குர்ஆனின் கூற்றுப்படி ஒரு ஆண் சொர்க்கத்தில் 'ஹுர்' என்னும் பெண்ணைத் துணையாகப் பெருவான். அப்படியெனில் சொர்க்கத்தில் ஒரு பெண்ணுக்குத் துணையாக என்ன கிடைக்கும்.?.
பதில்:
1. 'ஹுர்' பற்றி அருள்மறை குர்ஆன் குறிப்பிடுகிறது. அருள்மறை குர்ஆனில் 'ஹுர்' பற்றி நான்கு இடங்களில் சொல்லப்படுகிறது. அத்தியாயம் 44 ஸுரத்துத் துகானின் 54வது வசனம் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறது.
'..மேலும் அவர்களுக்கு ஹுருல்ஈன்களை நாம் மணம் முடித்து வைப்போம்.'.
அத்தியாயம் 52 ஸுரத்துத் தூரின் 20வது வசனம் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறது.
'..மேலும் நாம் அவர்களுக்கு நீண்ட கண்களையுடைய (ஹுருல் ஈன்களை) மணம் முடித்து வைப்போம்.'.
அத்தியாயம் 55 ஸுரத்துர் ரஹ்மானின் 72வது வசனம் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறது.
'..ஹுர் (என்னும் அழகானவர்கள்) கூடாரங்களில் மறைக்கப்பட்டிருப்பர்.'.
அத்தியாயம் 56 ஸுரத்துல் வாகிஆவின் 22வது வசனம் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறது.
'(அங்கு இவர்களுக்கு) ஹுருல் ஈன் (என்னும் நெடிய கண்களையுடையவர்கள்) இருப்பர்'.
2. 'ஹுர்' என்ற அரபி வார்த்தைக்கு 'அழகிய கன்னியர்' என்று மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.
அருள்மறை குர்ஆனை மொழிபெயர்த்த பல மொழிபெயர்ப்பாளர்கள் - குறிப்பாக உருது மொழியில் மொழி பெயர்த்த மொழிபெயர்ப்பாளர்கள் 'ஹுர்' என்ற அரபி வார்த்தைக்கு 'அழகிய கன்னியர்' என்று மொழியாக்கம் செய்துள்ளனர். 'ஹுர்' என்ற அரபி வார்த்தைக்கு 'அழகிய கன்னியர்' என்று பொருள் கொண்டால் - அது ஆண்களுக்கு மட்டும்தான் என்று ஆகிவிடும். அப்படியெனில் பெண்களுக்கு என்ன கிடைக்கும்?.
3. 'ஹுர்' என்ற அரபி வார்த்தையின் பொருள்.
'ஹுர்' என்ற அரபி வார்த்தை 'அஹ்வார்' என்ற அரபிவார்த்தைக்கும் (ஆண் பாலருக்கு பயன்படுத்தப்படக் கூடியது) 'ஹவ்ரா' என்கிற அரபி வார்த்தைக்கும் (பெண் பாலருக்கு பயன்படுத்தப்படக் கூடியது) உரிய பன்மையான (Plural) வார்த்தை ஆகும். குறிப்பாக சொர்க்கத்தில் இருக்கக் கூடிய அழகிய கண்களை உடைய ஆண்பாலரையோ அல்லது பெண் பாலரையோ குறிப்பிடுவதற்கு மேற்படி வார்த்தையை பயன்படுத்துவர்.
அருள்மறை குர்ஆன் வேறு சில வசனங்களில் சுவர்க்கத்தில் நீங்கள் 'முத்தஹ்ரதுன்' தூய்மையான மற்றும் புனிதமான 'அஸ்வாஜ்' - இணை, அல்லது துணை அல்லது ஜோடியினைப் பெருவீர்கள் என்று குறிப்பிடுகிறது. 'முத்தஹ்ரதுன்' என்கிற அரபி வார்த்தைக்கு தூய்மை மற்றும் புனிதம் என்று பொருள் கொள்ளலாம்.
அருள்மறை குர்ஆனின் இரண்டாவது அத்தியாயம் ஸுரத்துல் பகராவின் 25வது வசனம் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகின்றது:
'(ஆனால்) நம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்வோருக்கு நன்மாராயங்கள் கூறுவீராக: சதா ஓடிக் கொண்டிருக்கும் ஆறுகளைக் கொண்ட சுவனச் சோலைகள் அவர்களுக்காக உண்டு: அவர்களுக்கு உண்ண அங்கிருந்து ஏதாவது கனி கொடுக்கப்படும் பொதெல்லாம் 'இதுவே முன்னரும் நமக்கு (உலகில்) கொடுக்கப்பட்டிருக்கிறது' என்று கூறுவார்கள்: ஆனால் (தோற்றத்தில்) இது போன்றதுதான் (அவர்களுக்கு உலகத்திற்) கொடுக்கப்பட்டிருந்தன: இன்னும் அவர்களுக்கு அங்கு தூய துணைகளும் உண்டு: மேலும் அவர்கள் அங்கே நிரந்தரமாக வாழ்வார்கள். (அல்-குர்ஆன் 2:25)
அதே போன்று அருள்மறை குர்ஆனின் நான்காவது அத்தியாயம் ஸுரத்துல் நிஷாவின் 57வது வசனம் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகின்றது:
(அவர்களில்) எவர்கள் ஈமான் கொண்டு நன்மையான காரியங்களைச் செய்கின்றார்களோ அவர்களை சுவனபதிகளில் புகுத்துவோம். அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும்: அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பர்: அங்கு அவர்களுக்குப் பரிசுத்தமான துணைகளும் உண்டு: அவர்களை அடர்ந்த நிழலிலும் நுழையச் செய்வோம். (4:57)
மேற்படி அருள்மறை குர்ஆனின் வசனங்களிலிருந்து நாம் அறிவது என்னவெனில் 'ஹுர்' என்ற அரபி வார்த்தை குறிப்பாக எந்த பாலை (ஆண்பால் அல்லது பெண்பால்) குறிப்பிடுவதற்கு பயன்படுத்தப் படவில்லை என்பதுதான். அருள்மறை குர்ஆனை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்த முஹம்மத் அஸாத் 'ஹுர்' என்ற அரபி வார்த்தைக்கு Spouse (கணவருக்கு மனைவியும் - மனைவிக்கு கணவரும்) என்று மொழியாக்கம் செய்துள்ளார். அருள்மறை குர்ஆனை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்த யூசுப் அலி 'ஹுர்' என்கிற அரபி வார்த்தைக்கு Companions (இணை அல்லது துணை ) என்று மொழியாக்கம் செய்துள்ளார். இன்னும் பல மார்க்க அறிஞர்களின் கருத்துப்படி - சொர்க்கத்தில் ஒரு ஆணுக்கு அழகிய கண்களை உடைய பெண்ணும், ஒரு பெண்ணுக்கு அழகிய கண்களை உடைய ஒரு ஆணும் இணையாக அல்லது துணையாக அல்லது ஜோடியாக கிடைப்பார்கள்.
4. பெண்கள் இவ்வுலகில் கிடைக்கப்பெறாத ஒன்றை, சொர்க்கத்தில் கிடைக்கப் பெறுவார்கள். அருள்மறை குர்ஆனில் 'ஹுர்' என்கிற அரபி வார்த்தை பெண்பாலை குறிப்பிடத்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை சில மார்க்க அறிஞர்கள் ஆணித்தரமாக நம்பி வருகிறார்கள். அவர்களுக்கு பதிலளிக்கும் முகமாக ஹதீஸ் ஒன்றை நினைவூட்ட விரும்புகிறேன். அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் சொர்க்கத்தில் ஆண்களுக்கு அழகிய கண்களையுடைய பெண்கள்துணையாக கிடைப்பார்கள் எனில் - சொர்க்கத்தில் பெண்கள் எதை கிடைக்கப்பெறுவார்கள் என்று எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கும்போது - சொர்க்கத்தில் பெண்கள் மனித கண்கள் எதுவும் கண்டிராத - மனித காதுகள் எதுவும் கேட்டிராத - மனித மனங்கள் எதுவும் எண்ணிப்பாராத ஒன்றினைப் பெறுவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். மேற்படி பதில் சொர்க்கத்தில் பெண்கள் - மிகவும் சிறப்பான ஒன்றினைப் பெறுவார்கள் என்பதற்கு ஆதாரமாக அமைந்துள்ளது.
No comments:
Post a Comment