அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Thursday, May 7, 2009

சிந்திப்பீர், வாக்களிப்பீர்!




அன்பான முஸ்லிம் சகோதர சகோதரிகளே,

கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் சாஹிப் அவர்களுக்குப் பிறகு நம் சமுதாயம் இந்நிலைக்கு சென்றுள்ளதைக் கண்கூடாகக் கண்டபின்பும் திராவிட கட்சிகளுக்கே வாக்களித்து நாம் வாக்களித்து வீணடைய வேண்டும்?.

மாற்றார்கள் அறிந்த அளவுக்குக்கூட சுயபலத்தை அறியாமலேயே இருக்கும் சகோதர சகோதரிகளே,

முஸ்லிம் அல்லாதவர் நம்முடைய வோட்டைப் பெற்று நம்மை ஓட்டாண்டி ஆக்கி, ஒரு சீட்டுச் சமுதாயமாக இன்னும் வைத்திருக்கும் அவலம் தீர்வது எப்போது?

நாம் பலம் பெற்று விளங்கும் தொகுதிகளில் திராவிடக் கட்சிகள் ஜெயிக்கும்போது (மத்திய சென்னை, துறைமுகம், ஆயிரம் விளக்கு இன்னும் நிறைய), நாம் ஏன் முஸ்லிம்களைத் தேர்வு செய்து நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் ஒலித்திட ஒன்றுபட்டு வாக்களிக்க முன்வரக்கூடாது? நம் பலத்தின் மீது நமக்கே ஏன் நம்பிக்கை வரவில்லை?

பணபலம், அதிகார பலத்துக்கு முன்னால் அல்லாஹுவின் மீது நம்பிக்கை வைத்து ஒன்றுபட்டு வாக்களியுங்கள்.

திராவிடக் கட்சிகளில் உள்ள சிறுபான்மை (முஸ்லிம்) பிரிவுத் தலைவர்களால் சமுதாய வோட்டுகளில் பிரிந்து போவதைத் தவிர சமுதாயத்துக்கு என்ன பயன்?

சிந்திப்பீர்! இன்னும் நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள்! திராவிடக் கட்சியின் சிறுபான்மைத் தலைவர்கள் வெற்றியே பெற்றாலும் நம்முடைய குரல்களை நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் அவர்களால் ஒலிக்கச் செய்ய இயலுமா? அவர்களது கைகள் (வாயும் சேர்த்து தான்) கட்டபட்டுள்ளனவே! கட்சிக் கொறடவின் கட்டுபாட்டை மீறி, ஒரு MP/MLA சுயமாக எதுவும் சொல்லமுடியுமா? (மேலும் விபரம் வேண்டுவோர் ஜனாப் காதர் மொய்தீன் அவர்கள் திருவாய் மலர்ந்ததை நினைவு படுத்தி கொள்ளவும்). மொத்தத்தில் அவர்கள் தாம் முற்றிலுமாகச் சார்ந்து விட்ட கட்சியின் MP/MLA ஆகச் செயல்படுவதைத் தவிர்த்து, வேறென்ன முஸ்லிம்களுக்குச் செய்துவிட முடியும்?

இவர்களுக்கா உங்கள் வாக்கு?

கூட்டணியில் இருந்தாலும் உதய சூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்று நிர்பந்தித்து, வேட்பாளரையே மாற்றும் மமதை பிடித்த 'சூத்திரதாரிக்கு' முகத்தினில் கரிபூசிடும் மகத்தான ஆயுதம் உங்கள் வோட்டென்பதை மறந்து விடவேண்டாம்.

அருமை முஸ்லிம் சமுதாய மக்களே! இவர்கள் நம் முதுகின் மீது மாறி மாறி சவாரி செய்து நம் சமதாயத்தைப் பிரித்து, புரட்டி, இந்நிலைக்குத் தள்ளி இருக்கிறார்கள் என்பதை என்றும் மறந்திட வேண்டாம். நாம் ஒவ்வொரு முறையும் நம் உரிமைக்காக வீதிகளில் இறங்கிப் போராட வேண்டிய நிலையில்தான் இக்கட்சிகள் நம்மை இன்றுவரை வைத்திருக்கின்றன. நம் வோட்டு மட்டும் அவர்களுக்கு வேண்டும்; ஆனால், நமக்கான குறைந்தபட்ச பிரதிநிதித்துவம்கூட நமக்குத் தர மறுப்பார்கள். நாம் ஏன் இவர்கள் பின்னால் அலையை வேண்டும்? நம்முடைய ஒற்றுமையை ஓங்கி ஒலித்தால் நமக்கு உரிய மதிப்பும் மரியாதையும் வந்து சேராதா? நாம் ஏன் பலவீனப்பட்டுப் போனோம்? ஒற்றுமை இல்லாததால் தானே? ஏன் இந்த இழி நிலை தொடர வேண்டும்?

நமக்குள் எத்தனை பேதங்கள் இருந்தாலும் தமிழக முஸ்லிம் சமுதாயத்தின் பிரதிநிதியைத் தேர்வு செய்யும் விஷயத்தில் ஒன்றுபடுங்கள். நம் சமுதாய வாக்கு நம் சமுதாயத்துக்குப் பயன்பட வில்லையென்றால் நம் குரல்கள் எப்படித்தான் ஆட்சியாளர்களை சென்றடைவது?

எனவே, முஸ்லிம் சமுதாயத்தவரையே உங்கள் பிரதிநிதியாகத் தேர்வு செய்யுங்கள்.

முஸ்லிம் லீக்ஐத் திட்டமிட்டு ஓரங்கட்டி, நிரந்தரமான 'ஒரு சீட்டுக் கட்சி'யாக்கி, ஓட்டாண்டிகளாக்கி ஒதுக்கி ஓரத்தில் வைத்து, "உங்களுக்கு இதயத்தில் இடம் அளித்து விட்டேன்" என்று மாய்மாலம் காட்டும் திராவிடக் கட்சிகளுக்கு பாடம் புகட்ட வேண்டிய தக்க தருணம் இது.

மனிதநேய மக்கள் கட்சி உங்கள் எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்யும் என்று நீங்கள் நம்பினால் உங்கள் வோட்டுக்களை அவர்களுக்கு இட்டு வெற்றிபெறச் செய்யுங்கள். புத்தெழுச்சி பெறுவோம். நமக்கான பிரதிநிதிகளை நாமே தேர்ந்தெடுப்போம்.

சமுதாய மக்களே ஒன்றுபட்டு வோட்டளிப்பதன் மூலம், நாம் நம் பலத்தை உணர்த்திட அருமையான சந்தர்ப்பம் இந்த நாடாளுமன்றத் தேர்தல் என்பதை மறந்திட வேண்டாம். ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் மொத்த முஸ்லிம் வாக்காளர்களினால் இன்ஷா அல்லாஹ், ஒரு பெரும் மற்றத்தைக் கொண்டுவர முடியும். இன்று நாம் அளிக்கும் ஒன்றுபட்ட குரல், இன்ஷா அல்லாஹ் வரும் சட்டமன்றத் தேர்தலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் எள் முனை அளவும் ஐயமில்லை. பெரும்பான்மை இன்றி அடுத்த கட்சியின் ஆதரவில் ஆட்சியைத் தள்ளும் ஆட்சியாளர்களுக்கு நம் சக்தியைப் புரிய வைப்போம்.

எனதருமைச் சமுதாய மக்களே!

நீங்கள் உங்கள் வாக்குகளை 100% செலுத்துங்கள். பிற இடங்களில் 50-60% பதிவாகும் வாக்குகள், நம் சமுதாய மக்கள் வாழும் இடங்களில் 80%க்கு மேல் உயர வேண்டும். இது ஒன்றே நம் பலத்தை அவர்களுக்கு உணர்த்தும்.

சிந்திப்பீர்! குடும்பத்துடன் உங்கள் வாக்குகளைத் திராவிடக் கட்சிகள் சவாரி செய்வதற்காகத் தம் முதுகைக் கொடுக்காத, நம் சமுதாயத்தைச் சேர்ந்தவருக்கு மட்டும் தாருங்கள்.

இன்ஷா அல்லாஹ், திமுக அதிமுக இன்னும் முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற முனையும் 'அரசியல் பூனைகளுக்கு' துணிந்து மணி கட்டுவோம்; வெற்றியடைவோம், இன்ஷா அல்லாஹ்.

அன்புடன்
அபூ நஸீஹா

No comments: