அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Monday, October 3, 2011

கனிமொழி ஜாமீன் விசாரணை ஒத்திவைப்பு

இரண்டாம் தலைமுறை செல்லிடத் தொலைபேசி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள திமுக எம்.பி. கனிமொழி மற்றும் கலைஞர் தொலைக்காட்சி மேலாண் இயக்குநர் ஷரத்குமார் ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை, இம் மாதம் 17-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


இந்த வழக்கில் குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்ட பிறகு, தங்கள் ஜாமீன் மனுக்களை விசாரிக்குமாறு, அவர்கள் தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கை அடிப்படையில், விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

இந்த வழக்கில், குற்றச்சாட்டுக்களைப் பதிவு செய்யும் நடைமுறைகளை 15-ம் தேதிக்குள் நிறைவு செய்ய விரும்புவதாகவும், அதன்பிறகு இருவரது ஜாமீன் மனுக்களையும் பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்வதாகவும் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. சைனி தெரிவித்தார்.
கனிமொழி மற்றும் ஷரத்குமார் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் சுஷில்குமார் மற்றும் அல்டாஃப் அகமது ஆகிய இருவரும், ஜாமீன் மனுக்களைப் பொருத்தவரை, உச்சநீதிமன்ற உத்தரவின்படி நடந்துகொள்வதாகத் தெரிவித்தார்கள். கடந்த ஜூன் 20-ம் தேதி இருவரது ஜாமீன் மனுக்களையும் விசாரித்த உச்சநீதிமன்றம், குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்ட பிறகு, விசாரணை நீதிமன்றத்தில் அவர்கள் ஜாமீன் கோரலாம் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கனிமொழி, ஷரத்குமார், முன்னாள் அமைச்சர் ஆ. ராசாவின் முன்னாள் தனிச்செயலர் ஆக்.கே. சந்தோலியா, ஸ்வான் டெலிகாம் உரிமையாளர் ஷாகி்த் உஸ்மான் பால்வா, குசேகான் ஃப்ரூட்ஸ் அன்ட் வெஜிடபிள்ஸ் நிறுவன இயக்குநர்கள் ஆஸிஃப் பால்வா மற்றும் ராஜீவ் அகர்வால், சினியூக் பிலிம்ஸ் நிறுவன இயக்ககுநர் கரீ்ம் மொரானி ஆகிய ஏழு பேர் ஜாமீன் மனு தாக்கல் செய்திருக்கிறார்கள்.
சிபிஐ எதிர்க்கவில்லை
அதுதொடர்பாக நேற்று நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்த சிபிஐ, கனிமொழி மற்றும் கரீம் மொரானியின் மனுக்கள் தொடர்பாக பொருத்தமான உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது. அதாவது அவர்களுக்கு ஜாமீன் வழங்குவதை எதிர்க்கவில்லை. மற்ற ஐந்து பேருக்கும் ஜாமீன் வழங்கக் கூடாது என சிபிஐ தெரிவித்துள்ளது.
கனிமொழியும், கரீம் மொரானியும் குற்றவியல் நடைமுறை சட்ட விதி 437-ன் கீழ் ஜாமீன் கோரியிருக்கிறார்கள். அதன்படி, 16 வயதுக்குட்பட்டவர்கள், பெண்கள், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டவர்கள் ஜாமீன் கோர உரிமை உண்டு. கனிமொழி, தான் பெண் என்பதாலும், பள்ளிக்குச் செல்லும் மகனைக் கவனிக்க வேண்டியிருப்பதாலும் ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கோரியுள்ளார். கரீம் மொரானி உடல்நலக்குறைவைக் காரணம் காட்டியுள்ளார்.
கனிமொழியைப் பொருத்தவரை, விசாரணை முடிந்து, கூடுதல் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுவிட்டதாக சிபிஐ தெரிவித்துள்ளது.
மற்ற ஐந்து பேரின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை அக்டோபர் 3-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
புதிய குற்றச்சாட்டுக்கு கனிமொழி எதிர்ப்பு
இதனிடையே, நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டின் கீழ் தங்கள் மீது புதிய குற்றம் சாட்டப்பட்டிருப்பதை எதிர்த்து, கனிமொழியும், ஷரத்குமாரும் சனிக்கிழமை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்கள்.
அலைக்கற்றை உரிமங்கள் ஒதுக்கீட்டில் கனிமொழிக்கும் ஷரத்குமாருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை, அதேபோல், அலைக்கற்றை உரிமங்களால் அவர்கள் பயனடையவும் இல்லை என்று அவர்களது மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அவர்கள் சதித்திட்டம் இருந்ததாக சிபிஐ கூடக் குற்றம் சாட்டவில்லை என பதில் மனுவில் தெரிவி்ககப்பட்டுள்ளது.
தன் மீது புதிய குற்றச்சாட்டைச் சுமத்த நினைத்தாலும், தான் பொதுமக்கள் பிரதிநிதி என்பதால், அவ்வாறு புதிய குற்றச்சாட்டைச் சுமத்துவதற்கு முன் அனுமதி பெறப்பட வேண்டும் என்று கனிமொழி தனது பதிலில் குறிப்பிட்டிருக்கிறார்.
ஆ.ராசா உள்பட அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேர் மீது 409-வது பிரிவின் கீழ், நம்பிக்கை மோடி குற்றச்சாட்டும், கனிமொழி உள்ளிட்ட மேலும் 14 பேர் மீது கிரிமினல் சதித்திட்டத்தில் உடந்தை தொடர்பான குற்றச்சாட்டும் புதிதாக சுமத்தப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தின்கீழ், அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்க முடியும். முதலில் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டின் கீழ், குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு அதிகபட்சம் ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும்.

No comments: