டிரிபோலி : லிபியாவின் கிழக்குப் பகுதியை ஏற்கனவே கைப்பற்றிய கடாபி எதிர்ப்புப் புரட்சிப் படைகள், நேற்று முன்தினம் முக்கிய நகரங்களான ஜாவியா மற்றும் மிஸ்ரட்டாவைக்கைப்பற்றிவிட்டன. தொடர்ந்து தலைநகர்டிரிபோலியை நெருங்கிக் கொண்டிருக்கின்றன. டிரிபோலியில் எந்நேரமும் கடாபி ஆதரவு மற்றும் எதிர்ப்புப் படைகளுக்கு இடையில் இறுதிக் கட்ட மோதல் ஏற்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது.
எனினும் ஜாவியா நகரின் வெளிப் பகுதியில் 2,000 ராணுவ வீரர்கள், எதிர்ப்பாளர்களைத் தாக்கத் தயார் நிலையில் உள்ளனர். மிஸ்ரட்டாவின் பெரும் பகுதியையும் எதிர்ப்பாளர்கள் கைப்பற்றி விட்டனர். டிரிபோலிக்கு வெளியே 28 கி.மீ., தூரத்தில் தற்போது எதிர்ப்பாளர்கள் நிலை கொண்டுள்ளனர். அந்நகரில் உள்ள அரசு வானொலி கட்டடம் மீது குண்டு வீசித் தாக்கிய விமானம் ஒன்றை எதிர்ப்பாளர்கள், துப்பாக்கிச் சூடு நடத்தி தாக்கினர். இதனால் அந்த விமானம் வேறு வழியின்றித் தரையில் இறங்கியது. அதில் இருந்தவர்களை எதிர்ப்பாளர்கள் சிறை பிடித்தனர்.
டிரிபோலியில் அச்சம்: பெங்காசியில் உள்ள ராணுவப் பிரிவின் தலைவர் கர்னல் ரமாதான், டிரிபோலியை நெருங்கிச் செல்லும் எதிர்ப்பாளர்களுக்கு உதவத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார். இதனால் டிரிபோலியில் எந்நேரமும் பயங்கர மோதல் மூளலாம். டிரிபோலியின் புறநகர்ப் பகுதியான டஜோராவில், கடாபி ஆதரவாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டிரிபோலியின் சில பகுதிகளில், பொதுமக்கள், தடுப்புகளை ராணுவ வீரர்கள் மீது தூக்கி எறிந்தனர். சிலர் ராணுவப் படைத்தளங்களைச் சூறையாடி, ஆயுதங்களைக் கைப்பற்றினர்.
கடாபியை நீக்க ஆலோசனை: இந்நிலையில், சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடந்து வரும், ஐ.நா., மனித உரிமை அமைப்பின் மாநாட்டில் கலந்து கொண்ட அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், கடாபியை உடனடியாக லிபியாவில் இருந்து வெளியேற்றுவது குறித்து பிரிட்டன், இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாட்டு வெளியுறவு அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இதற்கிடையில் லிபியா மீது, ஆயுதப் பரிமாற்றம், சொத்து முடக்கம் உள்ளிட்ட பல்வேறு பொருளாதாரத் தடைகளை ஐரோப்பிய யூனியனும் நேற்று விதித்தது. லிபியாவின் மிக நெருங்கிய நட்பு நாடான இத்தாலி, கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகள் கடாபி உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வலியுறுத்தியுள்ளன.
No comments:
Post a Comment