உங்களது பெயர் "பயங்கரவாதிகள் பட்டியலில்" இடம்பெற்றுள்ளதா? [பகுதி - 4]
2004 ம் ஆண்டு மார்ச் 11, மாட்ரிட் ரயில்வண்டியில் குண்டு வெடித்து 190 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். அன்றைய ஸ்பெயின் பிரதமர் அஸ்னார், எடுத்த எடுப்பில் பாஸ்க் பிரிவினை கோரும் ETA மீது பழி சுமத்தினார். ETA மறுத்திருந்தது. ஆனால் அன்றைக்கு யாரும் மறுப்பை பெரிதாக எடுக்கவில்லை. குண்டுகள் வெடித்து மூன்று நாட்களுக்குள் பொதுத் தேர்தல் வர ஏற்பாடாகி இருந்தது. தேசிய அனுதாப அலை காரணமாக, அஸ்னார் தனது வெற்றி உறுதி என்று எண்ணி இருக்கலாம்.
குண்டு வெடிப்பு சம்பவம் நடந்து சில மாதங்களுக்குள்ளேயே, ஸ்பானிய ஊடகங்கள் தீவிரமாக துப்புத் துலக்கியத்தில் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகின. குண்டு வைக்க சதி செய்த பயங்கரவாதிகள் என்று சொல்லி, சில அரபு இளைஞர்களை ஸ்பானிய பொலிஸ் அடுத்தடுத்து கைது செய்து கொண்டிருந்த காலம் அது. ஆனால் ஊடகங்களுக்கு கிடைத்த தகவல்கள் படி, சந்தேகநபர்களில் சிலர் காவல்துறை நியமித்த உளவாளிகள், அல்லது ஆட்காட்டிகள். உதாரணத்திற்கு தீவிரவாதிகளுக்கு டைனமைட் வெடிபொருளை விற்ற சுரங்க தொழிலாளி, காவல்துறையினால் பணியில் அமர்த்தப்பட்டவர். வாங்கிய வெடிபொருட்களை எங்கே, எப்படி கடத்திச் செல்கின்றனர் என்ற விபரங்கள் கூட காவல்துறைக்கு தெரிந்தே இருந்தன. யாரும் தலையிடவில்லை. மேலும் ரயிலில் குண்டை பொருத்த திட்டமிருந்ததாக துல்லியமான தகவல் கூட கிடைத்தது. அப்போதும் காவல்துறை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.
அது சரி, இவ்வளவு தகவல்கள் கிடைத்தும், காவல்துறை எதற்காக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை? ஒரு வேளை, தாக்குதலின் வீரியத்தை குறைத்து மதிப்பிட்டிருக்கலாம். அதைவிட முக்கியமாக அந்த குண்டுகள் ETA க்கு எடுத்துச் செல்லப்படுகின்றன என காவல்துறை நம்பி இருக்கலாம். கடந்த காலங்களில் அது போன்ற சம்பவங்களில், பல ETA தலைமை உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆமாம், சாதாரண மக்களின் சிந்தனையோட்டத்திற்கு மாறாக தான், புலனாய்வுத்துறை சிந்திக்கின்றது. தீவிரவாத இயக்கங்களை வெளிப்படையாக இயங்கவிட்டு, அதன் கீழ்மட்டத்தில் செயல்படுபவர்களைக் கண்காணித்து, பெரிய புள்ளிகளை கைது செய்ய நாள் பார்த்துக் காத்திருப்பர். இதற்காக புலனாய்வுத்துறை தனது ஆட்களையே அனுப்பி வைக்கும்.
கொஞ்சக் காலம் அமைதிப்பூங்காவான நெதர்லாந்தில், "தீவிரவாதக் குட்டிகளின் கிளப்" ஒன்று இயங்கி வருவதாக, பொலிசும், ஊடகங்களும் மயிர்க்கூச்செறியும் பரபரப்புக் கதைகளை கூறி வந்தார்கள். ஒரு மிருகத்தை கண்டுபிடித்தால், அதற்கொரு பெயரிடு என்றொரு பழமொழி இருப்பது போல, அந்த கிளப்பிற்கு "Hofstad groep" என பெயரிட்டார்கள். ஒரு இணையத்தளத்தில் புனைபெயரில் வந்து தீவிர அரசியல் கருத்துகளை கூறிய இளைஞன் ஒருவன் IP முகவரி மூலம் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டான். அந்த இணையத்தில் தன்னோடு விவாதம் செய்தது பொலிஸ் கையாள் என்ற விடயம், சிறை சென்ற பின்னர் தான் அந்த இளைஞனுக்கு தெரிய வந்தது. அதே போல கிரேனேட் வைத்திருந்த குற்றத்திற்காக இன்னொரு இளைஞன் கைது செய்யப்பட்டான். அவனது கைகளுக்கு அந்த கிரேனேட் எப்படி வந்தது? தீவிரவாதி போல நடித்த இன்னொரு பொலிஸ் உளவாளி ஒருவரிடம் இருந்து கிடைத்தது. நான் இங்கே குறிப்பிடும் விபரங்கள் எல்லாம், கைது செய்யப்பட்டவர்களுக்காக வாதாடிய வக்கீல்கள் துருவிய போது வெளி வந்த உண்மைகள். சில ஊடகங்களும் இதே சந்தேகங்களை கிளப்பி இருந்தன.
மேற்குறிப்பிட்ட ஊடுருவல்கள், மேற்குலக வழிகாட்டுதலுடன் பயங்கரவாதத்தை எதிர்த்து போரிடும் மூன்றாம் உலக நாடுகளில் இன்னும் தீவிரமாக நடக்கும். இதற்கு மிகச் சிறந்த உதாரணம் அல்ஜீரியா. அங்கே 1991 ல் பெரும்பான்மை மக்களின் ஆதரவுடன் தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட இஸ்லாமியவாதக் கட்சியை, ஆயுதமேந்தும் நிலைக்கு தள்ளியது அல்ஜீரிய அரசு. தேர்தல் முடிவுகள் இரத்து செய்யப்பட்டு, இராணுவ சர்வாதிகாரம் நிலைநாட்டப்பட்டது. இஸ்லாமியக்கட்சி உறுப்பினர்கள் பெருமளவில் கைது செய்யப்பட்டனர். அதே நேரம் கிராமங்களில் அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்படுவதான சம்பவங்கள் அதிகரித்தன. அரசு இதெல்லாம் இஸ்லாமிய தீவிரவாதிகளின் கைங்கரியம் என்று இலகுவாக உலகை நம்ப வைத்தது.
அல்ஜீரிய அரசிற்கு, அதன் மாஜி காலனியாதிக்க நாடான பிரான்ஸ் ஆதரவு வழங்கியது இரகசியமல்ல. எனினும் பாரிஸ் நகரில் சுரங்கரயில்வண்டியில் இடம்பெற்ற சில குண்டுவெடிப்புகள், பிரான்சை நேரடியாக அல்ஜீரிய உள்நாட்டுப்போரில் ஈடுபட வைத்தது. பயங்கரவாதத்தை ஒழிக்க பிரான்ஸ் வழங்கிய பூரண ஆதரவை தனக்கு சாதகமாக பயன்படுத்திய அல்ஜீரிய அரசு, இஸ்லாமிய எதிர்ப்பியக்கத்தை ஈவிரக்கமின்றி ஒடுக்கி வெற்றிவாகை சூடியது. இதில் கவனிக்க வேண்டிய அம்சம், அல்ஜீரிய அரசு எவ்வாறு சர்வதேசத்தை தனது பக்கம் திருப்பியது என்பதே. சர்வதேச சமூகத்தை பொறுத்த வரை, அல்ஜீரியாவில் "உள்நாட்டு அல்கைதா" தலையெடுக்கப் பார்க்கிறது. மனிதகுலத்திற்கு விரோதமான பயங்கரவாதம் அழிக்கப்பட வேண்டும். அவ்வளவு தான்.
2004 ம் ஆண்டு, அல்ஜீரிய அரச புலனாய்வுத்துறையின் பழைய பணியாளர்கள் சிலர், தமது மனச்சாட்சிக்கு பயந்து, அரசின் பொய்முகமூடியை கிழிக்க முன்வந்தனர். போர்க்காலத்தில் நடந்த உண்மைகளைப் பற்றி வாக்குமூலம் அளித்தனர். நாம் நினைப்பதற்கு மாறாகவே உண்மை இருப்பது உலக யதார்த்தம். உள்நாட்டுப்போரில் பிரான்சை ஈடுபடவைக்கும் சதித்திட்டம் புலனாய்வுப்பிரிவும், பிரெஞ்சு அரசும் சேர்ந்தே தீட்டின. தலைநகர் அல்ஜியர்சில், பிரெஞ்சு தூதுவராலய ஊழியர்கள் கடத்தப்பட்ட சம்பத்தை குறிப்பிடலாம். அவர்களை கடத்தியது புலனாய்வுப்பிரிவு ஆட்கள் என்பது மட்டுமல்ல, இந்த நடவடிக்கை முன்கூட்டியே பிரெஞ்சு உள்துறை அமைச்சருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. (சில நேரம் அவரும் சேர்ந்தே திட்டமிட்டிருக்கலாம்). இது மட்டுமல்ல, இஸ்லாமியத் தீவிரவாதிகள் நடத்தியதாக நம்பப்பட்ட பல தாக்குதல் சம்பவங்களை, அந்த இயக்கத்தினுள் ஊடுருவி இருந்த புலனாய்வுத்துறையை சேர்ந்தவர்கள் திட்டமிட்டிருந்தனர். இந்த சதிக்கு சிகரம் வைத்தாற்போல் பாரிஸ் குண்டுவெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன. குண்டுவெடிப்பை திட்டமிட்ட ஒரு இராணுவ புலனாய்வுத்துறை ஜெனரல் உட்பட மற்றும் பலர் இனம் காணப்பட்டனர். அது மட்டுமல்ல, பிரெஞ்சு அரசாங்கம் இதுவரை எதற்காக குண்டுவெடிப்பு பற்றி பூரண விசாரணை செய்யவில்லை? என்பதும் சந்தேகத்திற்குரியது.
இந்த உண்மைகளும் பிரான்ஸில் ஏற்கனவே வெளிவந்து, ஊடகங்களின் கவனத்தை பெற்றவை தான். அந்த நேரம் பிரான்சிலேயே தங்கியிருந்த, பாரிஸ் குண்டுவெடிப்பு சூத்திரதாரிகளை அடையாளம் காட்ட, முன்னாள் புலனாய்வுப்பிரிவு ஊழியர்கள் முன்வந்தனர். இருப்பினும் குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல், பத்திரமாக அல்ஜீரியா திரும்புவதற்கு பிரெஞ்சு அரசாங்கம் அனுமதி அளித்தது. இந்தப் புதிருக்கு ஒரேயொரு விடை தான் இருக்க முடியும். அல்ஜீரிய அரசு பிரான்சின் நண்பன். இஸ்லாமிய தீவிரவாதிகள் இருவருக்குமே எதிரிகள். "நீதி, நியாயம்" என்பனவெல்லாம் அப்பாவி மக்களை ஏமாற்றுவதற்கு உருவாக்கப்பட்ட அலங்காரச் சொற்கள். நிஜ உலகில் எமது நலன்களுடன் யார் ஒத்துப் போகின்றனர், என்பதே கணிக்கப்படுகின்றது. அளவில் அதிகமாக எண்ணை, எரிவாயு சேமிப்புகளை கொண்ட அல்ஜீரியா என்ற கற்பக விருட்சம் பிரான்சிற்கு தேவைப்படும் வரையில், அந்த அரசிற்கான ஆதரவும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
-- முற்றும் --
(இந்த தொடர் இத்துடன் முடிவுறுகின்றது.)
No comments:
Post a Comment