அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Sunday, July 3, 2011

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு-சிபிஐ கோர்ட்டில் நாளை மீண்டும் விசாரணை தொடக்கம்!!

டெல்லி: நாட்டையே பெரும் பரபரப்பில் ஆழ்த்திய 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் வழக்கின் விசாரணை நாளை மீண்டும் சிபிஐ விசாரணைக்கு வருகிறது.

டெல்லியில் உள்ள சிறப்பு சிபிஐ கோர்ட்டில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான வழக்கு விசாரணையில் உள்ளது. கோடை விடுமுறையையொட்டி கோர்ட் செயல்படவில்லை. இந்த நிலையில் கோடை விடுமுறைக்குப் பின்னர் நாளை முதல் மீண்டும் ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு விசாரணைக்கு வருகிறது.

நாளை கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு வரும்போது முனனாள் அமைச்சர் ராசா, திமுக எம்.பி. கனிமொழி, ஸ்வான் டெலிகாம் நிறுவன பிரமோட்டர் ஷாஹித் உஸ்மான் பல்வா உள்ளிட்ட 14 பேர் நீதிபதி ஓ.பி.ஷைனி முன்பு ஆஜர்படுத்தப்படுவர்.

உச்சநீதி்மன்ற உத்தரவின் பேரில் இந்த வழக்கை சிறப்பு சிபிஐ கோர்ட் விசாரித்து வருவது நினைவிருக்கலாம்.

நாளை முதல் அரசுத் தரப்பு மற்றும் குற்றம் சாட்டப்பட்டோர் தரப்பு வாதங்கள் தொடங்கவுள்ளன.

இந்த வழக்கில் இதுவரை 2 குற்றப்பத்திரிக்கைகளை சிபிஐ தாக்கல் செய்துள்ளது. இதில் 14 தனி நபர்கள் மற்றும் 3 தொலைத் தொடர்பு நிறுவனங்கள் உள்பட மொத்தம் 17 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஜூலை 2வது வாரத்தில் தனது மூன்றாவது குற்றப்பத்திரிக்கையை சிபிஐ தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.

முதல் குற்றப்பத்திரிக்கை ஏப்ரல் 2ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதில் ராசா, பல்வா, முன்னாள் தொலைத் தொடர்புத்துறை செயலாளர் சித்தார்த் பஹுரா, ராசாவின் உதவியாளர் சந்தோலியா, யூனிடெக் நிறுவன எம்.டி. சஞ்சய் சந்திரா, டிபி ரியாலிட்டி பிரமோட்டர் வினோத் கோயங்கா, ரிலையன்ஸ் அடாக் அதிகாரிகள் ஹரி நாயர், சுரேந்திர பிபாரா, கெளதம் தோஷி ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றன.

2வது குற்றப்பத்திரிக்கையில் கனிமொழி, கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமார் ரெட்டி ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றன என்பது நினைவிருக்கலாம்.

No comments: