வாஷிங்டன்:ஈராக்கில் அப்பாவி மக்களை சுட்டுக்கொலைச்செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட தனியார் பாதுகாப்பு நிறுவனமான பிளாக்வாட்டர் நிறுவனத்தை அதிகாரப்பூர்வமாக ஈராக்கிலிருந்து வெளியேற்றியதாக அமெரிக்கா அறிவித்திருந்தாலும் தற்போதும் அந்நிறுவனத்தை பயன்படுத்திவருவதாக நியூயார்க் டைம்ஸ் என்ற நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஈராக்கில் தூதரக அதிகாரிகளை அழைத்துச்செல்லுதல்,ஆப்கானிஸ்தானில் அவர்களுடைய பாதுகாப்பை உறுதிச்செய்தல்,அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளித்தல் ஆகிய பணிகள் சி சர்வீஸஸ் என்ற புதுப்பெயரில் இயங்கும் பிளாக்வாட்டருக்கு அமெரிக்க அரசு வழங்கியுள்ளது.இதில் 2011 ஆம் ஆண்டு வரையிலான ஒப்பந்தங்களும் அடங்கும்.40 கோடி டாலர் அளவிலான ஒப்பந்தங்கள் இந்நிறுவனத்திற்கு அமெரிக்க வழங்கியிருப்பதாக அப்பத்திரிகை கண்டறிந்துள்ளது.
அல்காயிதா தலைவர்களை கொல்வதற்கு பிளாக்வாட்டருடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள சூழலில்தான் நியூயார்க் டைம்ஸின் இந்த ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.இந்தச்செய்தியை மறுக்க அமெரிக்க அரசுத்துறை அதிகாரிகளோ,சி.ஐ.ஏ அதிகாரிகளோ தயாரில்லை. தற்போதுள்ள ஒப்பந்தங்களை ரத்துச்செய்வது பொருளாதார சிக்கலை ஏற்படுத்தும் என்று அதிகாரிகள் விளக்கம் அளிக்கின்றனர்.தனியார் நிறுவனங்களுக்கு உதவிச்செய்வது நிறுத்தப்படும் என்று அமெரிக்க அரசு செயலர் ஹிலாரிகிளிண்டன் ஒரு பக்கம் கூறியிருக்க மறுபுறம் தனியார் பாதுகாப்பு நிறுவனங்களுடனான உறவு தொடர்வதை எதிர்த்து டெமோக்ரேடிக் செனட்டர் ஜோண் கெர்ரி களமிறங்கியுள்ளார்.
வெளிநாட்டு உறவுகளுக்கான செனட் கமிட்டிக்கு கெர்ரிதான் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.சி.ஐ.ஏ வுடன் தங்களுக்கு எந்தவிதமான உடன்பாடுகள் உள்ளன என்பதைப்பற்றி விளக்கவேண்டும் என்று கூறி கெர்ரி சி சர்வீஸின் தலைவர் எரிக் டி பிரின்ஸிற்கு கடிதம் எழுதியிள்ளார்.அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ தீவிரவாத குற்றம் சுமத்தி கைதுச்செய்யப்படும் நபர்களை கொடூரமான முறையில் துப்பாக்கியை பயன்படுத்தியும்,கான்கிரீட்டுகளை துழைக்கும் ட்ரில்லிங் மெசின்களை உபயோகித்தும் சித்திரவதைச்செய்து குற்றத்தை ஒப்புக்கொள்ளவைத்ததாகவும் நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தி கூறுகிறது.
அமெரிக்க சிவில் லிபர்டி யூனியன் சட்டரீதியான போராட்டத்தின் மூலம் பெற்ற சி.ஐ.ஏ ஜெனரலின் அறிக்கையிலிருந்துதான் இத்தகவல் எடுக்கப்பட்டது.1999 இல் 17 அமெரிக்க கப்பல்படையினரின் மரணத்திற்கு காரணமான யு.எஸ்.எஸ் கோல் குண்டுவெடிப்பு சம்பந்தமாக கைதுச்செய்யப்பட்ட அப்துற்றஹீம் அல் நஸீரை துப்பாக்கி முனையை நெற்றியில் வைத்து கொன்றுவிடுவோம் என்று பயமுறுத்தி விசாரணைச்செய்திருந்தனர்.இவர் உட்பட மூன்று நபர்களை வாட்டர்போர்டிங் என்ற சித்திரவதைக்கும் ஆளாக்கியிருந்தனர். கொலைச்செய்துவிடுவேன் என்று பயமுறுத்தி விசாரணைச்செய்வது அமெரிக்காவில் தடைச்செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment