அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Friday, April 15, 2011

தனியார் மெகாகிடங்கில் பயங்கர தீ விபத்து:பல கோடி ரூபாய் இழப்பு!

தனியார் கிடங்கில் ஏற்பட்ட தீவிபத்தில், இருப்பு வைக்கப்பட்டிருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாயின. இதன் காரணமாக, கண் எரிச்சல் மற்றும் மூச்சுத்திணறலால் சுற்றுப்புற மக்கள் பாதிக்கப்பட்டனர்.

சென்னை, மாதவரம், கணக்கன் சத்திரம் ஜி.என்.டி. சாலை அருகே 15 ஏக்கர் பரப்பளவில் தனியார் கிடங்கு வளாகம் உள்ளது. இங்கு 16 மெகா கிடங்குகள் உள்ளன. இவற்றில் இரும்பு, ரசாயனம், தொழிற்சாலை உதிரிபாகங்கள், வேஸ்ட் பேப்பர், மருந்துகள், எலக்ட்ரானிக் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பல டன் அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

இங்கு உள்ளூர் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் வேலை செய்கின்றனர். தேர்தலுக்காக, கடந்த இரண்டு நாட்கள் விடுமுறை விடப்பட்டிருந்தது.காவலாளிகள் உட்பட ஒரு சிலர் மட்டும் பணியில் இருந்தனர். நேற்று காலை 9.30 மணி அளவில் 9ம் எண் கிடங்கில் இருந்து புகை வெளியேறியது. பின், தீ பிடித்து, கிடங்கின் அனைத்து பகுதிகளுக்கும் பரவியது.அந்த கிடங்கில் பியூரிக் பாஸ்பரஸ், சோடியம் கார்போரைட், ஹைட்ரஜன் பெராக்சைடு உள்ளிட்ட ரசாயனக் கலவைகள் கொண்ட 3 ஆயிரம் பேரல்கள் வைக்கப்பட்டிருந்தன.

25 லிட்டர் கொள்ளளவு கொண்ட ரசாயன பேரல்கள் ஒவ்வொன்றும் பயங்கர சத்தத்துடன் வெடித்தன. பலத்த காற்றின் காரணமாக தீ 100 முதல் 200 அடி உயரம் வரை கொழுந்து விட்டு எரிந்தது.இதனால் அடர்த்தியான புகை மண்டலம் பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு பரவியது. கிடங்கிற்கு அருகில் உள்ள பகுதிகளில் வசித்த மக்கள் கண் எரிச்சல் மற்றும் மூச்சுத்திணறல்ஆகியவற்றால் பாதிக்கப்பட்டனர்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த, மாதவரம் போலீசார் மற்றும் தீயணைப்பு அதிகாரிகள் மேற்பார்வையில் 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தீயை அணைக்க போராடினர்.தீயை கட்டுப்படுத்த முடியாமல், கெமிக்கல் மற்றும் மெக்கானிக்கல் ஃபோம் என்ற ரசாயன கலவைகளை தண்ணீரில் கலந்து தீயை கட்டுப்படுத்தி ஆறு மணி நேரம் போராட்டத்திற்கு பின் அணைத்தனர். தீ விபத்தால் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. உயிரிழப்புகள் ஏதுமில்லை.

தீ விபத்தால் கண் எரிச்சல் மற்றும் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் ஜி.என்.டி. சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். மாதவரம் துணை கமிஷனர் செல்வராஜ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து டென்று, பேச்சு வார்த்தை நடத்தி மறியலை விலக்கினர். மாதவரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

No comments: