அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Sunday, November 6, 2011

அரசுத் துறை, போலீஸ் மின் கட்டண பாக்கி ரூ.300 கோடி: நோட்டீஸ் அனுப்ப மின் வாரியம் முடிவு

மத்திய, மாநில அரசுத் துறை அலுவலகங்கள், மின் கட்டணம் செலுத்தாமல், தமிழக மின் வாரியத்திற்கு 300 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளன. தெரு விளக்குக்காக, ஊராட்சிகள் மட்டும் 70 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளன. இவற்றிற்கு நோட்டீஸ் அனுப்பி வசூலிக்க, வாரியம் முடிவு செய்துள்ளது. தமிழக மின் வாரியம், 53 ஆயிரம் கோடி ரூபாய் கடனிலும், 38 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பிலும் சிக்கித் தவிக்கிறது. மின்சாரப் பற்றாக்குறையால், அதிக விலைக்கு வெளிச்சந்தையில் மின்சாரம் வாங்கி, குறைந்த விலைக்கு மின் வாரியம் வினியோகம் செய்கிறது. இதனால், நஷ்டத்தின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.


வசூல் மையங்களுக்கு இலக்கு: தற்போது, மின் கட்டணத்தை ஒழுங்குமுறைப்படுத்தி, முறையாக வசூலிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, மின் வாரியத்தின் அனைத்து ஊழியர்களுக்கும் 40 கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டு, அதை முறையாகச் செயல்படுத்தி, மின் வாரிய நஷ்டத்தை சரிக்கட்ட முடிவெடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2,800 வசூல் பிரிவு அலுவலகங்களும், சென்னையில் 600 மின் வாரிய வசூல் பிரிவுகளும் உள்ளன. ஒவ்வொரு மின் வாரிய வசூல் பிரிவுகளுக்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதை அடைவோருக்கு பரிசும், பாராட்டும் உண்டு என, மின் வாரியம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், பொதுமக்களுக்கான மின் கட்டணம், தொழிற்சாலைகளின் மின் கட்டணம் ஆகியவற்றை விட, மத்திய, மாநில அரசுத் துறைகளே அதிகளவில் மின் கட்டண பாக்கி வைத்துள்ளன. இத்துறைகளிடமிருந்து மின் கட்டணத்தை வசூலிப்பது, மின் வாரிய ஊழியர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது.

ரூ.300 கோடி பாக்கி...
அரசுத் துறைகளின் மின் கட்டண பாக்கி குறித்து, ஒவ்வொரு மண்டலத்தின் தலைமை பொறியாளர்களும் கணக்கெடுத்தனர். இதன்படி, மாநிலம் முழுவதும், 300 கோடி ரூபாய்க்கு மின் கட்டண பாக்கி இருப்பது தெரிந்துள்ளது.
இதில், அதிகபட்சமாக, ஊராட்சிகளிலிருந்து 80 கோடி ரூபாய் பாக்கி வைக்கப்பட்டுள்ளன. சென்னை, நெல்லை, திருச்சி, மதுரை, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர், தூத்துக்குடி மற்றும் வேலூர் ஆகிய 10 மாநகராட்சிகளின் சார்பில், 70 கோடி ரூபாய் மின் கட்டண பாக்கி வைக்கப்பட்டுள்ளன. இதேபோல், அனைத்து போலீஸ் நிலையங்கள், போலீஸ் நிலைய உயரதிகாரி அலுவலகங்கள், போலீஸ் குடியிருப்புகள், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம், போலீஸ் டி.ஜி.பி., அலுவலகம், தலைமைச் செயலகம், கலெக்டர் அலுவலகங்கள், தாசில்தார் அலுவலகங்கள் என, பெரும்பாலான அரசு அலுவலகங்கள், கடந்த ஆறு மாதங்களாக, மின் கட்டண பாக்கி வைத்துள்ளன.

பொதுமக்களே மேல்...
இதுகுறித்து, மின்துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: சாதாரண பொதுமக்கள் மின் கட்டணம் செலுத்த, 20 நாட்கள் மட்டுமே அனுமதி உண்டு. கட்டாத இணைப்புகளை, உடனடியாக துண்டித்து விடுவோம். தாமத கட்டணத்திற்கு, 18 சதவீதம் வட்டி உண்டு. ஆனால், அரசு அலுவலகங்களுக்கு, 60 நாட்கள் வரை காலக்கெடு தரப்படுகிறது. தாமதக் கட்டணத்திற்கு, வெறும் 6 சதவீதம் மட்டுமே வட்டி வசூலிக்கப்படுகிறது. மின் இணைப்பு துண்டிப்பும் கிடையாது. ஆனாலும், மின் கட்டணம் செலுத்த சிலர் தாமதப்படுத்துகின்றனர். இவ்வாறு அவர் கூறினார். மின் வாரியம் கடனில் மூழ்கி தத்தளிக்கும் நிலையில், அரசு அலுவலகங்களே, மின் துறையை கடன் வாங்க வைத்து, சிக்கலுக்கு ஆளாக்குகின்றன. இதற்கு, "அரசிடமிருந்து நிதி ஒதுக்கீடு கிடைக்கவில்லை' என, சம்பந்தப்பட்ட துறைகளிலிருந்து, மின் வாரியத்திற்கு பதில் வருகிறது. இதேநிலை நீடித்தால், சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி வசூலிக்க, மின் வாரியம் திட்டமிட்டுள்ளது.

பாக்கி பட்டியல் இப்படி இருந்தால் எப்படி...?
துறைகள் பாக்கி (ரூ.கோடியில்)
ஊராட்சிகள் 80
பேரூராட்சிகள் 8
நகராட்சிகள் 60
மாநகராட்சிகள் 70
அரசு அலுவலகங்கள் 12
போலீஸ் நிலையங்கள் 6
பல வகை கட்டண பாக்கி 64

No comments: