அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Sunday, September 27, 2009

பயங்கரவாதிகளுக்கு ரூ.5,000 கோடி ஹவாலா பணம் புழக்கம் : டில்லியில் பிரபல தொழிலதிபர் மீது வழக்கு


புதுடில்லி : பயங்கரவாதிகளுக்கு ஹவாலா மூலம் 5,000 கோடி ரூபாய் அளவுக்கு பணப் புழக்கத்துக்கு ஏற்பாடு செய்த டில்லியைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் மீது, அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் நடத்திய அதிரடிச் சோதனையில், கணக்கில் காட்டப்படாத பல லட்சம் ரூபாய் கைப்பற்றப் பட்டது. அமெரிக்கா கொடுத்த திடுக்கிடும் தகவலின் பேரில், அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் இந்த நடவடிக்கை மேற்கொண்டனர்.



டில்லியைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் நரேஷ் ஜெயின். இவர், பயங்கரவாதிகளுக்கு ஹவாலா மூலம் பணப் புழக்கம் செய்து வருவதாக அமெரிக்காவின் உள்துறை பாதுகாப்பு அதிகாரிகள், மத்திய அரசுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, அமலாக்கப் பிரிவு அதிகாரிகள், டில்லியின் பிதம்புரா பகுதியில் உள்ள நரேஷ் ஜெயினின் வீடு மற்றும் அலுவலகங்களில் நேற்று அதிரடிச் சோதனை நடத்தினர். இதில், கணக்கில் காட்டப்படாத 60 லட்சம் ரூபாயும், முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப் பட்டன. இதையடுத்து, நரேஷ் ஜெயின் மீது அன்னியச் செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.



இதுகுறித்து அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: அமெரிக்க அதிகாரிகள் கொடுத்த தகவலின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டது. நரேஷ், 5,000 கோடி ரூபாய் அளவுக்கு, ஹவாலா மூலம் பயங்கரவாதிகளுக்கு பணப்புழக்கத்துக்கு ஏற்பாடு செய்துள்ளார். நரேஷ் ஜெயினின் வீடு உட்பட அவருக்கு சொந்தமான எட்டு இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது. ஹவாலா மோசடியின் மூளையாக இவர் செயல்பட்டது தெரியவந்துள்ளது. இவரது ஹவாலா நடவடிக்கை, நைஜீரியா, இத்தாலி, ஆப்கன், சீனா, பாகிஸ்தான் மற்றும் பொலிவியா உட்பட பல்வேறு நாடுகளில் பரவியுள்ளதாகவும் நம்பப்படுகிறது. நரேஷ் ஜெயினுடன் அவரது சகோதரர்கள் பீமல் மற்றும் சத்பல் ஆகியோருக்கும் இதில் தொடர்புள்ளதாகக் கூறப்படுகிறது. இவர்கள், மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் மற்றும் அல்-குவைதா போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கும் ஹவாலா மூலம் பணப் புழக்கத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது தெரியவந்துள்ளது.



பாகிஸ்தான் மற்றும் ஆப்கனைச் சேர்ந்த நபர்களுக்கு பல கோடி ரூபாய் அளவுக்கு பணப் பரிமாற்றம் செய்ததற்கான ஆவணங்களும் கைப்பற்றப் பட்டுள்ளன. சர்வதேச அளவிலான போதை மருந்து கடத்தல் கும்பல் மற்றும் ஹவாலா ஆப்பரேட்டர்களுடனும் ஜெயினுக்கு தொடர்புள்ளது தெரியவந்துள்ளது. இது குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது. ஜெயின் மற்றும் அவரது சகோதரர்களை தற்போது தொடர்பு கொள்ள முடியவில்லை. இவ்வாறு அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.



பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி உதவி அளித்தது தொடர்பான குற்றத்துக்காக, பிரிட்டன் உளவு நிறுவனம் கொடுத்த தகவலின் பேரில், கடந்த 2007ல் துபாய் போலீசாரால் நரேஷ் ஜெயினும், அவரது உதவியாளர்களும் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: