நபி صلى الله عليه وسلم அவர்கள் - மதினாவில் அல்லாஹ்வின் மார்க்கத்தைப் பரப்புவதற்கும், மார்க்கத்தைக் கற்றுக் கொடுப்பதற்காகவும் தனது முதல் இஸ்லாமிய அழைப்பாளராக மதினாவுக்கு அனுப்பியது - முஸ் அப் பின் உமைர் رَضِيَ اللَّهُ عَنْهُ - என்ற மிகச் சிறந்த நபித் தோழரைத் தான்!
இவர் 'அல் முக்ரி' - குர் ஆனின் ஞானமுடையவர் - என்று முஸ்லிம்களால் கண்ணியமாக அழைக்கப் பட்டார்.
அவருடைய கருத்துப் பரிமாற்றத் திறனைக் கொஞ்சம் கவனியுங்கள்.
முஸ் அப் அவர்களும் அஸ்அத் இப்னு ஜுராரா رَضِيَ اللَّهُ عَنْهُ என்ற இன்னொரு மதினத்து அன்சாரித் தோழரும் சேர்ந்து அங்கே அழைப்புப் பணியில் ஈடுபட்டனர்.
ஒரு நாள் அஸ்அத் அவர்களும் - முஸ் அப் அவர்களும் அழைப்புப் பணி நிமித்தமாக - ஒரு கோத்திரத்தாரின் தோட்டத்தில் அமர்ந்திருந்தனர்.
இது - மதினத்து கோத்திரங்களைச் சேர்ந்த ஸஅது இப்னு முஆத் மற்றும் உஸைத் இப்னு ஹுளைர் - ஆகிய இரு தலைவர்களுக்குப் பிடிக்கவில்லை.
முஸ்அபும் அஸ்அதும் தங்களின் தோட்டத்தில் அமர்ந்திருக்கின்றனர் என்று கேள்விப் பட்டவுடன் ஸஅத் உஸைதிடம் "நீ நமது எளீயோர்களை ஏமாற்றும் இந்த இருவரிடமும் சென்று அவர்களை எச்சரிக்கை செய்! நமது வீடுகளுக்கு அவர்கள் வரக்கூடாது என்று தடுத்து விடு! நான் அவர்களிடம் கூற முடியாததற்குக் காரணம் அஸ் அத் இப்னு ஜுராரா எனது சிறிய தாயின் மகன் ஆவார். இல்லாவிட்டால் நானே இதனைச் செய்திருப்பேன்" என்று கூறினார்.
உஸைத் தனது ஈட்டியை எடுத்துக் கொண்டு இருவரையும் நோக்கி விரைந்து வந்தார். இதைப் பார்த்து விட்ட அஸ்அத், முஸ்அபிடம் கூறினார்: "இதோ, எனது கூட்டத்தின் தலைவர் வருகிறார். நீங்கள் அவரிடம் அல்லாஹ்வுக்காக உண்மையானவற்றைக் கூறி விடுங்கள்!"
"அவர் என்னுடன் அமர்ந்தால் நான் அவருடன் பேசுவேன்" என்றார் முஸ்அப்.
"நீங்கள் ஏன் இங்கு வந்தீர்கள்! எங்களில் எளியோர்களை ஏமாற்றவா? உங்களுக்கு உயிரின் மீது ஆசை இருந்தால் இங்கிருந்து சென்று விடுங்கள்" என்று கோபமாகப் பேசினார் உஸைத்.
அதற்கு முஸ் அப் அவரிடம் "நீங்கள் அமர்ந்து நான் சொல்வதைக் கேளுங்கள்! உங்களுக்கு விருப்பமாக இருந்தால் ஏற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் விரும்பாவிட்டால் விட்டு விடுங்கள்!" என்று கூறவே -
- உஸைத் "நீங்கள் சொல்வது சரி தான்!" என்று கூறித் தனது ஈட்டியை நட்டு வைத்து அதற்கருகில் அமர்ந்து கொண்டார்.
முஸ் அப் அவர்கள் உஸைதுக்கு இஸ்லாத்தை அறிமுகம் செய்து குர் ஆனை ஓதிக் காட்டினார்கள். இதைக் கேட்டுக் கொண்டிருக்கும் போதே அவர் முகத்தில் மாற்றம் தெரிந்தது!
உடன் அவர் இஸ்லாத்தைத் தழுவுகிறார்!
பின்னர் ஸஅத் இப்னு முஆத் அவர்களுடனும் - இது போன்ற ஒரு சந்திப்புக்கு - ஏற்பாடு செய்யப் பட்டது!
முஸ் அப் அவர்கள் அமைதியாக "சஅதே! அமர்ந்து நான் கூறுவதைக் கேட்க மாட்டீர்களா? உங்களுக்கு நாங்கள் கூறுவது பிடித்திருந்தால் ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்கு நாங்கள் கூறுவது வெறுப்பாக இருந்தால் உங்களுக்கு விருப்பமற்றதிலிருந்து நாங்கள் விலகிக் கொள்கிறோம்" என்று கூறினார்.
சரி - என்று கூறி தனது ஈட்டியை நட்டு வைத்து ஸஅத் அமர்ந்து கொண்டார்.
முஸ் அப் அவருக்கும் இஸ்லாத்தை அறிமுகம் செய்து குர் ஆனை ஓதிக் காட்டினார். அடுத்து ஸஅத் பேசத் துவங்கும் முன்பே அவரது முகத்தில் இஸ்லாம் பிரகாசித்தது!
உடன் அவரும் இஸ்லாத்தைத் தழுவுகிறார்!
இது என்ன விந்தை?
உயிரின் மீது ஆசை இருந்தால் இங்கிருந்து சென்று விடுங்கள் - என்று ஈட்டியுடன் வருகிற ஒருவரை தனது மார்க்கத்துக்குச் சொந்தக் காரராக மாற்றிக் காட்டும் சாகசம்!
இதில் என்ன சூட்சுமம் அடங்கியுள்ளது?
அமருங்கள் பேசுவோம் என்கிறார்.
விருப்பமிருந்தால்.... என்று ஒரு வாய்ப்பைக் கேட்கிறார்.
மார்க்கம் அறிமுகப் படுத்தப் படுகிறது.
குர் ஆன் ஓதிக் காட்டப் படுகிறது.
அவ்வளவு தான்!
வந்தவர் - இஸ்லாத்தில்! - சுப்ஹானல்லாஹ்!
அதே முறை மீண்டும்! அதே பலன் மீண்டும்!
இப்படிப் பட்ட கருத்துப் பரிமாற்றத் திறனை நாம் வேறு யாரிடத்தில் சென்றுக் கற்றுக் கொள்ள முடியும்?
இதில் நாம் கற்க வேண்டிய பாடங்கள்:
1. கோபமாக வருபவரை அமரச் செய்து பேசுவது நல்ல பலனைத் தரும். ஏனெனில் கோபத்தில் "அறிவு" உள்ளே நுழையாது.
2. நபி صلى الله عليه وسلم அவர்களின் வரலாற்று நூலிலிருந்து தான் இந்நிகழ்ச்சியை நாம் படிக்கிறோம். ஆனால் முஸ் அப் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் பேசியதை, அவர் "எப்படி" இதனைப் பேசியிருப்பார் என்று கற்பனை செய்து அசை போட்டுப் பாருங்கள். பேசும் போது அவர் முகத்தில் புன்முறுவல் தவழ்ந்திருக்கும்! அவர் ஈட்டியைக் கண்டு கலவரப் பட்டிருக்க மாட்டார்! அமைதியே உருவாக அவர் அந்தத் தலைவர்களை எதிர் கொண்டிருப்பார்!3. குர் ஆன் வசனங்கள் தாம் உண்மையில் கவர்ந்திழுக்கக் கூடியது, என்பதில் சந்தேகமே இல்லை! ஆனால் - குர் ஆன் வசனங்களை ஓதிக் காட்டுவதற்கு முன்பு - பொறுத்தமான சூழல் ஒன்று (atmosphere) ஏற்படுத்தப் படுதல் அவசியம்.
4. அழைப்புப் பணிக்கு அவசியமான தேவை: கருத்துப் பரிமாற்றத் திறன்.
5. கருத்துப் பரிமாற்றத் திறன் இல்லாதவர்கள் அழைப்புப் பணியில் ஈடு பட்டால் - அது எதி விளைவுகளை ஏற்படுத்தலாம்.
6. நபி صلى الله عليه وسلم அவர்கள் - ஒவ்வொரு பணிக்கும் மிகச் சரியானவரையே தேர்ந்தெடுத்து அனுப்புவார்கள்.
S.A.MANSOOR
Friday, May 15, 2009
ஈட்டியுடன் வருகிற ஒருவரை மாற்றிக் காட்டும் சாகசம்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment