அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Saturday, October 16, 2010

அந்த ஏழு விஷயங்கள்



بســــم الله الـر حـمـن الرحـــيــم
எல்லாம் வல்ல அல்லாஹ், மனிதனை படைத்து அந்த மனிதனுக்கு பூமியை வசிப்பிடமாக்கி, அதில் அவனுக்கு தேவையான அனைத்தையும் உருவாக்கி, மனிதன் அனுபவிக்க அனுமதித்துள்ள இறைவன், அவற்றில் ஆகுமானவை எது..? தடுக்கப்பட்டவை எது..? என்பதையெல்லாம் விளக்கி, அந்த மனிதனை பக்குவப்படுத்தி, பண்பாளனாக மாற்றி, சுவனத்திற்கு உரியவனாக மாற்ற தன் புறத்திலிருந்து வேதத்தையும், தூதர்களையும் அனுப்பி வைத்தான். அந்த தூதர்கள் குறித்து, அதிலும் குறிப்பாக ரஸூல்[ ஸல்] அவர்கள் குறித்து நமக்கு கட்டளையிடும் போது,
وَمَا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانتَهُوا وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ
மேலும், (நம்) தூதர் உங்களுக்கு எதைக் கொடுக்கின்றாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள், இன்னும், எதை விட்டும் உங்களை விலக்குகின்றாரோ அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள், மேலும், அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வதில் மிகக் கடினமானவன். [59 ; 7 ]
என்று வல்ல ரஹ்மான் தன் திருமறையில் சொல்லிக் காட்டுகிறான்.

அந்த அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் பல்வேறு ஏவல், விலக்கல்களை சொல்லியுள்ளார்கள். அப்படிப்பட்ட ஒரு முக்கியமான ஏழு ஆகுமான விஷயங்களும், ஏழு தடுக்கப்பட்ட விஷயங்களும் புஹாரியில் 6235 மற்றும் பல்வேறு இலக்கங்களில் காணப்படுகிறது. அவை இங்கே தொகுத்தளிக்கப்படுகிறது;

ஏவப்பட்ட விஷயங்கள்;
1. நோயாளிகளை நலம் விசாரிப்பது.

நாம் நோயாளிகளை நலம் விசாரிக்க மருத்துவமனைக்கோ, அல்லது வீடுகளுக்கோ செல்வோம். ஆனால் யாரை விசாரிப்போம் என்றால் அவர்கள் நமக்கு நெருங்கிய உறவினர்களாக இருப்பார்கள். அல்லது நெருங்கிய நண்பர்களாக இருப்பார்கள். அல்லது ஏதேனும் ஒரு வகையில் அவர்கள் நமக்கு அறிமுகமானவர்களாக இருப்பார்கள். இப்படிப்பட்டவர்களைத்தான் நாம் விசாரிப்போம். இந்த நிலை மாறவேண்டும். அறிந்தவர் அறியாதவர் அனைவரையும் அவர் நோயுற்ற செய்தியறிந்தால் நாம் நலம் விசாரிப்பதை பழக்கப் படுத்திக் கொள்ளவேண்டும். மேலும், நோய் விசாரிக்க சென்றால்,
'அத்ஹிபில் பாஸ் ரப்பந் நாஸ் இஷ்ஃபி, வ அன்த்தஷ் ஷாஃபி, லா ஷிஃபாஅ இல்லா ஷிஃபாஉக்க, ஷிஃபாஅன் லா யுஃகாதிரு சகமன்' .

(பொருள்: மனிதர்களைப் படைத்துப் பராமரிப்பவனே! நோயைப் போக்கி அறவே நோயில்லாதவாறு குணமளிப்பாயாக. நீயே குணமளிப்பவன். உன் நிவாரணத்தை தவிர வேறு நிவாரணம் இல்லை.)
என்ற நபியவர்கள் காட்டித்தந்த துஆவை நோயாளிகளுக்காக நாம் செய்யவேண்டும்.

2. ஜனாஸாக்களைப் பின்தொடர்ந்து செல்வது.
ஒருவர் இறந்து விட்டால் அவரது ஜனாஸாவை அவரது வீட்டில் பார்த்து விட்டு நடையை கட்டுபவர்கள் நம்மில் பெரும்பாலோர் உண்டு. காரணம் ஜனாஸாவை பின்தொடர்ந்து சென்று, அடக்கம்செய்யும் வரை உடன் இருந்தால் அதற்கு கிடைக்கும் நன்மையை அறியாத காரணத்தினால்தான்.

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள்;
ஜனாஸா தொழுகையில் பங்கேற்கிறவருக்கு ஒரு கீராத் நன்மையுண்டு: அடக்கம் செய்யப்படும் வரை கலந்து கொள்கிறவருக்கு இரண்டு கீராத்கள் நன்மை உண்டு' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது 'இரண்டு கீராத்கள் என்றால் என்ன?' என வினவப்பட்டது. அதற்கவர்கள், 'இரண்டு பெரிய மலைகளைப் போன்ற அளவு (நன்மை)" என்றார்கள். [புகாரி 1325 ]
இரண்டு மலையளவு நன்மையை அள்ளித்தரும் செயலான ஜனாசாவுக்காக தொழுதல், பின் தொடர்தல், அடக்கம் செய்தல் ஆகிய செயலை இனியும் நாம் விடலாமோ..?

3. தும்மியவர் 'அல்ஹம்துலில்லாஹ்' (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொன்னால் அவருக்காக 'யர்ஹமுக்கல்லாஹ்' (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று மறுமொழி கூறுவது.

தும்மியவர் அல்ஹம்துலில்லாஹ் என்று சொல்வது அரிதாகிவிட்டது. ஆடு, மாடு தும்முவது போல் தும்மிவிட்டு, அல்ஹம்துலில்லாஹ் சொல்லாமல் இருந்து விடுகிறார்கள். அப்படியே தும்மியவர் சொன்னாலும் அதற்கு பதிலளிக்க வேண்டும் என்ற அறிவு பெரும்பாலோருக்கு இல்லை. காரணம் தும்மியவருக்கு பதிலளிப்பதும் ஒரு நல்லமல் என்ற அறியாமைதான்.

4. நலிந்தவருக்கு உதவுவது.

நலிந்தவர்களுக்கு நம்மில் பலர் உதவி செய்கிறோம். அதை இன்னும் அதிகமாக செய்யவேண்டும். அமைப்புகள் பல நலிந்தவர்களுக்கு உதவி செய்து வருகின்றன. பாராட்டுகிறோம். ஆனால் அவைகளை விளம்பரப் படுத்துவதை தவிர்க்க வேண்டும். கட்டாயம் விளம்பரப் படுத்தியே ஆகவேண்டும் என அமைப்புகள் கருதினால், குறைந்த பட்சம் உதவி பெறுபவரின் முகத்தை மறைத்தாவது படத்தை வெளியிட முன்வர வேண்டும்.

5. அநீதியிழைக்கப்பட்டவருக்கு ஒத்தாசை செய்வது.

அநீதியிழைத்தல் என்பது ஒருவருக்கு அவரது சொத்து- மானம்- உயிர் ஆகியவற்றில் அநீதியிழைக்கப் பட்டிருக்கலாம். அப்படி ஒருவர் அநீதிக்கு உள்ளானால், அவரை அநீதிக்கு உள்ளாக்கியவர் எவ்வளவு பெரியவராக இருந்தாலும் அவரை எதிர்த்து பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைத்திட உதவவேண்டும். ஆனால் துரதிஷ்டவசமாக தனக்கு பிடிக்காதவர்களின் கண்ணியத்தை கப்பலேற்றும் வேலையை கற்றறிந்தவர்களே செய்வது வேதனைக்குரியதாகும்.

6. (மக்களிடையே) சலாமைப் பரப்புவது.

ஸலாம் சொல்லுதல் என்பது பெரிய தாடி, ஜிப்பா சகிதம் ஒரு கெட்டப்பில் இருப்பவர்களுக்கும், பெரிய மனிதர்களுக்கும் என்றாகி விட்டது. மேலும் நாகரிக வளர்ச்சியில் ஸலாம் காணாமல் போய், 'குட்மார்னிங்' வழக்கில் வந்துவிட்டது. முஸ்லிம்களில் கணிசமானோர் குட்மார்னிங் சொல்வதை பார்க்கிறோம். குட்மார்னிங் சொன்னால் மார்க்கத்தில் எந்த நன்மையுமில்லை. ஆனால் ஸலாம் சொன்னால் அஸ்ஸலாமு அலைக்கும் என்றால் பத்து நன்மைகளும், அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ் என்றால் இருபது நன்மைகளும், அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு என்றால் முப்பது நன்மைகளும் கிடைக்கும். இது சொன்னவருக்கு கிடைப்பதாகும். கேட்டு விட்டு பதில் சொல்பவருக்கும் இதுபோன்ற நன்மை கிடைக்கும். இப்படி எந்த செலவும் செய்யாமல் நன்மைகளை கொள்ளையடிக்கும் வாய்ப்பை நாம் தவறவிடலாமா..?

7. சத்தியம் செய்தவர் அதை நிறைவேற்ற உதவுவது.

சத்தியம் செய்தவர் மார்க்கத்திற்கு உட்பட்ட சத்தியத்தை செய்திருப்பின், அந்த சத்தியத்தை நிறைவேற்ற நாம் உதவ வேண்டும். ஒருவர் பொருளாதார விஷயத்தில் ஒரு சத்தியத்தை செய்திருப்பார். எதிர்பாராத விதமாக அவர் பொருளாதார பின்னடைவை சந்தித்து சத்தியத்தை நிறைவேற்ற முடியா நிலையில் இருப்பார். இப்படிப்பட்டவருக்கு நாம் உதவி செய்வதன் மூலம் நாம் நன்மையை அடைந்து கொள்ளமுடியும்.
தடுக்கப்பட்டவைகள்;
1. வெள்ளிப் பாத்திரத்தில் பருகுவது.

வெள்ளிப் பாத்திரத்தில் பருகுவது என்பது வசதி படைத்த சில முஸ்லிம்கள் கவுரவமாக கருதுகிறார்கள். ஏழைகள் வீட்டில் வெள்ளிப் பாத்திரங்கள் இருக்காது. வெள்ளிப் பாத்திரத்தில் பருகுவதை இறைத்தூதர்[ஸல்] அவர்கள் கடுமையாக கண்டித்துள்ளார்கள். மேலும் நபியவர்களின் கட்டளையை ஏற்று வெள்ளிப் பாத்திரத்தில் உண்ணல்- பருகுதல் செய்வதை சஹாபாக்கள் நஞ்சென வெறுத்துள்ளார்கள்.

அப்துர் ரஹ்மான் இப்னு அபீ லைலா(ரஹ்) கூறினார்கள்;

ஹுதைஃபா இப்னு யமான்(ரலி) (இராக்கில் உள்ள) 'அல்மதாயின்' (தைஃபூன்) நகரத்தில் இருந்தார்கள். அப்போது பருகுவதற்குத் தண்ணீர் கேட்டார்கள். உடனே (மஜூலியான) ஊர்த் தலைவர் வெள்ளிப் பாத்திரம் (ஒன்றில் தண்ணீர்) கொண்டு வந்தார். ஹுதைஃபா(ரலி) அதை அவரின் மீது வீசியெறிந்துவிட்டு, (அங்கிருந்தவர்களிடம்) 'நான் இவரை(ப் பலமுறை தடுத்தும் இவர் (வெள்ளிப் பாத்திரத்தைத்) தவிர்த்துக் கொள்ளாததால் தான் நான் இதை அவரின் மீது வீசியெறிந்தேன். நபி(ஸல்) அவர்கள் சாதாரணப் பட்டையோ அலங்காரப் பட்டையோ அணியக் கூடாதென்றும் தங்கம் மற்றம் வெள்ளிப் பாத்திரங்களில் பருக வேண்டாமென்றும் தடை விதித்தார்கள். மேலும், அவர்கள், 'அவை இம்மையிலும் (இறைமறுப்பாளர்களான) அவர்களுக்கும், மறுமையில் (இறை நம்பிக்கையாளர்களான) உங்களுக்கும் உரியனவாகும்' என்று கூறினார்கள் எனத் தெரிவித்தார்கள்.[புகாரி 5632 ]

2. (ஆண்கள்) தங்கமோதிரம் அணிவது.
முஸ்லிம்களில் பெரும்பாலான ஆண்கள் தங்கம் அணிபவர்களாக இருக்கிறர்கள். இன்னும் திருமண நேரத்தில் பெண் பேசும்போதே மாப்பிள்ளைக்கு தனியாக இத்தனை சவரன் போடவேண்டும் என்றும் பேசப்படுகிறது. ஆண்கள் தங்கம் அணிவதை நாகரீகத்தின் வெளிப்பாடாக கருதுகிறார்கள். கழுத்தில் மைனர் செயினோடும், கையில் பிரஸ்லேட்டோடும் இவர்கள் செய்யும் அளப்பரை தாங்க முடியலை. ஆனால் அவை நரகத்தின் நெருப்பு என்பதை உணர மறுக்கிறார்கள்.

இப்னு அப்பாஸ்[ரலி] அவர்கள் அறிவித்தார்கள்;
ஒரு மனிதரின் கையில் தங்க மோதிரத்தைக் கண்ட நபி[ஸல்] அவர்கள் அதை கழற்றி எறிந்துவிட்டு, உங்களில் யாரேனும் தீக்கங்கை எடுத்து அதை தனது கையில் வளையமாக அணிவதை விரும்புவாரா என்று கேட்டார்கள். நபி[ஸல்] அவர்கள் சென்றபிறகு, அந்த மோதிரத்தை எடுத்து அதை வேறு வழியில் பயன்படுத்திக் கொள் என்று அந்த மனிதருக்கு கூறப்பட்டது. அதற்கவர், அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் அதை தூர எறிந்திருக்க, அல்லாஹ்வின் மீது ஆணையாக, அதை ஒருபோதும் நான் எடுக்கமாட்டேன் என்று கூறினார்.[முஸ்லிம்]

தங்கம் அணியும் விசயத்தில் இறைத்தூதரின் கட்டளைக்கு சஹாபாக்கள் எந்த ளவு கட்டுப்பட்டுள்ளார்கள். இன்று நாம் எவ்வாறு இருக்கிறோம் என்று சிந்தித்துப் பார்க்க கடமைப் பட்டுள்ளோம்.
3. மென்பட்டுத் திண்டில் அமர்வது.
4. சாதாரணப் பட்டு அணிவது.
5. அலங்காரப் பட்டு அணிவது.
6. எகிப்திய பட்டு அணிவது.
7. தடித்த பட்டு அணிவது.

இங்கே பாட்டின் அனைத்து வகைகளையும் ஆண்களுக்கு நபியவர்கள் தடுத்துள்ளார்கள். ஒரு காலத்தில் திருமணம் என்றாலே மாப்பிள்ளை பட்டு வேட்டி சரசரக்க ஊர்வலம் வருவார். இன்று நாகரிக மாற்றம் காரணமாக திருமணத்தில் பட்டு அணிவது குறைந்தாலும், முஸ்லிம் சமுதாயத்தில் பட்டு அணிவது முற்றிலும் ஒழிந்து விட்டது என்று கூறிட முடியாது.

இப்னு உமர்(ரலி) அறிவித்தார்கள்;

பள்ளியின் நுழைவாயிலில் பட்டாடை ஒன்றை (விற்பனை செய்வதை) உமர்(ரலி) பார்த்தார்கள். அப்போது 'இறைத்தூதர் அவர்களே! இதை நீங்கள் விலைக்கு வாங்கி ஜும்ஆ நாளிலும் தூதுக் குழுவைச் சந்திக்கும் போதும் அணிந்து கொள்ளலாமே' என்று நபி(ஸல்) அவர்களிடம் உமர்(ரலி) கேட்டார்கள்."மறுமையில் இந்தப் பாக்கியம் அற்றவர்களின் ஆடையே இது" என்று நபி(ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள். [புகாரி எண்; 886 ]

இம்மை பகட்டுக்காக பட்டாடை அணியும் ஆண்கள் மறுமை பாக்கியத்தை இழக்கத் தயாரா என்பதை சிந்திக்கட்டும்.
எல்லாம் வல்ல அல்லாஹ், இறைத்தூதர்[ஸல்] அவர்கள் ஏவியதை செய்பவர்களாக, தடுத்ததை தவிர்ந்து கொள்பவர்களாக நம்மை ஆக்கியருள்வானாக!

No comments: