அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Thursday, May 14, 2009

மருந்துகளை உட்கொள்ளும்போது என்ன கூறவேண்டும்?


ஐயம்: மருந்துகளை உட்கொள்ளும்போது சொல்ல வேண்டியது என்ன?
"பிஸ்மில்லாஹ்" என்று சொல்ல வேண்டுமா? அல்லது "யா ஷாஃபீ, யா மஆஃபீ" என்று கூறவேண்டுமா? "பிஸ்மில்லாஹ்" என்று கூறி எடுத்துக் கொள்ளும் மருத்துவம் மூலமாக பரக்கத் (குணம்) கிடைக்குமா?

மின்னஞ்சல் வழியாக சகோதரி மெஹர் பானு

தெளிவு: அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

சகோதரி, உங்கள் கேள்விக்கான விளக்கம் தாமதம் ஆனதற்கு வருத்தம் தெரிவிக்கிறோம்.

மருந்துகள் உட்கொள்ளும்போது, "யா ஷாஃபீ யா மஆஃபீ என்று கூறவேண்டும்" என்பதற்கு நமக்குத் தெரிந்து சான்றுகள் ஏதும் இல்லை.

எங்களில் ஒருவர் நோய்வாய்ப்பட்டால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வலக்கரத்தால் அவரைத் தடவிவிட்டுப் பிறகு ''அத்ஹிபில் பஃஸ ரப்பந் நாஸ் வஷ்ஃபி அன்தஷ் ஷாஃபி லாஷிஃபாஅ இல்லா ஷிஃபாவுக்க ஷிஃபாஅன் லாயுகாதிரு ஸகமா'' என்று பிரார்த்திப்பார்கள். அறிவிப்பாளர் ஆயிஷா (ரலி) (நூல்கள்: புகாரி, 5675, 5743, 5750. முஸ்லிம், 4409, 4410, 4411. திர்மிதீ, 980)

‏أَذْهِبْ ‏ ‏الْبَاسَ ‏ ‏رَبَّ النَّاسِ وَاشْفِ أَنْتَ الشَّافِي لَا شِفَاءَ إِلَّا شِفَاؤُكَ شِفَاءً لَا ‏ ‏يُغَادِرُ ‏ ‏سَقَمًا

(பொருள்: மனிதர்களின் இரட்சகனே! நோயைப் போக்கி குணமளிப்பயாக! நீயே குணமளிப்பவன். நோயை முற்றிலும் போக்குவதற்கு உன் நிவாரணத்தைத் தவிர வேறு நிவாரணம் இல்லை!) இந்த நபிமொழியிலிருந்து தான் மருந்துகள் உட்கொள்ளும் போது, "யா ஷாஃபி, யா மஆஃபீ" என்று கூற வேண்டும் என்றக் கருத்தை நீங்கள் பெற்றிருந்தால் அக்கருத்தை மாற்றிக் கொள்ளுங்கள். இந்த அறிவிப்பில் அவ்வாறு இல்லை.

*****

உண்ணுவது, பருகுவது என உலக வாழ்வின் அனைத்துச் செயல்களையும் துவக்கும் முன் இறைநாமம் நினைவுகூரப்பட வேண்டும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்திருக்கிறார்கள்.

உங்களில் ஒருவர் ஏதேனும் உணவைச் சாப்பிட்டால், ''பிஸ்மில்லாஹ்'' என்று கூறவும். ஆரம்பத்தில் கூற மறந்துவிட்டால் ''பிஸ்மில்லாஹி ஃபீ அவ்வலிஹி வஆகிரிஹி'' எனக் கூறட்டும். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் ஆயிஷா (ரலி) (நூல்கள்: அபூதாவூத், திர்மதீ, அஹ்மத், நஸயீ, இப்னுமாஜா, இப்னு ஹிப்பான், ஹாகீம், பைஹகீ)

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மடியில் வளர்ந்தேன். (ஒரு முறை) எனது கை உணவுத் தட்டில் (இங்கும் அங்குமாய்) அலைந்து கொண்டிருந்தது. அப்போது ''குழந்தாய்! (உண்ணும்போது) அல்லாஹ்வின் பெயரைச் சொல்வாயாக! உன் வலக்கரத்தால் உண்பாயாக! உனக்கு அருகிலிருக்கும் பகுதியிலிருந்து எடுத்து உண்பாயாக! என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் உமர் பின் அபீ ஸலாமா (ரலி) (நூல்கள்: புகாரி, 5376. முஸ்லிம், 4111. திர்மிதீ, 1918. அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜா)

நோய் நிவாரணத்திற்காக உட்கொள்ளும் மருந்தாக இருந்தாலும் அதையும் சாப்பிடும் முன் ''பிஸ்மில்லாஹ்" என்று கூறுவதே நபிவழி என்பதை இன்னும் பல அறிவிப்புகளிலிருந்து விளங்கலாம். உண்ணும்போது அல்லாஹ்வின் பெயரை நினைவுகூருவதுடன் அல்லாஹ்வின் மீது உறுதியான நம்பிக்கையுடன் உட்கொள்ள வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் ஒரு தொழுநோயாளியின் கையைப் பிடித்து தம்முடன் உணவுத் தட்டில் சேர்த்துக் கொண்டார்கள். ''அல்லாஹ்வின் பெயராலும், அல்லாஹ்வின் மீது உறுதியும் நம்பிக்கையும் கொண்டு உண்பீராக!'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் ஜாபிர் (ரலி) அவர்கள். (நூல்கள்: திர்மிதீ, அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜா, இப்னு ஹிப்பான், ஹாகீம்)

பரகத்

''ஒவ்வொரு நோய்க்கும் அதற்குரிய மருந்துண்டு. நோயுற்றால் மருத்துவம் செய்து கொள்ளுங்கள், அல்லாஹ்வின் நாட்டப்படி நோய் நீங்கும்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் ஜாபிர் (ரலி) (நூல்: முஸ்லிம் 4432)

எல்லா நோய்க்கும் மருந்துண்டு நோயுற்றால் மருத்துவம் செய்யவேண்டும். என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். நோய் குணமாகும் என்றே மருத்துவம் செய்கிறோம். இறைவனின் நாட்டமிருந்தால் நோய் குணமடைந்து பரகத் ஏற்படும் என்பது ஆன்மீகத்தின் ஆழமான நம்பிக்கை.

(இறைவன் மிக்க அறிந்தவன்)

No comments: