அஸ்ஸலாமு அலைக்கும்,
வருவாய்த் தேடி
வளைகுடாவிற்கு நீ;
தனிமைக்கு துணையாய்
பிரிவுக்கு புது வரவாய்;
வருவாய் நீ; என நான் இங்கே!
ஏங்கி ஏங்கி தூங்கிப்போனக்
காலங்கள் உண்டு;
வீங்கிப்போன இமைகளைக் கொண்டு!
வெட்கப்பட்டு வெளியே வந்த
கண்ணீர்த் துளிகள் உரைக்கும்;
என் புலம்பலைக் கேட்டு முரைக்கும்!
கருவில் உனை வைத்து
கன்னத்தில் கை வைத்து
காத்திருக்கிறேன் உனக்காக!
நொந்துப்போனப் பிரிவுக்கு
வந்துப்போகும் உன் நினைவு;
கனத்துப்போகும் மனது!
உறவுகளுடன் நானிருந்தாலும்
உன்னைப்பற்றியே நினைப்பேன்;
மடல் உனக்கு எழுதி எழுதி
அழுது வடியும் என் எழுதுக்கோல்!
திரும்ப திரும்ப ஒலிக்கும்
என் வரிக்கும் வலிக்கும்;
ஊமையான ”மை”யிற்கும் மயக்கம்;
சுற்றிச் சுற்றிச் சுழலும் என்
ஒரே கேள்விற்கு;
உன் விடுமுறை எப்போது!
No comments:
Post a Comment