட 24 மணி நேரத்துக்குள் ஆஜர்படுத்தப்பட வேண்டும் என்றும், நேருவை அவ்வாறு ஆஜர்படுத்தாததால் அவரைக் காவலில் வைக்க உத்தரவிட முடியாது என்றும் மாஜிஸ்திரேட் மறுத்துவிட்டார்.
இதுதொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டில், ஏற்கெனவே காவலில் உள்ள ஒருவரை 24 மணி நேரத்தில் ஆஜர்படுத்த வேண்டிய கட்டாயம் இல்லை என்றும், நவம்பர் 9-ம் தேதி திருச்சி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேரு சரணடைய வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
அதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் நேரு தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, வரும் வெள்ளிக்கிழமை வரை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேரு ஆஜராகத் தேவையில்லை என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிடப்பட்டது.
No comments:
Post a Comment