இஸ்லாமாபாத்: நாட்டின் பிரிவினையைத் தவிர்த்திருந்தால், இந்தியா இன்னேரம் உலகப் பெரும் வல்லரசு நாடாக மாறியிருந்திருக்கும் என்று கூறியுள்ளார் ஜஸ்வந்த் சிங்.
பாகிஸ்தானின் டான் டிவிக்கு ஜஸ்வந்த் சிங் ஜின்னா குறித்த நூல் தொடர்பாக பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
பன்முகம் கொண்ட பெடரல் இந்தியா அமைய வேண்டும் என்பது காந்தி மற்றும் ஜின்னாவின் கனவாக இருந்தது. ஆனால் ஜவஹர்லால் நேருவும், சர்தார் வல்லபாய் படேலும், காங்கிரஸ் கட்சியும்தான் இந்தியப் பிரிவினைக்கு வழி வகுத்து விட்டனர்.
நாடு உடைய நாம் வழி வகுத்து விட்டோம். படேலும், நேருவும், ஜின்னாவின் கோரிக்கையை ஏற்க ஒப்புக் கொண்டனர். ஆனால் அதை கூறு போட்ட வடிவில் ஏற்க முன்வந்தனர். நாம் ஒன்றாக இருந்திருந்தால், பாகிஸ்தான் உருவாகாமல் இருந்திருந்தால் இன்னேரம் வல்லரசாக மாறியிருப்போம்.
இனிமேல் பூகோள எல்லைய மாற்றியமைக்க முடியாது. எனவே கடந்த கால நினைவுகளிலேயே வாழ்ந்திருப்போம் என்ற எண்ணத்தை இரு நாட்டு மக்களும் மாற்றிக் கொள்ள வேண்டும். இரு நாடுகளும் இணைந்து தெற்காசியாவின் சோகங்களை அழிக்க வேண்டும் என்று நினைத்தால் இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும். அதற்கு பெருந்தன்மையான மனது இரு நாடுகளுக்கும் தேவை.
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே 2002ம் ஆண்டில் ஏற்பட்ட மோதலின்போது அணு ஆயுத யுத்தம் வெடிக்கும் என்ற நிலை ஏற்பட்டதாக கூறப்பட்டதெல்லாம் தவறானவை. அந்த நிலையே அப்போது ஏற்படவில்லை. இரு நாடுகளும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தை ஒருபோதும் கொண்டிருக்கவில்லை என்று கூறியுள்ளார் ஜஸ்வந்த் சிங்.
புத்தகத்துக்குத் தடை-எதிர்த்து வழக்கு:
இந் நிலையில் ஜின்னா குறித்து தான் எழுதிய "Jinnah -- India, Partition, Independence" புத்தகத்துக்கு குஜராத் அரசு தடை விதித்துள்ளதை எதிர்த்து ஜஸ்வந்த் சிங் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
தனது மனுவில், இந்தப் புத்தகத்தை படித்தே பார்க்காமல் தடை விதித்துள்ளனர். இந்த விவகாரத்தில் முதல்வர் நரேந்திர மோடி ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment