ஜூலை 9 ,ஜூபா : ஆப்ரிக்காவில் உள்ள சூடான் நாடு இரண்டாக பிரிக்கப்பட்டு, தெற்கு சூடான் இன்று புதிய நாடாக உதயமாகிறது. "சூடான் நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும்' என்று கோரி, கடந்த 20 ஆண்டுகளாக அந்நாட்டில் உள்நாட்டு போர் நடந்தது.
வடக்கு பகுதியில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ளனர். தெற்கு பகுதியில் பழங்குடி மக்கள் அதிகம் உள்ளனர். உள்நாட்டு சண்டையில் லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகினர். கடந்த 2005ல் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தலையீட்டின் பேரில், சூடானை இரண்டாக பிரிக்க திட்டமிடப்பட்டது.
கடந்த ஜனவரியில் இதற்கான ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. சூடானை இரண்டாக பிரிக்க பெருவாரியான மக்கள் ஓட்டளித்தனர். இதையடுத்து, வடக்கு சூடான், சூடான் என்ற பெயரிலேயே அழைக்கப்படும். புதிய சூடான் தெற்கு சூடான் என்ற பெயரில் அழைக்கப்பட உள்ளது. தெற்கு சூடானின் தலைநகராக ஜூபா அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இன்று உலகின் 193வது நாடாக உதயமாகும் தெற்கு சூடானை சிறப்பிக்கும் வகையில் நடக்கும் விழாவில், உலக நாட்டு தலைவர்கள் பலர் கலந்து கொள்கின்றனர். தெற்கு சூடான் சுதந்திர தின விழாவில் பங்கேற்பதற்காக, இந்திய துணை ஜனாதிபதி அமீது அன்சாரி அந்நாட்டிற்கு நேற்று புறப்பட்டுச் சென்றார்.
சூடானிய அரசுக்கும், சூடானிய மக்கள் விடுதலை ராணுவத்துக்கும் கடந்த 2005 ம் ஆண்டில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் புஷ், அமெரிக்க வெளியுறவுத்துறை முன்னாள் அமைச்சர் காலின் பவல் ஆகியோரின் முன்னிலையில், அமைதி உடன்பாடு எட்டப்பட்டது. இதனால், தெற்கு சூடானுக்கு தன்னாட்சி உரிமை வழங்கப்பட்டது.
அங்கு கடந்த 20 ஆண்டுகளாக நடந்து வந்த உள்நாட்டு போர் முடிவுக்கு வந்தது. வடக்கில் இருந்து நிரந்தரமாக விடுதலை பெறுவதற்காக, கடந்த ஜனவரி மாதம் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டு, தெற்கு சூடான் சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டது. உலகில், 193வது சுதந்திர நாடான தெற்கு சூடானின், முதல் சுதந்திர தின கொண்டாட்டம், தலைநகர் ஜூபாவில் இன்று நடக்கிறது. இந்த விழாவில் கலந்துக் கொள்வதற்காக, இந்திய துணை ஜனாதிபதி அமீது அன்சாரி நேற்று அந்நாட்டிற்கு புறப்பட்டுச் சென்றார்
No comments:
Post a Comment