சூரத்: பணியின் போது நடத்தை சரியில்லாததால், சஸ்பெண்ட் செய்யப்பட்ட மற்றும் சிறையில் அடைக்கப்பட்ட போலீஸ்காரர் தற்போது பாரதிய ஜனதா கட்சி சார்பில், எம்.பி.,சீட் கேட்டுள்ளார். குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்தவர் சந்திரகாந்த் பாட்டீல்(55). 1975ம் ஆண்டு போலீஸ்காரராக பணியில் சேர்ந்தார். 78ம் ஆண்டு கள்ளசாராய வியாபாரிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதாக, இவர் மீது புகார் பதிவு செய்யப்பட்டது. இதே குற்றத்தை அவர் மீண்டும் செய்ததால், ஆறாண்டு காலத்துக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டார். 84ம் ஆண்டு மீண்டும் பணியில் சேர்ந்த பாட்டீல், போலீஸ் சங்கத்தை ஆரம்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டதற்காக மீண்டும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஆக்ட்ராய் வரி ஏய்ப்பு குற்றத்தில், ஈடுபட்ட ஜவுளி மில் அதிபர்களுக்கு உடந்தையாக இவர் செயல்பட்டதாக சூரத் நகராட்சி இவர் மீது புகார் பதிவு செய்தது.
கடந்த 1990ம் ஆண்டு, பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார். நான்கு ஆண்டு காலத்தில் சூரத் மாவட்ட பா.ஜ.,தலைவரானார். கூட்டுறவு சங்கத்தில் 54 கோடி ரூபாய் வரை கடன் பெற்று மோசடி செய்ததாக 2002ம் ஆண்டு போலீசார் இவரை கைது செய்தனர். குஜராத் ரசாயன நிறுவன தலைவராக நியமிக்கப்பட்ட பாட்டீல்,ஜவுளி தொழிலாளர் குடியிருப்பு கட்டுவதற்காக கையகப்படுத்தப்பட்ட 48 ஏக்கர் நிலத்தை ஆக்ரமிப்பு செய்ததாக இவர் மீது புகார் கூறப்பட்டது. மற்றொரு வங்கியில் 88 கோடிரூபாய் கடன் வாங்கி விட்டு, மீண்டும் பணத்தை திருப்பி செலுத்தாததால், மாநில குற்றப்பிரிவு போலீசார் இவரை 15 மாதம் சிறையில் அடைத்தனர்.
கடந்த சட்டசபை தேர்தலில், நரேந்திர மோடியுடன் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டார். மோடிக்கு நெருக்கமானவராக காட்டிக்கொள்ளும் பாட்டீல், தற்போது லோக்சபா தேர்தலில் போட்டியிட சீட் கோரியுள்ளார். இது குறித்து, பாட்டீல் குறிப்பிடுகையில், " நான் அப்பாவி. தேவையில்லாமல் சிலர் என் மீது அவதூறுகளை சுமத்துகின்றனர். என்னை பற்றி நன்றாக தெரிந்த கட்சி மேலிடம் ஆராய்ந்து எனக்கு சீட் கொடுக்கும், என நம்புகிறேன்' என்றார்.
No comments:
Post a Comment