அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Thursday, August 20, 2009

புண்ணியமிக்க ரமலானை கண்ணியப்படுத்துவோம்


ரமலான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழிகாட்டியாகவும் தெளிவான சான்றுகளைக்கொண்டதாகவும் (நன்மை தீமைகளை) பிரித்தறிவிப்பதுமான அல்குர் ஆன் இறக்கியருளப்பட்டது.ஆகவே உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறார்களோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்கவேண்டும். (அல்குர் ஆன்2:185)
ஈமான் கொண்டோர்களே!உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்ததுபோல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது!(அதன் மூலம்)நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்!(அல்குர் ஆன்2:183)

நன்மைகளின் பொற்காலமாய் பாவங்களின் இலையுதிர்காலமாய் புண்ணியமிக்க ரமலான் நம்மை அண்மித்துவிட்டது.மனித மனங்களில் மண்டிக்கிடக்கும் மாசுகளை அகற்றி அவனை மாண்பாளனாக மாற்றும் வித்தை ரமலானுக்கு உண்டென்றால் அது மிகையன்று!நன்மைகள் நம் வாசல் தேடி வரும்போது அதனை வழி மறிக்கும் ஷைத்தானுக்கு கூட விலங்கிடப்பட்ட பரிசுத்த மாதம் இது!.தேடல் என்பது பொருளாதாரத்தையும்,புகழையும் நோக்கி நிற்கும் காலக்கட்டத்தில் நன்மையின் தேடலாய் நம்மை அரவணைக்கும் இறையச்சத்தின் மாதமிது!.மனித சமூகத்திற்கு வாழ்வியல் வசந்தமாய் வானவர்கோன் ஜீப்ரயீல் மூலம் வள்ளல் நபிக்கு வல்லோன் இறைவனால் அருளப்பட்ட திருக்குர் ஆனின் மாதமிது.வரிக்கு வரி அல்ல எழுத்துக்கு எழுத்து நன்மைகள் வாரியிறைக்கப்படும் திருக்குர் ஆன் ஓதப்படும்பொழுது! லைலத்துல் கத்ர் என்ற ஆயிரமாதங்களைவிட சிறந்த ஒரு இரவை அல்லாஹ் ஒரு அருட்கொடையாக நமக்கு அளித்தது இம்மாதத்தில்தான்.

இன்று ரமலான் என்றால் பசியும் தாகமும் தான் முன்னிறுத்தப்படுகிறது! நிச்சயமாக இறையச்சமென்பது அதுவன்று நபிகளாரின் வாக்குகளில்! பொய்யான செயல்களையும் சொற்களையும் விட்டொழிக்காதவரை ரமலான் நமக்கு எட்டாக்கனியாகிவிடும் எச்சரிக்கை! சோம்பலுடனும் தூக்கத்துடனும் கழிப்பதற்கா இம்மாதத்தின் நோக்கம்! நிச்சயமாக இல்லை! இஸ்லாமிய வரலாற்றின் மீது ஒரு முதன்மையான ஆய்வை மேற்க்கொண்டால் தெரியவரும் அது செயற்களத்தின் மாதமென்று! பத்ரும், வாதில்குராவும்,பத்ஹே மக்காவும், ஹத்தீனும், அய்னுன் ஜாலூத்தும் நடைபெற்ற மாதமல்லவா இது!

நபி(ஸல்...)அவர்களும் சரி அவர்களுடைய தோழர்களும் சரி ரமலானைப்பார்த்த விதமே வேறு.அவர்கள் ரமலானை இறையச்சத்திற்குரிய மாதமாக அல்லாஹ்வின் காருண்யமும்,வெற்றியும் இறக்கப்படும் மாதமாகத்தான் சிந்தித்தார்கள், அதனடிப்படையில் செயல்படவும் செய்தார்கள்.இறையச்சம் என்பது வெறும் மஸ்ஜிதுகளில் அமர்ந்து தொழுவதுடனோ, திக்ருகளை செய்வதுடனோ, திருக்குர் ஆனை ஓதுவதுடனோ முடிவதல்ல! ரமலானுடைய காலக்கட்டங்களில் நபி(ஸல்...)அவர்களும் சஹாபாக்களும் மஸ்ஜிதில் அமர்ந்திருந்தால் பத்ரும், பத்ஹே மக்காவும், வாதில் குராவும் நடைபெற்றிருக்குமா அல்லது அதில் வெற்றியைத்தான் பெற்றிருக்க முடியுமா?. அரபு பிரதேசங்களிலிருந்து இணைவைப்பின் கடைசி சின்னங்கள் வரை துடைத்தெறியத்தான் முடிந்திருக்குமா?. இறையச்சத்தின் இலக்கணத்தை அவர்கள் விளங்கிக்கொண்டது இவ்வாறுதான் ரமலானில் நோன்புநோற்று,இரவுகளில் நின்று வணங்கி, திருக்குர் ஆனை ஓதுவதுடன் நன்மையை ஏவி தீமையத்தடுக்கும் இலட்சியப்பணியையும் அவர்கள் நிறைவேற்றினார்கள்.

நபி(ஸல்...)அவர்கள் ஒருமுறை இவ்வாறு கூறினார்கள்,"எத்தனையோ நோன்பாளிகளுக்கு அவர்களது நோன்பால் பசித்திருந்ததைத் தவிர எந்தப் பயனும் இருக்காது. எத்தனையோ தொழுகையாளிகளுக்கு அவர்களின் தொழுகை மூலம் கண் விழித்திருந்ததைத் தவிர வேறு பலன் கிடைக்காதுஎன்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)ஆதாரம் : இப்னுமாஜா, அஹ்மத்.

நோன்பு என்பது வெறும் பசித்திருப்பதோடும் தாகித்திருப்பதோடும் முடிந்துவிடுவதல்ல!நோன்பு நோற்பதன் மூலம் நாம் அல்லாஹ்வின் கட்டளைக்கு அஞ்சி நமது பானத்தையும்,உணவையும் சில மணிநேரங்கள் தியாகம் செய்கின்றோமோ அதைப்போல் அல்லாஹ் கூறும் இன்ன பிற கட்டளைகளையும் ஏன் தமது உயிரையும் பொருளையும் கூட அல்லாஹ்வின் பாதையில் தியாகம் செய்ய தயார் என்பதை பறைசாற்றுவதையே நோன்பின் மூலம் நாம் பெறும் பாடமாக எடுத்துக்கொள்ளவேண்டும். அதில் தான் இறையச்சமே அடங்கியிருக்கிறது.

ஆக‌வே இந்த‌ ச‌ங்கைமிக்க‌ ர‌மலானில் அல்லாஹ்வும் அவ‌ன‌து தூத‌ரும் எவ்வாறு ர‌ம‌லானை ப‌ய‌ன்ப‌டுத்த‌வேண்டும் எவ்வாறு அதிலிருந்து ப‌டிப்பினை பெற‌வேண்டும் என்று க‌ட்ட‌ளையிட்டார்க‌ளோ அத‌ன‌டிப்ப‌டையில் செய‌ல்ப‌டுவோம்! ஈருல‌கிலும் வெற்றிய‌டைவோம்! அல்லாஹ் அத‌ற்கு துணைபுரிவானாக‌!.

தூதன்

No comments: