
அடைபட்டுக்கிடக்கிறது
தேசம்..!
மக்களின் வரிப்பணம்
அரசுக்கருவூலத்தில்
அடைக்கலமாகி..
திரும்பி வருகின்றன
இலவசம் என்னும்..
"இழிசொல்லுடன்..!"
செத்த பின்பு சிதைமூட்டும்
திருநாட்டில்..
இன உணர்வு செத்ததற்காக
தன் உயிர்ச்சதையில்
தீமூட்டி எரிந்தனர்
அப்துல் ரவூப்பும்
முத்துக்குமாரும்..
ஈழம் கருகிய இறுதி நேரத்தில்
பிண வாடை முகர்ந்தும்
அதிகாரத்தின் வேர்
அறுந்து விடாமல்
உரத்த குரலில்
துயரப்படுகிறார்கள்
உடன்பிறப்புகள்..!
”வாக்களிக்க யாரும் இனி
வருந்த வேண்டாம்..!”
எந்திரங்கள் பழகிக்கொண்டன
ஜனநாயகத்தின் மாண்பைக் காக்க..!
தேசியக் கொடியில் -
ஈழத்தமிழனின்
இரத்தம் தெறித்து
சிவப்பு நிறமானது..!
”பாக்சைட்”டுக்காக
பசுமை வேட்டையாடியதில்
பச்சை நிறம் கீழே
பட்டொளி வீசி பறக்கிறது..!
ஏகாதிபத்தியத்திடம்
சரணடைபவர்களுக்காக
வெண்சாமரம் வீசுகிறது
வெள்ளைக் கொடி..!
No comments:
Post a Comment