அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Friday, October 2, 2009

புதிய பாலம் திறந்த 2 நாளில் 2 விபத்துகள் - பாலம் மூடல்

மதுரை அருகே கொட்டாம்பட்டியிலுள்ள மதுரை-திருச்சி நான்குவழிச்சாலையில் புதிதாக கட்டப்பட்ட பாலம் திறக்கப்பட்ட 2 நாட்களில் தொடர்ந்து 2 விபத்துக்கள் நடந்தன. இதனையடுத்து மாற்றுப்பாதை கோரி, கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டதைத் தொடர்ந்து அப்பகுதியில் தற்காலிகமாக நான்குவழிச்சாலை மூடப்பட்டது.

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி பகுதி மதுரை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் முக்கிய சந்திப்பாகும். மேலும் திண்டுக்கல் - காரைக் குடி சாலையும் கொட்டாம்பட்டியில் சந்திக்கிறது. ஏற்கனவே இந்தப் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை ஒன்றும் உள்ளது. தற்போது இப்பகுதியில் திருச்சி-மதுரை நான்குவழிச்சாலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நான்கு வழிச்சாலையில் வயல்சேரிப்பட்டி அருகே புதிய பாலம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்தப் பாலம் நேற்று முன்தினம் போக்குவரத்திற்காக திறந்து விடப்பட்டது. அதனைத் தொடர்ந்து திருச்சியில் இருந்து மதுரை நோக்கி வாகனங்கள் இந்தப் பாலம் வழியாக சென்று வரத் தொடங்கின.

கிராமப்பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் இப்புதியபாலம் வழியாகவே செல்ல வேண்டும். ஆனால் கிராமத்தில் இருந்து வரும் சாலை பள்ளமாகவும் பாலம் மிக உயரத்திலும் அமைந்துள்ளது. இதனால் கிராம சாலையில் வரும் வாகனங்கள் பாலத்தில் ஏறும் போது நான்கு வழிச்சாலையில் வேகமாக வரும் வாகனங்களுக்குத் தெரிவதில்லை. பாலம் உயரத்தில் இருப்பதால் கிராம சாலையில் இருந்து வரும் வாகனங்களும் வேகமாக வந்தாலே பாலத்தில் ஏற முடியும்.இதன் காரணமாக, பாலம் திறக்கப்பட்ட 2 தினங்களில் அடுத்தடுத்து 2 விபத்துகள் நடந்துவிட்டன. பாலம் திறக்கப்பட்ட நேற்று முன்தினம் மாலை சொக்கம்பட்டியை சேர்ந்த கருப்பையா என்பவர் மீது வாகனம் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர், மதுரை பெரிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

நேற்று தொந்திலிங்கபுரத்தை சேர்ந்த குமார்(35) மற்றும் சாமிநாதன்(25) ஆகியோர் வயல்சேரிபட்டி ரோட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில், நான்குவழிச்சாலையில் ஏறினர். அப்போது கார் மோதியதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். குமாரின் 2 கால்களும் ஒரு கையும் முறிந்தன. இருவரும் மதுரை பெரிய மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

அடுத்தடுத்து நடந்த விபத்துக்களால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று சாலை மறியலில் இறங்கினர். வலைச்சேரிப்பட்டி, சொக்கம்பட்டி, வலையங்குளத்துப்பட்டி, வேலாயுதம்பட்டி, தொந்திலிங்கபுரம் ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்கள் ஒன்று திரண்டு புதிய நான்கு வழிச்சாலையிலும் பழைய சாலையில் போலீஸ் ஸ்டேஷன் அருகிலும் காலை 9.30 மணிக்கு மறியலில் இறங்கினர். இதனால் அந்தச் சாலையில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த வாகனங்கள், சிங்கம்புணரி, புழுதிப்பட்டி வழியாக மாற்றிவிடப்பட்டன. மறியல் தொடரவே சம்பவ இடத்திற்கு மேலூர் டி.எஸ்.பி. விஜயபாஸ்கரன், இன்ஸ்பெக்டர் பாலாஜி, கொட்டாம்பட்டி இன்ஸ்பெக்டர் சண்முகம், சப்-இன்ஸ்பெக்டர் பொம்மையசாமி, தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய மேலாளர் சுரேந்திரநாத், பொறியாளர்கள், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ஜெகநாதன், மண்டல துணை வட்டாட்சியர் விவேகானந்தன், வருவாய் ஆய்வாளர் விஜயலெட்சுமி, தி.மு.க. ஒன்றிய செயலாளர் துரை ராஜேந்திரன் உள்ளிட்டோர் வந்து, மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

கிராம மக்கள் தரப்பில், "தற்போது உள்ள பாலத்திற்குப் பதில் தாங்கள் சென்று வர பக்கவாட்டு சாலை அமைக்க வேண்டும்; அதுவரை பாலத்தில் போக்குவரத்தை அனுமதிக்கக் கூடாது" என கோரிக்கை வைக்கப்பட்டது. நீண்ட நேரம் நடந்த பேச்சுவார்த்தையின் இறுதியில், பாலத்தைத் தற்காலிகமாக மூடுவது என முடிவு செய்யப்பட்டது. மேலும், இந்தப் பிரச்சினை குறித்து வரும் 10-ந் தேதி மேலூர் தாசில்தார் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. இதையடுத்து கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.


No comments: