| |
ஒன்றரை வருடங்களுக்கு முன்னர், சுவாட் பள்ளத்தாக்கு பிரதேசத்தில், பாகிஸ்தான் இராணுவம் தனது "பயங்கரவாத எதிர்ப்புப் போரில்" ஈடுபட்டிருந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் மடிந்து, வீடுகளை துறந்து ஓட வைத்த அந்தப் போரில், பாகிஸ்தான் இராணுவத்தால் வெற்றி பெற முடியவில்லை. இறுதியில் தீவிரவாதிகளுடன் சமாதான ஒப்பந்தம் போட்டது. ஒப்பந்தப்படி அவர்களின் கோரிக்கையான ஷரியா என்ற இஸ்லாமிய சட்டத்தை அமுல் படுத்த ஒப்புக் கொண்டது. இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வருவதற்கு, பத்தாண்டுகளுக்கு முன்னர் ஷரியாவுக்காக ஆயுதப் போராட்டத்திற்கு தலைமை தாங்கி, தற்போது சிறையில் இருக்கும் சூபி முகமதின் மத்தியஸ்தம் பெறப்பட்டது. ஷரியாவுக்கான அரசியல் இயக்கம், சூபி முகமதின் சிந்தனையில் உதித்து, தற்போது செயல்வடிவம் பெற்றுள்ளது.
சுவாட் மாகாணத்திற்கு வடக்கே, "டிர்" என்ற இன்னொரு பழங்குடியின நகரம் உள்ளது. எண்பதுகளில் ஆப்கான் ஜிகாதிகளை உருவாக்கிய, மதராசா ஒன்றில் பயின்றவர் தான் சூபி முஹமது. ஆரம்பத்தில் ஜமாத்-எ-இஸ்லாமி என்ற மதவாத அரசியல் கட்சியில் இணைந்து, பின்னர் பிரபல உள்ளூர் தலைவராக உருவெடுத்தார். ஆனால் வெறும் மேடைப் பேச்சுகளில் மட்டுமே வாக்குறுதிகளை அள்ளி வழங்கும் அரசியல், சூபி முஹமட்டிற்கு சலிப்பை தந்தது. கட்சி அரசியலில் வெறுப்புற்ற வேறு சில தோழர்களுடன் இணைந்து, 1992 ல் "ஷரியாவுக்கான இயக்கம்" (TNSM) ஸ்தாபித்தார். அவர்களது இயக்கத்தின் செயல் தளமாக, சுவாட் பள்ளத் தாக்கை தெரிவு செய்தது தற்செயலானதல்ல. ஆப்கானிஸ்தானுக்கும், காஷ்மீருக்கும் நடுவில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த மலைப்பகுதி கொரில்லா யுத்தத்திற்கு பொருத்தமான இடமாகும். 1994 ம் ஆண்டு, முஹமதும் அவரது போராளிகளும் தொடுத்த வெற்றிகரமான திடீர் தாக்குதலில், உள்ளூர் விமான நிலையத்தையும் பிற கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களையும் கைப்பற்றினர். அரசை தமது கோரிக்கைக்கு அடிபணிய வைத்தனர். ஷரியா சட்டம் கொண்டு வர அரசு சம்மதித்தது. ஆனால் நடைமுறையில் அங்கே எதுவும் மாறவில்லை. சில நீதிபதிகள் மட்டும் மாற்றப்பட்டனர். அப்போதும் நீதி அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய பொருளாக இருந்தது. சட்டம் ஏழைகளுக்கு எட்டாக்கனியாகவே இருந்தது. முஹமதின் போராளிகள் "மீண்டும் ஆயுதங்களை தூக்குவோம்" என சூளுரைத்தனர். இதே நேரம் 2001 ம் ஆண்டு, ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா படையெடுத்தது. அமெரிக்கருடன் போரிட ஆப்கானிஸ்தானுக்குள் சென்ற முஹமதும், சில போராளிகளும் அங்கே வைத்து கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். அத்துடன் கதை முடியவில்லை. சூபி முஹமதின் மருமகன் மவ்லானா பஸ்லுல்லா தலைமையில் புதிய தலைமுறை போராளிகள் தோன்றினர். ஆயுதப் போராட்டத்துடன், அரசியல் பிரச்சாரத்திலும் கவனம் செலுத்தினர். "முல்லா வானொலி" மக்கள் மத்தியில் இயக்கத்தின் கருத்துகளை கொண்டு செல்வதில் முதன்மைப் பாத்திரம் ஏற்றிருந்தது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்திய போர் அவர்களின் பிரச்சாரத்திற்கு உந்துசக்தியாக இருந்தது. "அயல் நாட்டு முஸ்லிம்களை இன அழிப்பு செய்யும் அமெரிக்கர்கள், எப்படி எமது நாட்டு நலன்விரும்பிகளாக இருக்கலாம்?" என்ற பரப்புரைகள், மக்கள் மத்தியில் இலகுவில் எடுபட்டன. "சுவாட் மக்கள் இஸ்லாமிய நெறிமுறைக்கு ஏற்ப வாழ்ந்தாலே, அமெரிக்க அபாயத்தில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம்" என்று தீர்வையும் சொல்லிக் கொடுத்தனர். பெண்பிள்ளைகள் பாடசாலை செல்லக்கூடாது என்ற கோரிக்கை, பெருமளவு பெண்களிடம் கூட எடுபட்டது. மவ்லானா இஸ்லாமியப் பாடசாலை கட்டுவதற்கு நிதி கோரிய போது, பல பெண்கள் தமது நகைகளை கழற்றிக் கொடுத்தமை குறிப்பிடத் தக்கது. அப்போது சுவாட் மாகாணத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற மிதவாத இஸ்லாமியக் கட்சி ஆட்சியில் இருந்தது. அவர்களைப் பொறுத்த வரை, மவ்லானா குழுவினர் "தீவிரவாதிகள்". ஆகவே 2007 ம் ஆண்டு, தீவிரவாதிகளை ஒழித்துக் கட்டுமாறு இராணுவத்தை ஏவி விட்டனர். ஒரு சிறிய பயங்கரவாதக் குழுவை, பெரிய படை கொண்டு அடக்கி விடலாம் என்று தான் பாகிஸ்தானிய இராணுவம் எதிர்பார்த்தது. ஆனால் நடந்ததோ வேறு. கெரில்லாக்களின் தாக்குதல்களுக்கு இராணுவம் முகம் கொடுக்க முடியாது தடுமாறியது. பாடசாலைகள் உட்பட அரச கட்டிடங்கள் எல்லாம் குண்டுத் தாக்குதல்களுக்கு உள்ளாகின. சந்தைகளிலும், வீதிகளிலும் காணப்பட்ட பெண்கள் விரட்டப்பட்டனர். தீவிரவாதிகளை காட்டிக் கொடுப்போரும், எதிர்ப்போரும் பகிரங்கமாக தூக்கிலடப்பட்டனர். சமாதான ஒப்பந்தத்திற்குப் பின்னர், தற்போது அமைதி திரும்பி விட்டது. ஷரியா சட்டம் பூரணமாக நடைமுறைப்படுத்தப் பட்டதால் பெரும்பான்மை மக்களுக்கும் திருப்தி தான். ஆனால் சுவாட் மாகாணத்தில் ஆயுதமேந்திய போராளிகளின் ஆட்சி நடக்கின்றது. பாகிஸ்தான் அரச காரியாலயங்கள், நீதி மன்றங்கள், பொலிஸ் நிலையங்கள், எதுவும் இயங்குவதில்லை. இராணுவம் சண்டையிட முடியாமல் பின்வாங்கி விட்டது. சுவாட்டில் நடந்தது ஒரு வகை வர்க்கப் போராட்டம். "ஷரியாவுக்கான இயக்கம்", வறிய மக்களின் ஆதரவைப் பெற்றிருந்தது. ஊழல் ஆட்சிக்கு உறுதுணையாக நின்ற நிலப்பிரபுக்களை எதிரியாகப் பார்த்தது, பலர் கொல்லப்பட்டனர். பெருமளவு ஏழை விவசாயிகள், வேலையற்ற இளைஞர்கள், சிறு குற்றங்கள் புரிந்தோர், ஆகிய அடித்தட்டு மக்கள் அந்த இயக்கத்தில் போராளிகளாக சேர்ந்திருந்தனர். எப்போதும் வறிய மக்களுக்கு மத நம்பிக்கை அதிகம். தமது கஷ்டங்களுக்கு விடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான் ஆண்டவனிடம் சரணடைகின்றனர். எனவே "ஷரியா என்ற இஸ்லாமிய சட்டம்", ஏழைகளுக்கு துரிதகதி நீதி வழங்கும், மலிவுவிலை சட்டமாக இருக்கும் என்றால் யார் தான் ஆதரவளிக்க மாட்டார்கள்? |
Wednesday, April 15, 2009
ஷரியா: ஏழைகளுக்கும் எளிதாக எட்டும் சட்டம்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment