மணிலா:தெற்கு பிலிப்பைன்ஸில் மோரோ இஸ்லாமிக் லிபரேசன் ஃப்ரண்ட் போராளிகளுக்கும் பிலிப்பைன்ஸ் ராணுவத்தினருக்குமிடையே நடைபெறும் மோதலில் அப்பாவிகளான சிவிலியன்கள் ஆயிரக்கணக்கானோர் ராணுவத்தின் கொடூரமான அக்கிரமத்திற்கு இரையாவதாக சர்வதேச மனித உரிமை அமைப்பான ஆம்னெஸ்டி இண்டர்நேசனல் குற்றஞ்சாட்டியுள்ளது. ராணுவத்தினரால் ஏராளமானோர் கொலைச்செய்யப்பட்டதாகவும்,பலர் கடத்திச்செல்லப்பட்டுள்ளதாகவும் ஆம்னெஸ்டி தனது அறிக்கையில் கூறியுள்ளது.
போராளிகளுடன் தொடர்புடையவர்கள் எனக்குற்றஞ்சாட்டப்பட்டு சிவிலியன்கள் பலரையும் ராணுவம் கொலைச்செய்துள்ளது. போராளிகளுக்கும் பிலிப்பைன்ஸ் ராணுவத்தினருக்குமிடையே மோதல் நடைபெறும் மிண்டனாவோவில் ஏழு லட்சம் பேர் அகதிகளாக்கப்பட்டுள்ளனர்.அகதிகளாக்கப்பட்ட பலரும் சட்டவிரோதமாக கொல்லப்படுகின்றார்கள் அல்லது காணாமல் போகின்றார்கள்.
இரகசிய சிறைச்சாலைகளுக்கு சாதாரண குடிமக்களை ராணுவம் கடத்திச்செல்கிறது. பல வீடுகளையும் ராணுவம் தீக்கிரையாக்கியுள்ளது. போராளிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே நடைபெற்ற மோதல் முடிந்த பிறகு தங்களது சொந்த கிராமங்களிலுள்ள விவசாய நிலங்களை பாதுகாக்கச்சென்றவர்களை ராணுவம் போராளிகள் என்று குற்றஞ்சுமத்தி சித்திரவதைச்செய்த நிகழ்வுகளை ஆம்னெஸ்டி சுட்டுக்காட்டுகிறது.
40 வருடங்களாக நடைபெறும் போராட்டத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் மனித உரிமை மீறல்கள் படிபடிப்படியாக அதிகரித்துள்ளதாக ஆம்னெஸ்டியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment