இத்தாலியின் தென் கிழக்கு கரையில் இருக்கும் நகரம் பொஜ்ஜியா(Foggia). ஆப்பிரிக்காவில், ஆசியாவில் இருந்து கடல் மார்க்கமாக வந்து குவியும் அகதிகள், நகருக்கு வெளியே அமைந்திருக்கும் முகாம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முகாம்களில் வசிக்கும் ஆயிரக்கணக்கான அகதிகள், தமது அத்தியாவசிய தேவைகளுக்காக தொலைவில் இருக்கும் பொஜ்ஜியா நகரத்திற்கு வந்து செல்ல வேண்டும். நகரில் இருந்து முகாம் வரை வந்து செல்லும் 24 ம் இலக்க பேரூந்து சேவை, வெள்ளையின உழைக்கும் வர்க்க மக்கள் வாழும் குடியிருப்பை தாண்டித் தான் வர வேண்டும். இதனால் அகதிகள் அந்தப் பகுதி பஸ் நிறுத்துமிடங்களுக்கு வந்தும், 24 ம் இலக்க வண்டியைப் பிடிப்பது வழக்கம்.
பொஜ்ஜியா நகர பேரூந்து சேவையை நடத்தும் Ataf என்ற தனியார் நிறுவனம், இந்த மாதம் தொடக்கம் 24/i என்ற புதிய சேவையை ஆரம்பித்துள்ளது. இதில் விசேஷம் என்னவென்றால், இந்தப் புதிய பஸ் சேவை அகதிகளை மட்டுமே ஏற்றிச் செல்லும். வெள்ளையினத்தவர்கள் வழக்கம் போல 24 ம் இலக்க பஸ்ஸில் பயணம் செய்யலாம். ஒரே வழித்தடத்தில் சேவையில் ஈடுபடும் இரண்டு வண்டிகளும், வெவ்வேறு நிறுத்துமிடங்களில் நிற்கும். அதாவது, கறுப்பர்களுக்கும், வெள்ளையருக்கும் அருகருகே இரு வேறு நிறுத்துமிடங்கள். அகதிகள் இனிமேல், (வெள்ளையினத்தவர்கள் வாழும்) குடியிருப்புப் பகுதிக்கு வந்து, பஸ் பிடிக்கத் தேவையில்லை, 24/i நேரடியாக முகாமிற்கு வரும்.
இந்த திட்டம் இனவாத கொள்கை அடிப்படையில் எடுக்கப்படவில்லை என்று, சம்பந்தப்பட்ட பஸ் கம்பனியும், நகர மேயரும் மறுத்துள்ளனர். இத்தாலிய பிரசைகளுக்கும், வெளிநாட்டு குடியேறிகளுக்கும் இடையில் அடிக்கடி ஏற்படும் கைகலப்பு தான் தம்மை இந்த திட்டத்தை நடைமுறைப் படுத்தக் காரணம் என தெரிவித்தனர். அப்படியே சச்சரவுகள் ஏற்பட்டிருந்தாலும், அதற்கு இது தீர்வல்ல, என வெளிநாட்டவர் நலன் காக்கும் அமைப்பொன்று கண்டித்துள்ளது. அது மேலும் கூறுகையில், "அரசின் இன ஒதுக்கல் கொள்கையானது, நவ-பாசிச காடையர்கள் வெளிநாட்டவர் மீது தாக்குதல் தொடுக்க ஊக்குவிக்கும். இனிமேல் கொலையே நடந்தாலும் இத்தாலிய சமூகமும், ஊடகங்களும் அக்கறைப்படாத ஆபத்து அதிகரிக்கின்றது."
No comments:
Post a Comment