இந்த படத்தில் இந்த கோயில் ஏன் பூட்டப்பட்டுள்ளது ?
இன்றும் தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு மூலையில் ( இந்தியாவில் என்று படியுங்க ) தாழ்த்தப்பட்டவர்கள் பொது இடங்களில் நடத்தப்படும் அவலம் இன்றும் இருக்கிறது. இந்த அவலத்தை முற்றிலும் ஒழிப்பவர்களுக்கு சாமாதானத்திற்கான நோபல் பரிசை 'sur'prize'க கொடுக்கலாம்.
சரி, பக்கத்தில் உள்ள படம் விருதுநகர், பாவை கிராமத்தில் இருக்கும் கண்ணிமர் கோயில், தலித் மக்கள் உள்ளே போகாமல் இருக்க இந்த பூட்டு. இது வெறும் சாம்பிள் தான் தமிழ்நாட்டில் இது போல பல இடங்களில் இது தொடர்கிறது.
தமிழகத்தில், தாழ்த்தப்பட்டவர்களை இரட்சிப்பதற்காகவே அவதரித்திருக்கும் பல அவதார புருஷர்களுள் மிக முக்கியமானவர் திருமாவளவன். தீண்டாமை ஒழிப்பு (??) , மதச்சார்பின்மை (??) மற்றும் சமூக வேற்றுமைகளைக் களையக் கூடிய அனைத்து தளங்களிலும் தான் பாடுபடுவதாக தன்னை முன்னிறுத்திக் கொள்பவர். ஆனால் சமீப காலங்களில் தமிழகத்தில் நிகழ்ந்து வரும் சாதீயக் கொடுமைகளை எதிர்ப்பதில், களைவதில் இவருடைய பங்கு என்ன என்பது சரிவரத் தெரியவில்லை; பெரும் புதிராகவே இருக்கிறது. உயர்சாதி ஹிந்துக்களால் (இவர்களுடைய பாஷையில் பார்ப்பனர்கள்) தலித் மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை வெளிக்கொணர்ந்து, உயர்சாதி ஹிந்துக்களின் சாதீய வெறியைத் தோலுரிப்பதே இவர்களது கொள்கை என கூறப்படுகிறது. அதையொட்டி பல கூட்டங்களில் இவர்களே முழங்கியுள்ளனர். ஆனால் இதன் பலனென்னவோ தெரியவில்லை.
இன்னமும் தென் மாவட்டங்கள் பலவற்றில் தீண்டாமைக் கொடுமை என்னவோ இருந்து கொண்டுதான் இருக்கிறது. சமீபத்தில் உத்தபுரத்தில் கூட ஒரு பிரச்சனை கிளம்பியது; உயர்சாதி ஹிந்துக்களுக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்குமிடையே தீண்டாமைச் சுவர் எழுப்பப்பட்டிருப்பதாக ஒரு பிரச்சனை இடதுசாரிகளால் கிளப்பப்பட்டு, பல தலைவர்கள் விஜயம் செய்து தினமும் பத்திரிக்கைகளில் இடம்பெற்றனர். ஊர் மக்கள் மலையடிவாரத்திற்குச் சென்று போராட்டம் நடத்தினர். சுவரும் இடிக்கப்பட்டது. ஆனால் அங்கு தீண்டாமை களையப்பட்டு விட்டதா?? தாழ்த்தப்பட்டவர்களுக்கு சமவுரிமை கிட்டியதா??
இந்த பிரச்சனை இந்துக்களிடம் மட்டும் தான் இருக்கிறது என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. இந்த படத்தை பாருங்க.
தேனி மாவட்டத்தில் உள்ள அனுமந்தான்பட்டி என்ற இடத்தில் தலித் கிறுத்துவர்கள் கோயிலுக்கு வெளியே தொழுகிறார்கள் என்று.
விழுப்புரம் அருகே அமைந்துள்ள எறையூரில் நெடுங்காலமாக, தலித் கிறித்தவர்கள் மற்றும் வன்னிய கிறித்தவர்களுக்கிடையே பிரச்சனை இருந்து கொண்டு வருகிறது. சென்ற வருடம் பிரச்சனை வலுக்கவே அரசியல்வாதிகள் தலைமையில் சமரச முயற்சிகள் நடந்து தற்காலிகமாக பிரச்சனை முடக்கி வைக்கப்பட்டது. எறையூரில் இருக்கும் கத்தோலிக்க தேவாலயத்தில் வன்னிய கிறித்தவர்கள் மற்றும் தலித் கிறித்தவர்கள் ஆகியோர் உறுப்பினர்களாக இருக்கின்றனர். மக்கள்தொகையில் வன்னியர்களை அதிகம் கொண்டுள்ள எறையூரில், தேவாலயத்தில், தலித் கிறித்தவர்களுக்கு சமவுரிமை வழங்கப்படுவதில்லை என்றும், சவ ஊர்வலத்தில் வன்னியர்கள் பயன்படுத்தும் சவ ஊர்தியை, தலித்துகள் பயன்படுத்தக் கூடாது என்றும் பல கட்டுப்பாடுகள். சாதீய வேறுபாடுகளே இல்லாத மதம் என்று மதச்சார்பின்மையாளர்களால் சான்றளிக்கப்பட்ட கிறித்தவத்தில் எங்கிருந்து தலித்துகளும், வன்னியர்களும் முளைத்தனர்?? இது தவிர கிறித்தவ நாடார், வேளாளர், இப்பொழுது பெசன்ட் நகரில் புதிதாக கிறித்தவ பிராமணர்கள் கூட அவதரித்துள்ளனர். ஹிந்து மதத்தில் இருக்கும் சாதீயக் கொடுமைகளைக் களைந்து, தாழ்த்தப்பட்டோருக்கு புனர்வாழ்வு அளிப்போம் என்று கூறிக் கொண்டுதான் மதச்சார்பற்றோரின் முழு ஆதரவுடன் தமிழகத்தில் மதமாற்றம் பன்னெடுங்காலமாக நடைபெற்று வருகிறது.
இவ்வாறாக, சென்ற ஆண்டு தற்காலிகமாக சமரசம் செய்து வைக்கப்பட்ட எறையூர் பிரச்சனை, திரும்பவும் பூதாகாரமாகக் கிளம்பியுள்ளது. அதாவது, உயர்சாதிக் கிறித்தவர்களான வன்னியர்கள், தாழ்த்தப்பட்டவர்களான தலித் கிறித்தவர்களை மிகவும் மரியாதை குறைவாக நடத்துவதாகவும், வயது வேற்றுமையின்றி அனைத்து தலித் கிறித்தவர்களையும், வன்னிய சிறுவர்கள் கூட ஒருமையிலேயே அழைப்பதாகவும், மற்றும் டீக்கடைகளில் இரட்டை டம்ளர் முறை இங்கு அமலில் உள்ளதாகவும், மேலும் பல குற்றச்சாட்டுகளையும் அடுக்கி, எறையூரில் உள்ள தலித் கிறித்தவர்கள் நேற்றைய தினம் ஊர் சர்ச் திருவிழாவைப் புறக்கணித்து, ஊரை விட்டே வெளிநடப்பு செய்துள்ளனர்.
அரசியலில் மருத்துவர் இராமதாசு அய்யாவும், தமிழ்க்குடிதாங்கி திருமாவளவனும் மிகுந்த இணக்கமானவர்கள். தேர்தலில் வெவ்வேறு கூட்டணியிலிருப்பினும், பொதுவாழ்க்கையில் இணைபிரியாதவர்கள் என்று தங்களைக் கூறிக் கொள்பவர்கள். இப்பொழுது பூதாகாரமாகக் கிளம்பியுள்ள எறையூர் பிரச்சனையில் இவ்விருவரின் அணுகுமுறை எவ்வாறு இருக்கப் போகிறது?? குஜராத் முதல்வர் மோதி, மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபடுபவர்கள் கடவுளுக்குச் சமானமாக பூஜிக்கத் தகுந்தவர்கள் என்று கூறியதை அரை வேக்காட்டுதனமாகப் புரிந்து கொண்டு, அவருக்கெதிராக கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன் கோஷ்டியினர் சில ஆண்டுகளுக்கு முன்பு ஈடுபட்டனர். ஆனால் இப்பொழுது தமிழகத்திலுள்ள ஒரு ஜாதி கட்சியின் தலைவருடைய ஜாதியினர், தாழ்த்தப்பட்டவர்களைக் கேவலமான முறையில் நடத்துவதைக் கண்டு திருமா கொதித்தெழுவாரா? என்ன செய்யப் போகிறார்??
"சதிக்கு கால் முளைத்து சாதியாகி விட்டது " என்று மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். அதே போல "நான் சாதி, மதம் பார்ப்பவன் இல்லை. ஏழைகளின் கஷ்டத்தை பார்க்கிறேன்." இது கேப்டன். கலைஞர் பொங்கல் வாழ்த்து இது "பொங்கல் திருநாளன்று, வீடுகள், அரசு அலுவலகங்கள் அனைத்திலும் உற்சாகமாகவும், சாதி, மத, இன வேறுபாடுகள் இன்றி சமத்துவ பொங்கல்".
படத்தில் இருப்பது சங்கரன் கோயிலில் கீழே உட்கார்ந்து டீ குடிக்கும் தலித்துக்கள். அவர்கள் நாற்காலியில் உட்கார கூடாது. இவர்களுக்கு தேவை பொங்கலா ?
தேர்தல் தொகுதி பங்கீடு எப்படி நடக்கிறது என்று நமக்கு நன்றாகவே தெரியும். சாதிக் குறியீடு பற்றி கேலி பேசும் இவர்கள், தங்கள் மனதில் ஆழமாக இருக்கும் இவர்களின் சாதிக் குறியீடுகளை எப்போது அழிக்க போகிறார்கள்.
கடைசி படம்: பிப்4, 1946, காந்தியடிகள் மதுரை மீனாட்சி கோயிலில் தலித்துக்களை அழைத்துக்கொண்டு சென்ற படம்.
No comments:
Post a Comment