புதுடில்லி:ஐந்து மாநில தேர்தல்கள் முடிந்த நிலையில் பெட்ரோல் விலையை 5 ரூபாய் வரை உயர்த்தும் படி, எண்ணெய் நிறுவனங்கள் மத்திய அரசைக் கோரி வருகின்றன.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு ஏற்ப, பெட்ரோல் விலையை உயர்த்திக் கொள்ளும் உரிமை, இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் டீசல், மண்ணெண்ணை, சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையை உயர்த்தும் அதிகாரம் மத்திய அரசிடமேயுள்ளது.இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்களுக்கு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு ஏற்ப பெட்ரோல் விலையை உயர்த்திக் கொள்ள கடந்த 2010ம் ஆண்டு ஜூன் மாதம் அதிகாரம் அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து இந்த நிறுவனங்கள் இதுவரை 10 முறைக்கு மேல் பெட்ரோல் விலையை உயர்த்தி விட்டன. கடைசியாகக் கடந்த டிசம்பர் 1ம்தேதி பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டது. அதன் பிறகு ஐந்து மாநில தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விட்டதால் மத்திய அரசின் நிர்பந்தத்தினால் இந்த நிறுவனங்கள் பெட்ரோல் விலையை உயர்த்தவில்லை.
தற்போது ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 5.10 ரூபாய் வரை இழப்பு ஏற்படுவதாக இந்த நிறுவனங்கள் வருத்தம் தெரிவித்துள்ளன.இதே போல, டீசல் ஒரு லிட்டருக்கு 13.55 ரூபாயும், மண்ணெண்ணைக்கு 29.97 ரூபாயும், சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 439 ரூபாயும் இந்நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படுகின்றன. மொத்தத்தில் ஒரு நாளைக்கு இந்த எண்ணெய் நிறுவனங்கள் 900 கோடி ரூபாய் இழப்பை சந்தித்து வருகின்றன. எனவே, பெட்ரோல் விலையை உயர்த்த மத்திய அரசிடம் இந்த நிறுவனங்கள் கோரியுள்ளன. ஒரு லிட்டருக்கு 5.10 ரூபாய் வரை இழப்பு ஏற்படுவதால் பெட்ரோல் விலையை 5 ரூபாய் வரை விலை உயர்த்த அனுமதிக்கும் படி மத்திய அரசை இந்நிறுவனங்கள் நிர்பந்தப்படுத்தி வருகின்றன. எனவே, விரைவில் பெட்ரோல் விலை உயர்வை எதிர்ப்பார்க்கலாம்.
No comments:
Post a Comment