Thursday, February 19, 2009
கோழிக்கோட்டை கலக்கிய பி.எப்.ஐ., மாநாடு
அதிகாரம் மக்களுக்கே' என்ற கோஷத்தை ஏற்ற பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ.,) அமைப்பின் தேசிய அரசியல் மாநாடு கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடந்தது.கடந்த 13ம் தேதி துவங்கி 15ம் தேதி வரை மூன்று நாட்கள் நடந்த இந்த மாநாட்டில் தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, கோவா, டில்லி உள்ளிட்ட 16 மாநிலங்களிலிருந்து பி.எப்.ஐ., உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.முதல் நாளான 13ம் தேதி நடந்த தேசிய மாணவர்கள் கருத்தரங்கத்தில் தமிழகம், கர்நாடகா, கேரளாவைச் சேர்ந்த மாணவர்கள் அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அதே நேரத்தில் மற்றொரு இடத்தில் வெளிநாடு வாழ் இந்தியர் சகோதரத்துவக் கூட்டம் நடந்தது.இதில், பி.எப்.ஐ., தலைவர் அப்துல் ரகுமான், தமிழகம், கர்நாடகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த அமைப்பின் தலைவர்கள், ஐக்கிய அரபு எமிரேட், கத்தார், பக்ரைன், ஓமன், குவைத் உள்ளிட்ட நாடுகளில் வாழும் இந்தியர்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினர்.இறுதி நாளான நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு ஓட்டல் ஸ்பேனில் தேசிய இட ஒதுக்கீடு குழுவின் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தை கேரள பாப்புலர் பிரன்ட் தலைவர் நசிருதீன் துவக்கிவைத்தார். இக்கூட்டத்தில் பல்வேறு சிறுபான்மை அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு இடஒதுக்கீடு குறித்து விவாதித்தனர்.அதே வேளையில் ஓட்டலின் மற்றொரு பகுதியில் தேசிய ஊடகவியலாளர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தேஜஸ் டெய்லியின் ஆசிரியர் கோயா தலைமை வகித்தார். கூட்டத்தை சுப்ரீம் கோர்ட் வக்கீல் பிரசாந்த் பூஷன் துவக்கிவைத்தார்.மற்றொரு இடத்தில், தேசிய உலமாக்கள் கருத்தரங்கம், "அதிகாரமளித்தலில் மதம்' என்ற தலைப்பில் நடந்தது. தேசிய பெண்கள் கருத்தரங்கம் கோழிக்கோடு கடற்கரை அருகில் நடந்தது. "அரசியல் அதிகாரத்தில் பெண்கள்' என்ற கருத்தை மையமாக கொண்டு நடந்த இக்கருத்தரங்கை ராஜஸ்தான் பி.யு.சி.எல்., அமைப்பின் தலைவர் கவிதா ஸ்ரீ வத்சவா துவக்கிவைத்தார். இக்கருத்தரங்கில் தமிழகம் சார்பில் ஜமியத்துன்னிசா அமைப்பின் பொருளாளர் சித்தி அலியார் கலந்து கொண்டாரகடந்த 15ம் தேதி மாலை 3 மணிக்கு பி.எப்.ஐ., அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்ட பிரமாண்ட அணிவகுப்பு பேரணி நடந்தது. இப்பேரணியில் லட்சக்கணக்கான இளைஞர்கள் கலந்து கொண்டனர்.கோழிக்கோடு ராஜாஜி சாலையில் உள்ள ஸ்டேடியத்தில் இருந்து பி.எப்.ஐ., தலைவர் அப்துல் ரகுமான் தலைமையில் புறப்பட்ட இப்பேரணி மூன்று கி.மீ., தூரம் பயணித்து கோழிக்கோடு கடற்கரையில் உள்ள திடலை அடைந்தது.அங்கு, இரவு 7 மணிக்கு பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தை தென்னாப்ரிக்க அதிபரின் சிறப்பு ஆலோசகர் இப்ராகிம் ரசூல் துவக்கி வைத்தார்.இதில், தமிழக பி.எப்.ஐ., தலைவர் முகமது அலி ஜின்னா மற்றும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், ஆண்கள், பெண்கள் என இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். கோழிக்கோடு கடற்கரையே மனித கடலில் மூழ்கிப் போயிருந்ததை காண முடிந்தது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment