இந்தோனேசியாவில் சுனாமி தாக்குதல் மற்றும் எரிமலை வெடிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை 340 ஆக உயர்ந்துள்ளது. அங்கு மோசமான காலநிலை நிலவியதால் மீட்புப் பணியை உடனடியாக மேற்கொள்ள முடியாமல் போனது. புதன்கிழமை காலை முதல் மீட்புப் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
சுனாமி தாக்கிய மெந்தாவைய் தீவில் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்புக் குழுவினர் இறக்கிவிடப்பட்டனர். சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவுப் பொட்டலங்கள், தண் ர் பாக்கெட்டுகள், மருந்து, மாத்திரைகள், படுக்கை விரிப்புகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. அலைகளால் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு யாராவது உயிருக்கு போராடுகிறார்களா என்பதை கண்டறியும் பணியில் மீனவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மெந்தாவைய் தீவில் திங்கள்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்க வீச்சு 7.7 அலகாக இருந்ததால் சுனாமி ஏற்பட்டது. 10 அடி உயரத்தில் உருவான அலைகள், மெந்தாவைய் தீவுக்குள் புகுந்தது. இதில் 150 வீடுகள் சேதம் அடைந்தன. சுனாமியில் சிக்கி உயிரிழந்தவர்களில் 154 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 500 பேரைக் காணவில்லை. அவர்களது நிலைமை என்னவென்று தெரியவில்லை. அவர்களை தொடர்ந்து தேடும் பணி நடந்து வருகிறது.
இதேபோல் இந்தோனேசியாவில் ஜாவா தீவில் யோக்யகர்தா நகர் அருகே மவுண்ட் மெரபி என்ற எரிமலை உள்ளது. அது கடந்த சில நாட்களாகவே புகையை கக்கியபடி இருந்தது. எப்போது வேண்டுமானாலும் அந்த எரிமலை வெடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் மவுண்ட் மெரபி முதன் முறையாக வெடித்தது. நேற்று மீண்டும் வெடித்தது. இதையடுத்து, எரிமலையில் இருந்து ஏராளமான சாம்பல் வெளியே வந்தவண்ணம் உள்ளது. சூடான காற்றும் வெளியாகிக் கொண்டிருக்கிறது. இதனால், எரிமலை சரிவில் வசித்து வரும் 28 பேர், பலத்த தீக்காயங்களுடன் பலியானார்கள். அவர்களின் உடல்கள், ராட்சத பைகள் மூலம் அடிவாரத்துக்கு கொண்டுவரப்பட்டன. அவர்களை அடையாளம் கண்டறியும் பணி நடந்து வருகிறது.
மந்திர சக்தி படைத்தவராக கருதப்படும் மாபா மரித்ஜான் என்ற ஆன்மிக குருவும் பலியாகி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. மேலும், 14 பேர் கடுமையான தீக்காயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சாவு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. ஏராளமான கால்நடைகளும் இறந்து விட்டன. எரிமலைச் சரிவில் இருந்த பல வீடுகள் இடிந்து விட்டன. அப்பகுதிகளில் எங்கு பார்த்தாலும் எரிமலை சாம்பல் கொட்டிக்கிடக்கிறது. புகை வெளிவந்தபடி இருப்பதால், லாவா எனப்படும் எரிமலைக் குழம்பு வெளிவருகிறதா? என்று பார்க்க முடியவில்லை. உயிர் தப்பியவர்களை அப்புறப்படுத்தும் பணி நடந்து வருகிறது. நல்லவேளையாக, சாம்பல் பரவியபோதிலும், விமான போக்குவரத்து பாதிக்கப்படவில்லை.
மவுண்ட் மெரபி எரிமலை தற்போது அமைதியாக காணப்படுவதாக, சுரோனோ என்ற எரிமலை ஆராய்ச்சி நிபுணர் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், இது தற்காலிக அமைதியா என்று தெரியவில்லை. உடனடியாக மீண்டும் எரிமலை வெடிப்பது போல தெரியவில்லை. இருப்பினும், எதையும் உறுதியாக சொல்ல முடியாது என்றார். எரிமலை வெடிப்பு பற்றி அறிந்தவுடன், ஹனோய் தீவுக்கு சென்றிருந்த அதிபர் சுசிலோ பாம்பங் யுதோயோனே, அவசரமாக இந்தோனேசியாவுக்கு திரும்பினார்.
No comments:
Post a Comment