புதுதில்லி, மார்ச்.1: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் 10 தொலைத்தொடர்பு நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் உள்ளிட்ட 63 பேர் தங்களது கண்காணிப்பின்கீழ் உள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.
இந்த வழக்கின் விசாரணை திருப்திகரமாக இருப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
2ஜி வழக்கில் சிறப்பு நீதிமன்றம் அமைக்க ஆதரவு தெரிவித்த மத்திய அரசு, இதற்காக நீதிமன்றத்தையும், நீதிபதியையும் நியமிக்குமாறு கேட்டு தில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு சட்ட அமைச்சர் கடிதம் எழுதியிருப்பதாகத் தெரிவித்தது.
இந்த விவகாரம் பரிசீலனையில் உள்ளது என கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் இந்திரா ஜெய்சிங் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்குலி ஆகியோர் கொண்ட பெஞ்சிடம் தெரிவித்தார்.
சிபிஐ சார்பாக ஆஜரான வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், இந்த வழக்கு குறித்த சிபிஐயின் விசாரணை அறிக்கையை சீலிட்ட உறையில் வைத்து நீதிமன்றத்தில் அளித்தார்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு விசாரணையில் சிபிஐயின் கண்காணிப்பின்கீழ் 10 நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் புரமோட்டார்கள் உள்ளிட்ட 63 பேர் உள்ளதாக வேணுகோபால் தெரிவித்தார்.
சிபிஐயும், அமலாக்கத் துறையும் தங்களது விசாரணை அறிக்கையை மார்ச் 10-ம் தேதிக்குள் அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட நீதிமன்றம் இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை மார்ச் 15-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
டாடா குழுமத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே விசாரணையை மூடப்பட்ட அறைக்குள் நடத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.
இந்த வழக்கு விசாரணையை சிபிஐ சுதந்திரமாக நடத்தலாம் என அனுமதி வழங்கி இருந்த நீதிமன்றம், இதுதொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு நீதிமன்றத்தை அரசு அமைக்க வேண்டும் எனக் கேட்டிருந்தது.
இந்த வழக்கில் மனுதாரர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரிலையன்ஸ் அனில் அம்பானியின் கட்டுப்பாட்டில் உள்ள ஸ்வான் டெக்னாலஜி நிறுவனத்தினர் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் தலைவர்கள் விசாரிக்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டியிருந்தார்.
அதற்கு உச்சநீதிமன்றம், தொலைத்தொடர்பு நிறுவனங்களின் உயர்மட்டத்தினர் விசாரிக்கப்படவில்லை. நிர்வாக இயக்குநர்களுக்கு சம்மன் அனுப்பப்படாதது வியப்பளிக்கிறது எனத் தெரிவித்திருந்தது
No comments:
Post a Comment