அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Saturday, October 16, 2010

செய்கூலி இல்லை; சேதாரம் இல்லை, ஆனால்..

செய்தித் தாள்களை நாம் புரட்டுபோது, செய்கூலி இல்லை; சேதாரம் இல்லை; கிராமுக்கு 100 ரூபாய் குறைவு; எடைக்கு மட்டுமே விலை என்றெல்லாம் பல்வேறு நகைக்கடை விளம்பரங்களை நாம் பார்க்கலாம். தங்கவிலை தாறுமாறாக எகிறிவரும் நிலையில், எவ்வாறு இவர்களால் இவ்வாறான அறிவிப்பு செய்ய முடிகிறது என்றெல்லாம் பாமரர்கள் அறிவுக்கு எட்டாமல் புலம்பி வந்தார்கள். ஏனெனில் தங்கம் குறித்து போதிய விழிப்புணர்வு சமுதாயத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு காலத்தில் கைகளால் தூக்கி எடைபோடும் தராசு இருந்தது. அதில் சிலர் 'கை' வித்தை காட்டி எடையை கூட்டியும், குறைத்தும் காண்பிப்பார்கள். இன்னும் சிலர் தராசின் ஒரு தட்டின் கீழ் புளியை ஒட்டி வைத்து, மக்கள் வயிற்றில் புளியை கரைப்பார்கள். நாகரிக வளர்ச்சியில், எலெக்ட்ரானிக் எடை மெஷின்கள் எல்லா கடைகளையும் ஆக்கிரமித்தது. இதில் ஓரளவு எடை சரியாக மக்களுக்கு கிடைத்தது. விடுவார்களா போலிகள்..? இதிலும் புகுந்து விட்டார்கள்.

இந்நிலையில் இன்றைய செய்தித்தாள்களில் போலி தராசு தாயாரித்ததாக சிலர் கைது செய்யப்பட்டுள்ள செய்தி வெளியாகியுள்ளது. அவர்கள் தயாரித்துள்ள எலெக்ட்ரானிக் தராசுகளில், ஒரு வகை கம்ப்யூட்டர் சிப் பொருத்தப்பட்டு உள்ளது. இது, எடைகளை அதிகமாகவோ குறைவாகவோ காட்டும். ஒரு கிலோ எடையை 10 சதவீதம் அதிகமாகவும், குறைவாகவும் காட்டும் வகையில் தயாரித்து இருக்கிறார்கள். உண்மையான எடை கொண்ட தராசு ரூ.10 ஆயிரத்திற்கும், தில்லுமுல்லு செய்ய உதவும் தராசை ரூ.20 ஆயிரத்திற்கும் விற்பனை செய்து உள்ளனர்.


இந்த வகை எடை எந்திரங்களில் 4 பட்டன்கள் உள்ளன. ஒரு பட்டனை அழுத்தி எடை போட்டால், சரியான எடையை காட்டும். அடுத்த பட்டனை அழுத்தி எடை போட்டால் 50 சதவீத எடையை குறைத்து காட்டும். 3வது பட்டனை அழுத்தினால் 50 சதவீத எடையை அதிகரித்து காட்டும். 4வது பட்டன் வேறு ஒரு எடையை காட்டும். இவ்வாறு பலவிதமான எடைகளை காட்டும் வகையில் எடை எந்திரங்களை தயாரித்து, அவற்றை தமிழ்நாட்டில் உள்ள நகைக்கடைகள், ரேஷன் கடைகள், பழைய இரும்பு கடைகள், பாத்திரக்கடைகள் போன்றவற்றுக்கு கூடுதல் விலைக்கு விற்று பெரும் பணம் சம்பாதித்து இருக்கிறார்கள்.

ஏற்கனவே பெரும்பாலான ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் எடை குறைவாக உள்ளதாக குற்றச்சாட்டு பரவலாக மக்கள் மத்தியில் உண்டு. ஆனால் இந்த போலி தராசு நகைக்கடை வரை சென்றுள்ளதை பார்க்கும் போது, ரேஷன் பொருள் போல, நாம் வாங்கிய நகையும் எடை குறைவாக இருக்குமோ என சந்தேகம் வருகிறது.

ஏனெனில் நாம் வாங்கிய நகைகளை சிறிது காலம் கழித்து விற்பதற்காக சென்றால், நகைக்கடைக்காரர் நமது நகையின் எடையை சொல்லும் போது, நாம் வாங்கியபோது உள்ள எடையை விட குறைவாக சொல்வார். அப்போது நாம் 'தேய்மானம்' ஆகியிருக்கும் என்று நம்மை நாமே தேற்றிக் கொள்வோம். ஆனால் நாம் வாங்கும்போதே எடை குறைய வாய்ப்புண்டு என்ற உண்மையை இந்த போலி தராசுகள் படம்பிடித்துக் காட்டுகிறது.

அதிகாரிகள் போலி தராசு தயாரித்தவர்களை கைது செய்ததோடு நின்று விடாமல், அவர்கள் எந்தெந்த நிறுவனங்களுக்கு விற்பனை செய்துள்ளார்கள் என்பதையும் கண்டறிந்து, அந்த நிறுவனங்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும்.

ஒரு திரைப்படத்தில் பட்டுச்சேலை வாங்கசெல்லும் கதாநாயகன், ஒரு வாளியில் தண்ணீரோடும், தீப்பெட்டியோடும் செல்வார். அதுபோல ரேஷன்கடை, நகைக்கடை, பாத்திரக்கடை என்று இப்போது எங்கே சென்றாலும் நாமும் ஒரு தராசுடன்தான் செல்லவேண்டும் போல் தெரிகிறது.

தாய்ப்பாலைத் தவிர அனைத்திலும் போலி. ஆண்டவன்தான் இந்த போலிகளிடமிருந்து மக்களை காக்கமுடியும்.

--

No comments: