அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Friday, February 25, 2011

லிபியா : கடாஃபிக்கு எதிராக அமைச்சர்கள் பதவி துறப்பு!!!

லிபியாவில் கடாஃபியின் கொடுங்கோல் செயலைக் கண்டித்து அந்நாட்டின் ஏராளமான அமைச்சர்களும் தூதர்களும், வெளியுறவு அதிகாரிகளும் பதவி துறப்பு செய்துள்ளனர்.

கிளர்ச்சியில் ஈடுபடும் மக்களை இராணுவத்தையும், கூலிப்படையையும் ஏவிவிட்டு சுட்டுத்தள்ளி மனசாட்சி இல்லாமல் நடந்து கொள்ளும் கடாஃபியை கண்டித்து அந்நாட்டின் நீதித்துறை அமைச்சர் முஸ்தபா அப்துல் ஜலீல் செவ்வாய்க்கிழமை தம் பதவியைத் துறந்தார்.

முஅம்மர் கடாஃபியின் மகனின் மூத்த உதவியாளர் யூசெஃப் சவானியும் பதவியை உதறிவிட்டதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் உள்துறை அமைச்சர் அப்தெல் ஃபதாவும் பதவியை துறந்திருப்பதன் மூலம் கடாஃபிக்கான எதிர்ப்பு வலுவடைந்துள்ளது.

லிபியாவில் தற்போது நிலவும் சூழலை பார்க்கும்போது நாடே சீர்குலைந்துள்ளது தெளிவாகிறது. அமைச்சர்களும், தூதர்களும் பதவியை துறந்துள்ளது நாடு நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதையே காட்டுகிறது. கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக கடாஃபி ஆயுதத்தை தூக்குவதை பிரிட்டன் கண்டிக்கிறது என்று பிரிட்டனின் வெளியுறவு அமைச்சர் வில்லியம் ஹேக் கூறினார்.

கடாஃபி அடாவடித்தனமாக நடந்து கொள்கிறார். லிபியாவுக்கு எதிராக உலக நாடுகள் பொருளாதாரத் தடையை விதிக்க வேண்டும் என்று ஐரோப்பிய யூனியன் நாடுகள் குரல் கொடுத்துள்ளன.தனது குடும்பத்தின் நலனுக்காகக் கோடிக்கணக்கான மக்களை அடக்கி ஆண்ட, தொடர்ந்து ஆள முயலும் கடாஃபியின் செயலை பெரு வன்மையாகக் கண்டித்துள்ளது. லிபியாவுடனான ராஜீய உறவை முறித்துக் கொண்டுள்ளது. அந்நாட்டுடனான ராஜீய உறவை முறித்துக் கொண்டுள்ள முதல் நாடு பெரு.

கடாஃபிக்கு எதிராக 22 அரேபிய நாடுகளும் குரல் எழுப்பியுள்ளன. தமது குடிமக்களின் உணர்வுகளுக்கும், உரிமைகளுக்கும் கடாஃபி மதிப்பளிக்க வேண்டும் என்று அந்நாடுகள் வலியுறுத்தியுள்ளன. கிளர்ச்சியாளர்களுக்கு முறையாக பதில் அளிக்கும்வரை அரபு நாடுகள் கூட்டமைப்பு கூட்டத்தில் கலந்து கொள்ள லிபியாவை அனுமதிக்க முடியாது என்றும் அந்நாடுகள் தெரிவித்துள்ளன

No comments: