அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Tuesday, April 26, 2011

தேர்தலில் கலைஞர் வென்றால் அல்லது தோற்றால்.....


நடந்த சட்டசபை தேர்தலில் ஒருவேளை தி.மு.க-வே மீண்டும் வென்றால்.....கலைஞர் எப்படி அறிக்கை விடுவார் ஒரு கற்பனை....

உடன் பிறப்பே,
தமிழக அரசியல் வரலாற்றில் எந்தக்காலத்திலும் இல்லாத அளவிற்கு ஒரு ஆளுங்கட்சிக்கு பல திக்குகளிலிருந்தும் எதிர்ப்புக்கணைகள் தொடுக்கப்பட்டன.அவையனைத்தும் முனை முறிந்து போகும் வண்ணம் செய்த பெருமை மக்கள் சக்திக்குத்தான் உரியது.
தேர்தல் ஆணையத்தின் இத்தனை கெடுபிடிகளையும் மீறி கழகம் பெற்றிருப்பது சாதாரண வெற்றியல்ல..ஜனநாயகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. ஒரு ரூபாய் அரிசி, இலவச வண்ண தொலைக்காட்சி, கலைஞர் காப்பீட்டு திட்டம், கலைஞர் வீட்டு வசதி திட்டம், 108 ஆம்புலன்ஸ், கேஸ் அடுப்பு என்று கழக அரசின் சாதனைகளை உணர்ந்தவர்களும், சலுகைகளை பெற்றவர்களும் நன்றி உணர்வு மிக்கவர்கள் என்பதையே இந்த தேர்தல் வெற்றி உணர்த்துகிறது.
ஏழை எளிய மக்களின் இதய சிம்மாசனத்தில் எங்களுக்கு கிடைத்திருக்கும் இடத்தை அம்மையாரால் அகற்ற முடியவில்லை....அகற்ற முடியாது என்பதற்கு இதைவிட புகழ்பெற்ற சான்று வேறு இருக்க முடியாது.
கொடநாட்டு அம்மையாருக்கு மரண அடி கொடுத்து மீண்டும் கழக ஆட்சி தொடர வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி...இதற்காக அயராது பாடுபட்ட கூட்டணி கட்சி தலைவர்களுக்கு நன்றி...மேலும் புயலென சுற்றி வந்த வைகைபுயல், கருப்பு நாகேஷ் தம்பி வடிவேலு, திராவிட திருவிளக்கு குஷ்பு ஆகியோருக்கும் நன்றி...இந்த வெற்றி மலர்களை எங்களை ஆளாக்கிய பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார், காஞ்சி தலைவன் அறிஞர் அண்ணா அவர்களின் பாத மலர்களுக்கு காணிக்கை ஆக்குகிறேன்.

**********************************

ஒரு வேளை தி.மு.க-தோற்றால்....

உடன் பிறப்பே,
தோல்வி கண்டு துவண்டு விடாதே, 1962-இல் காஞ்சியில் நமது அண்ணனின் தோல்வியை மனதில் வைத்து ஆறுதலடைந்து கொள்...ஊக்கம் பெறு....

நடந்து முடிந்த ஆரிய திராவிட யுத்தத்தில் நாம் தோற்கடிக்க பட்டிருக்கிறோம்....இல்லை.... இல்லை...வெற்றி வாய்ப்பை தற்காலிகமாக இழந்திருக்கிறோம்.
தேர்தல் ஆணையத்தை கைக்குள் போட்டுக்கொண்டு கொடநாட்டு அம்மையார் வெற்றி பெற்றிருக்கிறார் என்று சொல்லாம்....ஆனால், அரசியல் நாகரீகம் கருதி அப்படி சொல்லவில்லை.
நமக்கான தோல்வி என்பது ஒரு செயற்கையான தோல்வி. தேர்தல் ஆணையமும், ஆரிய பத்திரிகைகளும் திராவிடர்களுக்கான நமது ஆட்சியை ஒழிப்பதில் எவ்வளவு தீவிரம் காட்டினார்கள் என்பதை நான் அறியாதவனல்ல....

தோல்வியை கண்டு துவள்பவன் அல்ல...தோல்வியையும், வெற்றியையும் ஒன்றாக கருதுபவன் தான் இந்த கருணாநிதி என்பதை நீங்கள் அறிவீர்கள். அதுதான் ஈரோட்டு குருகுலத்திலும், காஞ்சி தலைவனிடத்திலும் நான் பயின்ற பால பாடம்.

பதவியில் இருந்துதான் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதில்லை. பதவியில் இல்லாவிட்டாலும் திரை படங்களுக்கு வசனம் எழுதுவது, இலக்கியங்கள் படைப்பது என்று என் பணி தொடரும்.

பதவி என்பது தோளில் கிடக்கும் துண்டு போல....மானம் என்பது இடுப்பில் கட்டியிருக்கும் வேட்டி போல...நாம் இப்போது துண்டைத்தான் இழந்திருக்கிறோமே தவிர வேட்டியை அல்ல....

ஜெயித்தால் அண்ணா வழி...தோற்றால் பெரியார் வழி....இதுதான் காலங்காலமாக நான் கடை பிடித்து வரும் கொள்கை. இனி பெரியார் வழியில் என் பயணம் தொடரும்....கலங்காதே....

No comments: