காட்டிக்கொடுப்பதில் இரண்டு வகை உண்டு. ஒன்று - நேரடியாகக் காட்டிக் கொடுப்பது. மற்றொன்று - மறைமுகமாகக் காட்டிக் கொடுப்பது. இந்த இரண்டிலுமே முந்தைய பாஜக கூட்டணி அரசிலிருந்து தான் எவ்வகையிலும் மாறுபட்டுவிடவில்லை என்று மறுபடி காட்டியிருக்கிறது இன்றைய காங்கிரஸ் கூட்டணி அரசு.
ஏற்கெனவே இந்தியத் தொழில் நிறுவனங்களில் அந்நிய நேரடி முதலீட்டுக்கான வரம்பு கணிசமாக உயர்த்தப்பட்டு, கிட்டத்தட்ட அந்த அந்நிய நிறுவனங்களின் கட்டுப்பாட்டில்தான் இந்திய நிறுவனங்கள் இயங்கும் என்ற நிலை ஏற்படுத்தப்பட்டது. வாஜ்பாய் அரசாலும், பின்னர் மன்மோகன் சிங் அரசாலும் புறந்தள்ளப்பட்ட அந்த எச்சரிக்கைகளின் நியாயத்தை அண்மைக்கால நிகழ்ச்சிப் போக்குகள் எடுத்துக் காட்டுகின்றன.
இன்னும் சில மாதங்களில் இந்த அரசு விடைபெற இருக்கிற நிலையில், அவசர அவசரமாக ஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இந்திய முதலீட்டு நிறுவனங்கள் மூலமாகச் செய்யப்படும் வெளிநாட்டு முதலீடுகளுக்கு இனி உச்சவரம்பு கிடையாது!
பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூடி இந்த கொள்கை மாற்றத்தைச் செய்துள்ளது. அதன் வழிகாட்டலின்படி, உள்நாட்டிலேயே இருக்கும் இந்தியர்களின் “உடைமையாகவும்” அவர்களது “கட்டுப்பாட்டிலும்” இருக்கிற இந்திய நிறுவனங்களில் மறைமுகமாக வெளிநாட்டு முதலீடு எவ்வளவு இருக்கிறது என்பதை மதிப்பிட, இந்திய முதலீட்டு நிறுவனத்தின் மூலமாக வருகிற வெளிநாட்டு முதலீடுகள் கணக்கிலெடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கையை எளிமையானதாகவும் வெளிப்படையானதாகவும் மாற்றுவதற்காக இந்த மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக, அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியிருக்கிறார். வெளிப்படையானதாக கொள்கையை மாற்றுவதற்கான ஒரு முடிவை இவ்வளவு அவசரமாக, ரகசியமாக, நாடாளுமன்றத்திற்குத் தெரிவிக்காமல் - அதுவும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டம் தொடங்குவதற்கு ஒரே ஒரு நாள் இருக்கும்போது - மேற்கொள்ள வேண்டிய அவசியம் என்ன? இந்த முடிவின் பின்னணியில் உள்ள நிர்ப்பந்தங்கள் என்ன? நாடாளுமன்றத்தில் அதைப் பற்றிய கேள்விகளை எதிர்கொள்ள நேரிடும் என்பதாலேயே இப்படி முதுகுக்குப் பின்னால் முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த மாற்றத்தால் வெளிநாட்டு முதலீடுகள் வருவது பெருமளவுக்கு அதிகரிக்கும், இன்றைய சிக்கலான பொருளாதாரக்களத்தில் ஆக்கப் பூர்வமான சிக்னல்களை அனுப்பும் என்று அமைச்சரவைக் கூட்டத்திற்குப்பின் வெளியிடப்பட்ட அறிக்கை கூறுகிறது. ஆக, இதுவரை இதே காரணத்தைக் கூறி இவர்கள் கையாண்ட ‘கதவு திறப்பு’ நடவடிக்கைகளால் அப்படியொன்றும் வெளிநாட்டு முதலீடுகள் வந்து கொட்டவில்லை என்பது நிரூபணமாகிறது. அப்படியே வந்திருக்கக் கூடிய அந்நிய முதலீடுகளிலும் பெரும்பகுதி, தொழில் உற்பத்திக்கு உதவிடுவதாக இல்லாமல், பங்குச் சந்தைச் சூதாட்டத்திற்கான பந்தயத் தொகையாகவே வந்திருக்கிறது என்பதும் தெளிவாகிறது. அந்நிய முதலீட்டின் முழு ஆலிங்கனத்துக்குத் தோதாகத் திறக்கப்பட்டிருக்கும் இந்தக் கதவை இழுத்து மூடியாக வேண்டும்.
No comments:
Post a Comment