அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Saturday, April 18, 2009

திப்புவின் ஆட்சித்திறன்


திப்பு சுல்தான் 1787 ஆம் ஆண்டு தனது ஆட்சியின் கொள்கைகள் சிலவற்றைப் பிரகடனம் செய்தார். அவற்றை வரி தவறாமல் வாசித்து, வரிகளுக்குள் பொதிந்து கிடக்கும் கருத்துகளின் ஆழ அகலங்களை ஆய்வுசெய்து பார்த்தால் திப்புவின் ஆட்சித் திறனும் அரசியல் மேன்மையும் வெளிப்படும். பிற மதங்களிடம் சகிப்புத் தன்மையே புனித குரானின் அடிப்படைக் கோட்பாடு. மத விஷயங்களில் நிர்ப்பந்தம் என்பதே கூடாது; அவரவர் விருப்பத்தை மதிப்பதே புனித குரானின் வாக்கு; பிற மதங்களின் விக்ரகங்களை அவமதிக்காதீர்; பிற மதத்தினருடன் வாதம் புரியக் கூடாது எனக் கட்டளையிடுகிறது புனித குரான். மனிதர்கள் தங்கள் நற்காரியங்களில் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்வது அவசியம்; நமக்கொரு நல்ல மார்க்கம் வழங்கப்பட்டுள்ளது.

அல்லா விரும்பியிருந்தால் எல்லோரையும் ஒரே இனமாகவே படைத்திருப்பார். எனவே, ஒருவர் மற்றவர் நற்காரியங்களுக்காகத் துணை புரியுங்கள் என்கிறது திருமறை. எங்களுக்கு ஓர் இறைவனைக் காட்டப்பட்டுள்ளார். உங்கள் இறைவனும் எங்கள் இறைவனும் ஒருவரே. அவரிடம் சரணடைவோம் என உபதேசிக்கிறது திருக்குரான். மதப் போர்வையில் சிலர் இறைவனின் சாம்ராஜ்ஜியத்தில் அத்துமீறி நுழைந்து பொய்யையும், கடவுள் தன்மையற்ற வெறுப்பையும், பகைமையையும், உபதேசிப்பதைக் கண்டு வேதனைப்படுகிறேன். சாதி, மதம், இனம் இவற்றின் பெயரால் நமது மைசூர் அரசின் ஆளுகையில் உள்ள எவரையும் வேறுபடுத்திப் பார்ப்பதையும், ஒதுக்குவதையும் நான் சட்டவிரோதமானது என அறிவிக்கிறேன்.

காலத்தால் அழிக்க முடியாத இந்த அறிவிப்பை திப்புவின் ஆட்சிக்காலத்திலிருந்த மக்கள் அனைவரின் நெஞ்சங்களிலும் கல்வெட்டாய்ப் பதிக்க முயற்சித்தார் திப்பு. திப்பு தன்னை ஒரு முழுமையான இஸ்லாமியராகவே வடிவமைத்துக் கொண்டார். அவர் சார்ந்த மதத்தில் முழு ஈடுபாடு கொண்டவராக விளங்கினார். ஆனாலும் அவரது ஆட்சியில் இந்துக்களுக்கு சுதந்திரமான முழு வழிபாட்டு உரிமைகள் இருந்தன. அவரது ஆட்சி அதிகாரத்தில் இந்துக்கள் பலர் மிகவும் உயர்மட்டப் பதவிகளில் இருந்தனர். தவறு நடக்கும் போது இஸ்லாமியர் என்பதற்காக திப்பு என்றுமே தனிச் சலுகை வழங்கியதில்லை. இந்துக் கோயில்களுக்கு மானியங்களை அள்ளி அள்ளி வழங்கினார் திப்பு.

சிருங்கேரி மடத்தை மராட்டிய மன்னர்களின் வெறிகொண்ட தாக்குதலிலிருந்து காப்பாற்றியவர் திப்பு. மத விவகாரங்களை முறையாகக் கவனிப்பதற்கென்று தனி அமைச்சகத்தை ஏற்படுத்தி நல்லிணக்கத்தை கண்ணின் கருமணிபோல் காப்பாற்றினார். மைசூர் நாட்டில் நஞ்சன்கூடு பகுதியில் பிரசித்தி பெற்ற நஞ்சுண்டேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த ஆலயத்திற்கு திப்பு வழங்கிய மரகதலிங்கம்முக்கியத்துவம் பெற்றதாகும். ஒன்பதரை அங்குலம் உயரமுள்ள பச்சை வண்ண மரகதலிங்கம் இப்போதும் கோயிலில் பார்வதி சிலைகுப் பக்கத்தில் உள்ளது. இன்றளவும் இந்த லிங்கம் பார்வதியுடன் சேர்த்து பரவசத்தோடு மக்களால் வழிபடப்படுகிறது. திப்பு வழங்கிய இந்த அரிய மரகதலிங்கத்தை பாதுஷா லிங்கம்என்றே அழைக்கின்றனர்.

திப்புவின் மலபார் படையெடுப்பின்போது குருவாயூர் கைப்பாற்றப்பட்டது. அங்குள்ள புகழ்மிக்க கிருஷ்ணன் கோயிலில் பூஜை செய்யும் அர்ச்சகர்கள்,திப்புவின் படை முற்றுகையிட்டுவிட்டதால் கோயிலுக்கு சேதம் ஏற்பட்டு விடுமோ என்று அஞ்சினர். அவசர அவசரமாக கருவறையில் இருந்த கிருஷ்ணன் சிலையை அப்புறப்படுத்தி வேறு ஒரு மறைவான இடத்தில் கொண்டுபோய் வைத்தனர். இந்தச் செய்தியறிந்த திப்பு, அர்ச்சகர்கள் அனைவரையும் அழைத்து, தைரியம் கூறியதுடன், தாமே முன்னின்று, மீண்டும் கருவறையில் இருந்த இடத்திலேயே அச்சிலையை பிரதிஷ்டைசெய்து, தானும் மகிழ்ந்து அனைவரையும் மகிழ்வித்தார். அத்துடன் குருவாயூர் வட்டத்தில் வசூலாகும் வரிப்பணம் முழுவதும் கிருஷ்ணன் கோயிலுக்கே அர்ப்பணம் செய்தார். திப்பு ஆட்சியின் தலைநகரமாக விளங்கிய சீரங்கப்பட்டணத்தில் சீரங்கநாதர் கோயில் உள்ளது.அரண்மனை அருகிலேயே அமைந்த இக்கோயிலின் மீது திப்புவுக்குத்தனி ஈடுபாடு இருந்தது. இக்கோயிலுக்கு திப்பு வழங்கிய பல வழிபாட்டுப் பொருள்கள் இன்றும் அவர் பெயரைத் தாங்கியபடி அக்கோயிலில் உள்ளன.

தனது கொள்கையறிவிப்பால் மட்டுமல்லாது நடைமுறையில் ஆட்சியிலும், தனிப்பட்ட வாழ்விலும் இத்தகைய மக்கள் சார்ந்த கொள்கைகளைப் பின்பற்றியவர் திப்பு. இறைவனின் தோட்டத்து மலர்கள் பலநிறம் கொண்டவை. அவை அன்பு எனும் தேன் நிறைந்தவை. அதுபோலவே மதங்களும் அன்பை வளர்க்கும் பல நெறிகளாகும்என்கின்ற குரானின் வாசகத்தை பிறழாமல் உணர்ந்து பின்பற்றியவர் திப்பு சுல்தான் என்று இஸ்லாமிய அறிஞர்களே பாராட்டி இருக்கின்றனர். மதத்தையும் அரசியலையும் கலக்காத மாசற்ற மன்னராகத் திகழ்ந்தவர் திப்பு சுல்தான்.

No comments: