அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Saturday, May 9, 2009

மனிதப் படைப்பைப் பற்றிய இறைவனின் முடிவு, மலக்குகளின் கணிப்பு அல்லது இப்லீஸின் மோசடி என்பவைகளின் முலம் செய்திகள் ஒன்றுக்கு ஒன்று முரண்படுகின்றனவாம்!.



/குர்ஆன் வசனம் 2:30 இன்படி மனிதனைப் படைக்கப் போவதாக இறைவன், மலக்குகளிடம் தன்முடிவை தெரிவிக்க வேண்டிய காரணம் என்ன? //

நபிகளார் மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து மதினாவில் தங்கியிருந்தபோது அருளப்பட்ட சூரத்துல் பகராவிலில் இவ்வசனம் உள்ளது. இஸ்லாத்தின் மிக முக்கிய வாழ்வியல் தத்துவங்களும் இதே அத்தியாயத்தில்தான் உள்ளன.

அடைக்கலம் கொடுத்த மதினாவாசிகளில் பெரும்பாலோர் யூதர் மற்றும் கிறிஸ்தவர்களாக இருந்ததால் அவர்களின் வேதங்களில் சொல்லப்பட்ட வரலாற்றுச் செய்திகளையும் குறிப்பிட்டு அல்லது மெய்ப்பித்து உண்மை மார்க்கத்தைச் சொல்ல வேண்டியிருந்தது. அதன்படி மலக்குகள்-அல்லாஹ் இடையேயான உரையாடலைக் குறிப்பிட்டபோது மதினாவாசிகள் மறுப்புத் தெரிவிக்காமல் கேட்டதற்குக் காரணம் அவை அவர்களின் வேதத்திலும் சொல்லப்பட்டிருந்தவை என்பதேயாகும்! ஆக, ஓரிறை நம்பிக்கையாளர்கள் இடையே இவ்விசயங்களில் மாற்றுக்கருத்தோ ஐயமோ எழவில்லை.

****

இரத்தம் சிந்தி குழப்பம் விளைவிக்கும் மனிதர்களைக் குறித்து அவற்றை முன்னெப்போதும் அறிந்திராத மலக்குகளால் எப்படிக் கணிக்க முடிந்தது?இதேபோல் ஏற்கனவே என்னேரமும் துதித்துக் கொண்டிருக்க மலக்குகள் இருக்கும்போது எதற்கு தன்னைத் தொழுவதற்காக மனிதர்களைப் படைக்க வேண்டும் என்றும் கேட்கலாம்!



எவ்விதத்திலும் ஒப்புமையற்றவனாகிய இறைவன்,தன்னைவிடத் தகுதியில் குறைந்த படைப்பினத்தைப் படைத்து அவை தன்னை மட்டுமே வணங்க வேண்டுமென்று எதிர்பார்ப்பது வல்ல இறைவனுக்குத் தகுதியுடையாதா? மலக்குகளைப் போன்றே சதாதுதிப்பவர்களாக எல்லா மனிதர்களையும் படைத்திருக்கலாமே! இதனால் இறைவனுக்குக் கட்டுப்படாதவர்கள் நரகம் செல்வது தவிர்க்கப்பட்டு இருக்குமே என்றும்கூட பகுத்தறிவுத்தனமாக நிறையக் கேட்கலாம். கேள்வி மட்டும் கேட்பதல்லவே பகுத்தறிவு!

திருக்குர்ஆன் வசனம் 2:30லேயே இக்கேள்விகான பதிலும் இருக்கிறது! "நீங்கள் அறியாதவற்றை எல்லாம் நிச்சயமாக நான் அறிவேன்". மனிதன் படைக்கப்படுவதற்கு முன்பு இறைவன் உரையாடிய படைப்பினமாக மலக்குகள் இருந்திருக்கிறார்கள். அவர்களுடன் எந்தமொழியில் இறைவன் உரையாடினான், எங்கு உரையாடினான்? ஏன் உரையாடினான் என்பவைகள் குறித்து யாராலும் விளக்க முடியாது.

ஏனென்றால் அவ்வாறு விளக்குபரும் அதை அறிந்திருந்தால் மட்டுமே விளக்க முடியும்!

//குழப்பமும், இரத்தங்களை ஓட்டச் செய்யவும் மனிதர்கள் (பன்மை) தேவை. மேலும் மனிதனின் உடலமைப்பு, அவனின் திறமை,குணம், செயல்பாடுகள் மற்ற எல்லா விபரங்களும் இறைவனைத் தவிர யாருக்கும் தெரியாது. இறைவன் மட்டுமே அறிந்த படைப்பின் ரகசியம் மலக்குகளுக்கு தெரிந்தது எப்படி?//

மலக்குகளே இதற்கும் பதிலைச் சொல்லியதாக அதே அத்தியாயத்தில் 2:32 உள்ளது. "....(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக் கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை......"

ஆக,மனிதர்கள் குறித்தக் கேள்வியில் மலக்குகளின் கணிப்புகள் சரியல்ல என்பதாலும் அவர்களே "எங்களுக்குக் கற்றுக் கொடுத்தவை தவிர எதைப் பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை" என்று ஒப்புக் கொண்டு விட்டதாலும் அவர்கள் பரமரகசியம் எதையும் அறிந்திருக்கவில்லை!

//மலக்குளின் கூற்று மிக மிகச் சரியானது.மலக்குளின் கணிப்பு சிறிதளவும் தவறவில்லை.மனிதனைப்போல சுயமாகசெயல்பட முடியாத மலக்குகளால் எப்படி மனிதனைப்பற்றி மிகத் துள்ளியமாக கணிக்க முடிந்தது?//

மிகத்துல்லியமாக அவர்கள் எங்கே கணித்தார்கள்? மனிதர்கள் எல்லோரும் இரத்தம் சிந்துவார்கள் என்றல்லவா தவறாகக் கணித்திருந்தார்கள்!! காந்தி, தெரஸா போன்று எத்தனையோ ரத்தம் சிந்தாத மனிதர்களும் பிறப்பார்கள் என்பதை மலக்குகள் கணிக்கவில்லை என்பதால் மலக்குகளின் கணிப்பு துல்லியமற்றது!

//மனிதர்களை பூமியில் படைப்பதும், மனிதனின் வீழ்சிக்குக் காரணமும் இறைவன் நாட்டமே என்பதை மேற்கண்ட வசனம் உறுதி செய்கிறது. பிறகு ஏன் ஆதாம் தண்டிக்கப்பட வேண்டும்? //

அக்கிரமக்காரன் தண்டிக்கப்படத்தானே வேண்டும்! அதேஅத்தியாயம் 2::35 ல் "நீரும் உம்மனைவியும் அச்சுவனத்தில் குடியிருங்கள்; மேலும், நீங்கள் விரும்பியவாறு அதிலிருந்து தாராளமாகப் புசியுங்கள். ஆனால் நீங்கள் இருவரும் இம்மரத்தை மட்டும் நெருங்க வேண்டாம்; (அப்படிச் செய்தால்) நீங்கள் இருவரும் அக்கிரமக்காரர்களில் நின்றும் ஆகிவிடுவீர்கள்" என்று சொன்னபிறகும் கட்டளையைமீறி அக்கிரமம் செய்ததால் தண்டிக்கப்பட்டார்!

ஒருசமயம் அவர்கள் இறைக்கட்டளைக்குக் கட்டுப்பட்டிருந்தார்களென்றால் அவர்களின் கோடாணுகோடி சந்ததியினரும் சுவர்க்கத்திலேயே பிறந்து, வளர்ந்திருப்போம்! கோடாணுகோடி பேரின் சுகபோக வாழ்க்கைக்கு வேட்டு வைத்தவர் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவது நியாயம்தானே?!
//இன்று மனிதனின் இழிவான வாழ்க்கைக்கு யார் காரணம்? இப்லீஸின் மோசடியா? அல்லது இறைவனின் விதியா?/

இறைவனின் விதிக்குக் கட்டுப்படாமல் இப்லீசின் சதிவலைக்கு உடன்பட்ட மனிதனே காரணம்! உ.ம். ஆதாம்!!! (ஆதம் அலைஹி...)

****************

மற்றக் கேள்விகளையும் முழுமையாக வைத்தபின்னர் பதில் கொடுக்க முயற்சிக்கிறேன்!

"தேடுதலின் பொழுது கிடைத்தவைகள் முழுவதும் என் சுயஅறிவில் நான் கண்டவைகள் எனவே இதனால் ஏற்படும் விளைவுகள் நன்மை/தீமைகள் என்னை மட்டுமே சேர வேண்டும்" எல்லாம் அவன் செயல்!

No comments: