ஈரானும் ரஷ்யாவும் சீனாவும் டமஸ்கஸ் அரசாங்கம் மேற்கொள்ளும் படுகொலைகளுக்குத் துணைபோகின்றன. அதில் அவர்களும் பங்காளிகளாக உள்ளனர் என சிரிய இஹ்வான்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
"எமது மக்கள் மீது ஈவிரக்கமின்றி கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள படுகொலைகளுக்கு ஈரானும் ரஷ்யாவும் சீனாவும் நேரடிப் பொறுப்பாளிகள் என்றே நாங்கள் கருதுகிறோம்" என சிரிய இஹ்வான்களின் பேச்சாளர் ஸுஹைர் ஸாலிம் குற்றம்சாட்டியுள்ளார். அவர் இது தொடர்பாக அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளார்
.இந்த மூன்று நாடுகளும் பஷர் அல் அஸதின் அரசாங்கத்திற்கு இராணுவத்தினரையும் உபகரணங்களையும் வழங்கி வருகின்றன எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
"இவ்வாறு செய்வதன் மூலம் எமது அப்பாவி மக்களுக்கு எதிரான படுகொலைகளில் அவர்கள் நேரடியாகப் பங்கெடுக்கின்றனர்" எனவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"அறபு நாடுகளே! முழு உலகத்தார்களே!! சிரிய அரசாங்கம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிராக மேற்கொண்டுவரும் இன அழிப்பு நடவடிக்கைக்கு, தார்மீக அரசியல் பொறுப்பை எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். முழு உலகமும் சிரிய மக்களுக்கு எதிரான இந்தப் படுகொலையை நிறுத்த வேண்டும்" என அதில் மேலும் கூறப்பட்டுள்ளது.
"இந்த நாஸி-பாஸிஸ அரசு மேற்கொள்ளும் படுகொலைகளை மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்தால், அது அவர்களை மேலும் படுகொலை செய்யவே தூண்டும்" எனவும் அவர் வேண்டியுள்ளார்.
தினமும் நூற்றுக்கணக்கானோர் சிரியாவில் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது வரை பல்லாயிரக்கணக்கானோர் அங்கு படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment