அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Saturday, April 18, 2009

உலகை மயானமாக்கிவரும் ‘உலகமயமாக்கல்’

தாராளமயமாக்குதல் அல்லது உலகமயமாக்குதல் எனும் வார்த்தையை சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஆங்கிலேயரும் பிரஞ்சுக்காரர்களும் உருவாக்கினர். சர்வதேச எங்கும் ஒரு பொருள் பாவனையிலுள்ளது, அல்லது உலகின் பல பகுதிகளிலும் அப்பொருள் உற்பத்தி செய்யப்படுகிறது என்பதை விளக்குவதற்காக இந்த உலகமயமாக்கல் என்ற பதம் பிரயோகிக்கப்படவில்லை. மாறாக அப்பொருளை உற்பத்திசெய்பவர் உலகெங்கும் அதனை பொதுவான பொருளாக்கவேண்டும்; என்ற நோக்குடன் செயல்படும் முறைமையையே இவ்வார்த்தை குறிப்பிடுகிறது. ஒரு வியாபார நிறுவனம் ஒரு உற்பத்திக்கொள்கையை வகுத்துக்கொண்டு அப்பொருளின் உற்பத்திச்செலவு உலகில் எங்கு குறைவாக உள்ளதோ அங்கு உற்பத்தியை அதிகரித்துக்கொண்டு பின்னர் அதனை உலகெங்கும் விற்று இலாபம் ஈட்டுவது மட்டுமே அதன் கொள்கையாகும்.

அமெரிக்க வணிகச்சங்கங்களின் செயல்களை விளக்குவதற்காக 1980ற்குப்பிறகு தாராளமயமாக்கல் எனும் சொல் உருவாக்கப்பட்டது. 1981ல் அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்த ரிகன் தனது நாட்டின் சர்வதேச அரசியல் பொருளாதார தொடர்புகளில் அதிரடியான மாற்றங்களை கொண்டுவந்தார். இதன் விளைவாக "பலம் பொருந்திய டாலர்" எனும் கொள்கை உருவாகியது. அயல் நாடுகளிலுள்ள செல்வந்தர்கள் அமெரிக்காவில் தமது முதலீடுகளை செய்வதற்கு அக்கொள்கைகள் வழிவகுத்தன. அதன் மூலம் வரும் பெரும் வருமானம் அமெரிக்காவின் ஆயுத பலத்தை அதிகரிக்கவும், அன்றைய சோவியத் நாடுகளின் வளர்ச்சியை கட்டுப்படுத்தவும்; பயன்படுத்தப்பட்டது. இதுவே சோவியத் வீழ்ச்சியுற ஒரு காரணமாயிற்று.

திடமான டாலர் கொள்கையால் டாலரின் மதிப்பு ரிகனின் ஆட்சியில் உயர்ந்தது. டாலரின் மதிப்பைக்கொண்டு பொருள் உற்பத்தி செய்த அமெரிக்க நிறுவனங்கள் அதே பொருளை உற்பத்தி செய்த வெளிநாட்டு நிறுவனங்களோடு போட்டியிட முடியாமல் சில நிறுவனங்கள் நஷ்டம் அடைந்தன. இத்தகைய நிறுவனங்களுக்கு மறுவடிவம் கொடுத்து அவற்றை உயர்த்த சில அமெரிக்க ஆய்வாளர்கள் விழைந்தனர். மறுவடிவம் கொடுக்கும் முயற்சியில் பலர் வேலையிழந்தனர். அமெரிக்க நிறுவனங்களான Genaral Motors மற்றும் IBM நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள் பலரை வெளியேற்றினர். வெளிநாட்டில் கிளைகள் தொடங்கியும் தங்கள் நஷ்டத்தை சீர் செய்ய இவை விழைந்தன.

இந்த டாலர் கொள்கையால் சர்வதேச சந்தையில் பொருட்களின் விலை மற்றும் மக்களின் ஊதியம் குறைந்திற்று. இந்தியா, தாய்லாந்து போன்ற ஏழை நாடுகளின் ஒரு மாதத்தின் ஒரு ஊழியனின் ஊதியமானது அமெரிக்காவில் ஒரு மணிநேர ஊதிய அளவைவிடக் குறைவாகும். வேலைவாய்ப்புகளை இழத்தல், நிறுவனங்கள் திடீரென நஷ்டமடைதல் போன்ற மேற்கூறப்பட்ட விளைவுகளினால் அமெரிக்க மக்கள் “இலாபம் ஒன்றே" தங்கள் நாட்டு நிறுவனங்களின் குறிக்கோள் என அந்த நிறுவனங்களை குற்றம் சாட்டினர். ஆனால் சர்வதேச அளவில் எழுந்த போட்டியினால்தான் அவை அவ்வாறு செய்ய வேண்டி ஏற்பட்டன என அந்நிறுவனங்கள் பதில் அளித்தன. அப்போது 1987 ல் அமெரிக்க மேல் சபையினர் ஒன்று கூடி உலகமயமாக்கல் பற்றி பேசத் தொடங்கினர். பின்னர் பல ஆராய்ச்சிகளின் மூலமும், பல பொருளாதார கொள்கைசார் நு}ற்களை பதித்தும் உலகமயமாக்கல் எனும் கொள்கையை அமெரிக்கா அறிவித்தது.

வேலையிழப்பினால் ஏற்பட்ட குழப்பங்கள், வேற்று நாடுகளில் குறைந்த ஊதியத்தில் வேலை வாங்குதல் போன்ற பலவற்றை இந்த ஆராய்ச்சிகள் வெளியிட்டன. புஷ் ஆட்சியின் போது கையெழுத்திட்ட (கனடா - மெக்ஸிகோ) உடனான ஒப்பந்தத்திற்கு கிளிண்டன் ஆட்சியில் காங்கிரஸ் ஒப்புதல் அளித்தமையால் கூலி குறைவாக உள்ள மெக்ஸிகோவில் பொருட்களை உற்பத்தி செய்ய வழி வகுத்தது. இவ்வாறு தயாரிக்கப்பட்ட பொருட்கள் கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளில் விற்பனை செய்யப்பட்டன. இதற்கு அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்தது.

இவ்வாறாக நடந்த பல சர்ச்சைகள் உலக மக்களிடையே “உலகமயமாக்குதலை" உறுதிப்படுத்தியது. 1992ல் நிதி மிகுந்த நிறுவனங்களின் சுய இலாபத்திற்காக இவ்வகையான சர்ச்சைகள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டன. இதன் விளைவாக படித்த அனுவத்தேவையுள்ள வேலைகள் அமெரிக்காவில் செய்யப்படும் எனவும், உடலுழைப்பு தேவைப்படும் கடுமையான வேலைகள் மட்டுமே அமெரிக்காவிற்கு வெளியில் வேற்று நாடுகளில் நடைபெறும் எனவும் முடிவுகள் எடுக்கப்பட்டன. இதன் காரணமாக இவ்வேலைகளின் பயன்களை அமெரிக்கர்கள் பெற முடியும் என்பது மட்டுமல்லாமல் முன்னேற்றம் வாய்ந்த தொழில்களில் அவர்கள் ஏற்றம் பெறுவர் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது. இதன்மூமம் வெளிநாடுகளில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் அமெரிக்கர்ளுக்கு மலிந்த விலையிலும் கிடைக்கும் என்றும் கூறப்பட்டது.

1992ல் பதவி வகித்த புஷ்ஷின் கொள்கைகள் ஏற்றுமதியைப் பெருக்குவதிலும், உலக வர்த்தக நிறுவனங்களை உருவாக்குவதிலுமே முனைப்பு காட்டின. எனினும் வர்த்தக நிறுவனங்களோ தாங்கள் தொடங்கிய நிறுவனங்களை சீர் செய்து இலாபம் ஈட்டவே முயன்றன. மேலே கூறப்பட்டது போல் பொருள் உற்பத்தி செய்யவேண்டிய வேலையை வெளிநாட்டில் செய்யவேண்டும் என்றும் அவை எண்ணம் கொண்டன. ஆகவே இந்நிறுவனங்கள் அனைத்தும் அயல்நாட்டு நிறுவனங்களுடன் போட்டி போடலாயின.

பல ஆண்டுகளாக பனிப்போரின் காரணமாக, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளை விட தாம் பின் தங்கி இருப்பதாகவும், தற்போது பனிப்போர் முற்றுப்பெற்ற நிலையில் அந்நாடுகளைவிட அமெரிக்கா முன்னேற்றம் காணவேண்டும் எனவும் அமெரிக்க வர்த்தக நிறுவனங்கள் வலியுருத்தின. மேலும் அந்நாடுகளுடன் எந்தவித சமரச கொள்கையும் வைத்திராமல் தீவிர போட்டியில் இறங்கவேண்டும் எனவும் கருத்து தெரிவித்தன.

இதற்கு ஒப்புதல் அளிக்கும் விதமாக பின்னர் வந்த கிளிண்டன் அரசு அமெரிக்க நிறுவனங்களின் பொருட்களை விற்க சந்தை தேடவும், குறைந்த கூலி உள்ள இடங்களில் பொருட்களை தயாரிக்கவும் ஆதரவு வழங்கியது. வங்கிகள், காப்பீடு நிறுவனங்கள் பலவும் இதில் அடங்கும். பனிப்போரின் இறுதியில் உலகம் பொருளாதார அடிப்படையில் மூன்றாக பிரிக்கப்பட்டது. அவை (1) மேற்கு ஐரோப்பாவின் கீழ் ஐரோப்பாவும் (2) ஜப்பானின் கீழ் ஆசியாவும் (3) அமெரிக்காவின் கீழ் வட அமெரிக்காவும் தென் அமெரிக்காவும் என பிரிக்கப்பட்டது. தங்களின் வீழ்ச்சிக்கு இப்பிரிவுகள் வழிவகுக்கும் என நினைத்த அமெரிக்க நிறுவனங்கள் இதை நிலவாரியான பிரிவினை என குற்றஞ்சாட்டியது. இந்த நிறுவனங்கள் ஜப்பானும் ஐரோப்பாவும் கூட தங்கள் கருத்தைத்தான் வலியுருத்துகின்றன என கூறின. மாறாக உலகையே ஒரே சந்தையாக பார்க்க வேண்டும் என்றும் யாரும் எந்த பகுதியிலும் ஆதிக்கம் செலுத்த முடியாது என்றும் அமெரிக்கா தனது கருத்தை இதன்போது பிரகடனப்படுத்தியது.

இதை கிளின்டன் அரசு ஒப்புக்கொண்டது. இவ்வகையான பிரகடனங்கள், போலியான தரம் குன்றிய எண்ணங்கள் நன்கு திட்டமிட்டதாகவும் பனிப்போரின் வெற்றியை அமெரிக்காவிற்கு ஈட்டித்தருவது போன்றும் இருந்தது. இந்தக் கருத்துக்களை வளரும் நாடுகளிலும் பிரச்சாரப்படுத்தி உலக மக்களின் ஏகோபித்த ஒத்துழைப்பை பெற்றது அமெரிக்கா. இப்பொழுது அந்த பிரச்சாரங்கள் வெற்றி பெற்றுவிட்டன என்றுதான் கூறவேண்டும். அயல்நாட்டு ஆட்சியாளர்கள் தங்கள் நாட்டை அமெரிக்க பொருட்களுக்கு சந்தையாக ஆக்கி தங்கள் நாட்டு மக்களை மிகக் குறைந்த விலைக்கு விற்றுவிட்டனர் என்றுதான் கூறவேண்டும்.


உலகமயமாக்கல் என்னும் வார்த்தைக்குப்பின் உள்ள உண்மைகளாவன...

(1)சோவியத் நாடுகளின் வீழ்ச்சிக்குப் பின் உலகில் நிலவியது ஒரே ஒரு பொருளாதாரக் கொள்கை அது தாராளமயமாக்கப்பட்ட வர்த்தகமாகும். இதன் மையப்பொருள் “மூலதனம்"(இலாபம் ஒன்றே குறிக்கோள்) என்பதாகும்.

(2)பன்னாட்டு நிறுவனம் எனக் கூறிக்கொள்ளும் நிறுவனங்கள் உண்மையில் பன்னாட்டு நிறுவனங்களே ஆகாது. ஏனெனில் அந்நிறுவனங்களின் தலைமை ஓரிடத்திலேயே உள்ளது. எனவே அவை அனைத்து நாடுகளிலும் ஈட்டும் இலாபம் ஒரு நாட்டையே அடைகிறது. இந்த நிறுவனங்கள் உலகெங்கிலும் உற்பத்தி செய்து வணிகம் செய்வதால் வளரும் நாடுகள் இதை வரவேற்க வேண்டிய அவசியத்தில் உள்ளன.

(3)உலகின் எந்த நாட்டு பணத்தையும் எந்த நாட்டிலும் மாற்றலாம். அதற்கு மிக எளிதான வழிமுறைகள் கண்டறியப்பட்டுள்ளன. தொலைத்தொடர்பு மிக சாதாரணமாகியதால் எங்கிருந்தும் எதையும் கண்காணிக்க இயலும் என்ற நிலை உருவாகியுள்ளதால் இது மிக இலகுவாக செய்யக்கூடிய ஒன்றாக மாறியுள்ளது.

இதன் காரணமாக மூன்றாம் நிலை நாடுகளில், மேலைநாட்டின் பணத்தையும், அது தீர்மானிக்கின்ற சட்டங்களையும் செயல்படுத்த வேண்டும் என்ற தவறான நிலையும் உருவாகியுள்ளன. இத்தகைய போக்கிற்கு இசைவதைத்தவிர வேறு வழி இல்லை என்ற நிலைப்பாடு இந்த மூன்றாம் நிலை நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளன. இவ்வாறு உலகமயமாக்கலால் உலகளாவிய ரிதியில் மேற்கொள்ளப்படுகின்ற பொருளாதார ஆக்கிரமிப்பு கடந்த நு}ற்றாண்டுகளில் கிருஸ்தவ மிஸனரிகளின் பின்னணியில் மேற்கொள்ளப்பட்ட கலாச்சார ஆக்கிரமிப்பைவிட மிகவும் மோசமானதாகும்.

No comments: