கோவை: கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இருவர், ஐகோர்ட் உத்தரவுப்படி நேற்று விடுவிக்கப்பட்டனர். கோவையில் 1998, பிப்., 14ல், தொடர் குண்டு வெடிப்பு நடந்தது. 50க்கும் அதிகமானோர் பலியாகினர்; 250க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காயமடைந்தனர்.
சி.பி.சி.ஐ.டி., சிறப்பு புலனாய்வு பிரிவினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி "அல்-உம்மா' பாஷா, அன்சாரி உட்பட 167 பேரை கைது செய்தனர். வழக்கு விசாரணைக்குப்பின், கேரள மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மதானி உட்பட எட்டு பேர் விடுதலை செய்யப்பட்டனர். தனிக்கோர்ட் விதித்த தண்டனையை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதன் மீதான விசாரணை முடிந்து, சமீபத்தில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், "18 வயதுக்கு கீழ் இருந்த எங்களை போலீசார் கைது செய்து, குண்டு வெடிப்பு வழக்கில் சேர்த்து விட்டனர்.
தனிக்கோர்ட் விதித்த தண்டனையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்' என, ஆயுள் தண்டனை பெற்ற ஆத்துப்பாலத்தைச் சேர்ந்த முஜிபுர் ரகுமான், மேலப்பாளையத்தைச் சேர்ந்த அம்ஜத் அலி சென்னை ஐகோர்ட்டில் முறையீடு செய்தனர். இம்மனுவை விசாரித்த ஐகோர்ட், கடந்த வாரம் இருவரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டது. ஐகோர்ட் உத்தரவு நேற்று, கோவை மத்திய சிறைக்கு வந்தது. இதைத் தொடர்ந்து, 11 ஆண்டுக்கு பின், இருவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
No comments:
Post a Comment