அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Thursday, April 23, 2009

ஓட்டளிக்க மாற்று ஆவணங்கள் அறிவிப்பு!

'ஓட்டளிப்பதற்கு புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள், 13 வகையான மாற்று ஆவணங்களைக் காண்பித்து ஓட்டளிக்கலாம்' என, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இதுகுறித்து தேர்தல் கமிஷன் பிறப்பித்துள்ள உத்தரவு: கள்ள ஓட்டுக்களைத் தடுக்க, ஓட்டுப்பதிவின் போது அடையாளத்தை உறுதிபடுத்த, வாக்காளர் புகைப்பட அட்டையை அடையாள ஆவணமாகக் காண்பிக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டிருந்தது. இதற்காக ஒவ்வொரு தொகுதியிலும் வாக்காளர்களுக்கு புகைப்பட அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

அசாம், ஜம்மு-காஷ்மீர், நாகாலாந்து தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலும் தயாரிக்கப்பட்டுள்ளது. எனினும், வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலே, ஓட்டளிக்கும் உரிமையை வாக்காளர் பெறுகிறார். எனவே, புகைப்பட அடையாள அட்டை பெற்ற வாக்காளர்கள், வரும் லோக்சபா தேர்தலில் அதைக் காண்பித்து ஓட்டளிக்க வேண்டும். அவ்வாறு வாக்காளர் அடையாள அட்டையைக் காண்பிக்கத் தவறும் வாக்காளர்கள், புகைப்படத்துடன் கூடிய 13 வகையான மாற்று ஆவணங்களைக் காண்பித்து ஓட்டளிக்கலாம்.

அவை வருமாறு:



1. பாஸ்போர்ட்


2. டிரைவிங் லைசென்ஸ்


3. வருமான வரி அடையாள அட்டை (பான் கார்டு)


4. மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை, உள்ளாட்சி அமைப்புகளின் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள புகைப்படத்துடன் கூடிய பணியாளர் அட்டை.


5. பொதுத்துறை வங்கிகள், தபால் அலுவலகங்கள் வழங்கிய பாஸ் புத்தகங்கள், கிசான் பாஸ் புத்தகங்கள். கணக்கை இந்த ஆண்டு பிப்ரவரி 28ம் தேதிக்கு முன் துவக்கியிருக்க வேண்டும்.


6. பட்டா, பத்திரப் பதிவு போன்ற புகைப்படத்துடன் கூடிய சொத்து ஆவணங்கள்.


7. ஆதிதிராவிடர், பழங்குடியினர். இதர பிற்பட்ட வகுப்பினருக்கு, வழங்கிய புகைப்படத்துடன் கூடிய சான்றுகள்.


8. பென்ஷன் ஆவணங்கள்


9. சுதந்திரப் போராட்ட வீரர் அடையாள அட்டைகள்.


10. ஆயுத லைசென்ஸ் அட்டைகள்.


11. உடல் ஊனமுற்றோருக்கான அடையாள அட்டைகள்.


12. தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட பணி கார்டுகள்.


13. தொழிலாளர் நல அமைச்சகத்தின், மருத்துவக் காப்பீட்டுத் திட்ட 'ஸ்மார்ட் கார்டு'கள்.



இந்த 13 ஆவணங்களும், இந்த ஆண்டு பிப்ரவரி 28ம் தேதிக்கு முன் பெற்றிருக்க வேண்டும். மேலும், இந்த ஆவணங்களில் குடும்பத் தலைவரின் புகைப்படம் மட்டும் இருந்தால், அந்த குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக ஓட்டுச்சாவடிக்கு வந்து, வாக்காளரை குடும்பத் தலைவர் அடையாளம் காண்பித்த பிறகே ஓட்டளிக்க முடியும். இவ்வாறு தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

No comments: