கடந்த மாதம் கஷ்மீரில் இரு பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப் பட்ட விவகாரம் தொடர்பாக 4 காவல் துறை அதிகாரிகளையும், ஒரு தடயவியல் அதிகாரியையும் இடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த மாதம் கஷ்மீர் மாநிலம் ஷோபியன் என்னும் இடத்தைச் சார்ந்த நிலோபர் மற்றும் அவரது உறவினர் ஆசியா ஆகியோர் கடத்தப்பட்டனர். வன்புணர்ந்து கொலை செய்யப்பட்ட அவ்விருவரின் உடல்கள் மே மாதம் 30ஆம் தேதி கண்டெடுக்கப் பட்டன. இது கஷ்மீர் மாநிலம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பல்வேறு இடங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப் பட்டன. பல இடங்களில் வன்முறை வெடித்தது.
கடந்த வாரம் கஷ்மீர் சென்றிருந்த உள்துறை அமைச்சர் சிதம்பரம் இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப் படும் என்று அறிவித்தார். மாநில அரசு ஓய்வு பெற்ற நீதிபதி முசப்பர் ஜான் என்பவரைத் தலைவராகக் கொண்டு நீதி விசாரணைக்கு உத்தரவிட்டது. கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு நீதிபதி முசப்பர் ஜான் தனது அறிக்கையை சமர்ப்பித்தார்.
அதன்படி காவல்துறை அதிகாரிகள் மற்றும் தடயவியல் அதிகாரியை இடை நீக்கம் செய்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.காவல் துறைக் கண்கானிப்பாளர் ஜாவித் இக்பால் மட்டூ, துணைக் கண்கானிப்பாளர் ரோஹித் பஸ்கோட்ரா, ஆய்வாளர் ஷபீக் அகமது, துணை ஆய்வாளர் காசி அப்துல் கரீம் ஆகிய காவல் துறை அதிகாரிகள் சட்டத்துக்குப் புறம்பாக சாட்சிகளை அழித்ததாகப் பணி இடை நீக்கம் செய்யப் பட்டுள்ளனர்.
ஸ்ரீநகரில் உள்ள தடயவியல் சோதனைக் கூடத்தில் பணி புரியும் ஜாவித் இக்பால் ஹபீஸ் தடயவியல் சோதனை அறிக்கையை உடனடியாகத் தராமல் ஆறு நாட்களாக வைத்திருந்ததாக இடை நீக்கம் செய்யப் பட்டுள்ளார்.
No comments:
Post a Comment