அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Thursday, March 11, 2010

குஜராத் கலவர வழக்கு- விசாரணைக்கு ஆஜராக மோடிக்கு சம்மன்




அகமதாபாத்: 2002ல் நடந்த குஜராத் கலவர வழக்கு தொடர்பான விசாரணைக்கு நேரில் வருமாறு குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்.ஐ.டி) சம்மன் அனுப்பியுள்ளது.

மார்ச் 21ம் தேதி விசாரணைக்கு நேரில் வர வேண்டும் என மோடிக்கு அனுப்பப்பட்டுள்ள சம்மனில் எஸ்.ஐ.டி உத்தரவிட்டுள்ளது.

குஜராத் கலவரத்தில் முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறை கொலை வெறியாட்டத்தைத் தூண்டி விட்டு நடத்தியதாக மோடி மற்றும் அவரது அமைச்சர்கள் பலர் மீது குற்றச்சாட்டுக்கள் உள்ளன. இதுதொடர்பாக பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இதில் மோடி மீதான புகார் - 2002ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அகமதாபாத், குல்பர்க் சொசைட்டி கலவரத்தில், முன்னாள் எம்.பி. ஈசான் ஜாப்ரி உள்ளிட்ட 70 பேர் உயிருடன் தீவைத்துக் கொளுத்திக் கொலை செய்யப்பட்டனர். இதுதொடர்பாக ஜாப்ரியின் மனைவி ஜாகியா புகார் கொடுத்தார்.

அவர் தொடர்ந்த வழக்கில், மோடி மற்றும் அவரது ஆட்கள், போலீஸாரையும், அதிகாரிகளையும் ஏவி, கலவரத்தில் ஈடுபடுவோரை கண்டு கொள்ளாமல் விடுமாறு உத்தரவிட்டனர். ஈசான், அமைதியை ஏற்படுத்தவே முயன்றார். ஆனால் அவரை உயிருடன் தீவைத்துக் கொளுத்திக் கொன்று விட்டனர் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கில்தான் தற்போது மோடிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

முன்னாள் சிபிஐ இயக்குநர் ஆர்.கே.ராகவன் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை உச்சநீதிமன்றம் அமைத்து மோடி மீதான புகாரை ஆராய உத்தரவிட்டிருந்தது.

இதுகுறித்து ஆர்.கே.ராகவன் அளித்த ஒரு பேட்டியில், சாட்சியங்களிடமிருந்து ஏராளமான ஆதாரங்களை நாங்கள் சேகரித்துள்ளோம். முதல்வர் மோடியை விசாரணைக்கு அழைத்துள்ளோம். அப்போது இவற்றை அவரிடம் தெரிவித்து விளக்கம் கேட்போம் என்றார்.

குஜராத் கலவரத்தில் 1180 முஸ்லீம்கள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments: