இரண்டாம் தலைமுறை செல்லிடத் தொலைபேசி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரம் மற்றும் காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகளில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக உண்மை வெளிக்கொண்டுவரப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்றும், பொது வாழ்வில் தூய்மையை நிலைநிறுத்த அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்றும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். மீனவர் பிரச்சினை பற்றிப் பேசிய பிரதமர், இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று இலங்கை அரசிடம் வலியுறுத்தியுள்ளதாகத் தெரிவித்தார். ''இந்திய – இலங்கை மீனவர்களுக்கிடையே தொடர்ந்து பதற்றம் ஏற்படும் சூழ்நிலையை முடிவுக்குக் கொண்டுவர நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும். இந்திய மீனவர்கள் கடல் எல்லையைத் தாண்டிச் சென்றாலும் அவர்களைக் கைது செய்யலாமே ஒழிய, அவர்கள் மீது தாக்குதல் நடத்துவதையோ, கொலை செய்வதையோ ஏற்க முடியாது என்று இலங்கை அரசிடம் தொடர்ந்து வலியுறுத்துவோம்’’ என்றார் பிரதமர் மன்மோகன் சிங். குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்போது உரையாற்றிய பிரதமர், ஊழல் விவகாரம், உள்நாட்டுப் பிரச்சினை, பணவீக்கம், கறுப்புப் பணம், வேளாண் உற்பத்தி, அண்டை நாடுகளுடனான உறவுகள், சர்வதேச அளவில் இந்தியாவின் செல்வாக்கு உள்பட பல்வேறு அம்சங்கள் தொடர்பாகப் பேசினார். தொலைத் தொடர்புத்துறை அலைக்கற்றை ஒதுக்கீடு மற்றும் காமன்வெல்த் போட்டி முறைகேடு பற்றிச் சுட்டிக்காட்டிய அவர், இந்தத் துறைகளில் துரதிர்ஷ்டவசமான நிகழ்வுகள் ஏற்பட்டுவிட்டன என்பதை நான் மறுக்கவில்லை என்று குறிப்பிட்டார். காமன்வெல்த் போட்டி முறைகேடுகள் குறித்து, போட்டிகள் நடப்பதற்கு முன்னதாகவே புகார்கள் வந்தது குறித்து சுட்டிக்காட்டிய பிரதமர், இதில் குற்றம் செய்தவர்கள் யாரும் தப்ப முடியாது என்று அவைக்கு உறுதியளித்தார். இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் துணை அமைப்பான ஆன்த்ரிக்ஸ் மற்றும் தேவாஸ் என்ற தனியார் நிறுவனத்துக்கும் இடையே ஏற்பட்ட உடன்பாட்டில், எஸ் பேண்ட் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து சுட்டிக்காட்டிய பிரதமர், அது தொடர்பாக பிரதமர் அலுவலகம் எந்த ஒப்புதலும் அளிக்கவில்லை என்றும் தெரிவித்தார். அதே நேரத்தில், அந்த ஒப்பந்தம் தொடர்பாக ஆய்வு செய்ய உயர்நிலைக்குழு ஒன்றை அரசு அமைத்திருப்பதாகவும் மன்மோகன் சிங் சுட்டிக்காட்டினார். சர்ச்சையை அடுத்து, கேந்திர முக்கியத்துவத்தைக் காரணம் காட்டி, அந்த உடன்படிக்கையை விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் சமீபத்தில் ரத்து செய்துவிட்டது குறிப்பிடத்தக்கது. காஷ்மீர் பிரச்சினை குறித்துப் பேசிய பிரதமர், ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பளிக்கும் திட்டம் தொடர்பான நிபுணர் குழு அறிக்கை தயாராகிவிட்டதாகத் தெரிவித்தார். மாவோயிஸ்டுகள் பிரச்சினை பற்றிப் பேசிய பிரதமர், மாவோயிஸ்டுகளின் பிரச்சினை அதிகமாக உள்ள மத்திய இந்தியாவில், 60 மாவட்டங்களில் சிறப்பு வளர்ச்சித் திட்டங்களைச் செயல்டுத்த அரசு நடவடிக்கை எடுத்திருப்பதாகத் தெரிவித்தார். அதன் மூலம், பழங்குடியின இளைஞர்கள் தவறான பாதைக்குச் செல்லாமல் தடுக்க முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார் |
Friday, February 25, 2011
''ஊழல்கள் குறித்து மன்மோகன் சிங்''
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment