அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Wednesday, October 26, 2011

அகழ்வாராய்சியில் கண்டறியப்பட்ட, 1500 ஆண்டு முன்பு புதைந்த காதலர்களின் எலும்பு கூடு!

ரோம் : கைகோர்த்த நிலையில், ஒருவரை ஒருவர் பார்த்தபடி புதைந்த ஆண் & பெண்ணின் எலும்பு கூடுகள் இத்தாலியில் ஜோடியாக கிடைத்துள்ளன. இவை 1,500 ஆண்டுகளுக்கு முன்பு புதைந்த காதல் ஜோடியின் எலும்புகளாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இத்தாலியின் மாடனா நகரின் புறநகர் பகுதியில் பழங்கால அரண்மனையை புதுப்பிக்கும் பணி சமீபத்தில் நடந்தது. இதற்காக பள்ளம் தோண்டியபோது, 10 அடி ஆழத்தில் ஒரு ஜோடி எலும்பு கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இருவரும் கை கோர்த்த நிலையில் உயிரை விட்டிருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர் டான்டனோ லாபட் கூறியதாவது:


மாடனா என்ற பகுதியின் பழைய பெயர் மியூடினா. டிபிடோ ஆற்றின் அருகே இப்பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் தரைமட்டத்தில் இருந்து 3 அடி ஆழம், 10 அடி ஆழம், 23 அடி ஆழம் என 3 அடுக்குகளாக பல எலும்பு கூடுகள் கிடைத்திருக்கின்றன. 10 அடி ஆழத்தில் ஒரு ஜோடி எலும்பு கூடு கிடைத்தது. ஒன்று, ஆண். இன்னொன்று பெண். இறக்கும் நேரத்தில்கூட இருவரும் ஒருவரை ஒருவர் ஆசையோடு பார்த்திருக்கின்றனர். காதலனின் தலைகூட இறந்த பிறகுதான் அந்த பக்கம் சாய்ந்திருக்கிறது என்பது மண்டை ஓடு இருந்த விதம் மூலம் தெரிகிறது. அவர்களது சாவுக்கு வெள்ளம் காரணமாக இருந்திருக்கலாம்.

இந்த ஜோடிகள் சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருந்தவர்கள் போல தெரியவில்லை. சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்கள்தான். விவசாய பண்ணையில் வேலை பார்த்தவர்களாக இருக்கலாம். ஏராளமான எலும்பு கூடுகளை பார்த்திருக்கிறேன். ஒருவரை ஒருவர் ஆசையோடு பார்த்த நிலையில், கைகோர்த்தபடி இறந்தவர்களது எலும்பு கூடுகளை பார்த்தது முதல் முறை. பார்த்ததும் கண்ணில் நீர் வந்துவிட்டது. இவை அனேகமாக 5 அல்லது 6&ம் நூற்றாண்டில் புதைந்த எலும்பு கூடாக இருக்கலாம். 

இவ்வாறு லாபட் கூறினார். அமெரிக்காவின் வடக்கு கரோலினா பல்கலைக்கழக பேராசிரியர் கிறிஸ்டினா கில்குரோவ் கூறுகையில், ‘‘ஐரோப்பாவில் கருப்பு பிளேக் நோய் போன்ற கொள்ளை நோய்கள் பரவிய காலகட்டத்தில், நோயால் பாதிக்கப்பட்ட வர்களை உயிரோடு புதைக்கும் வழக்கம் இருந்தது. அவர்களோடு அவர்களது அன்புக்குரியவர்களும் சேர்ந்து புதைந்து இறந்த சம்பவங்களும் நடந்தன. இதுகூட அந்த வகையை சேர்ந்ததாக இருக்கலாம். தங்கள் பாச பிணைப்பை காட்டுவதற்காக கைகோர்த்து இறந்திருக்கலாம்’’ என்றார். இது நிஜமாக காதல் ஜோடிகள்தானா, எந்த வயதில், எதனால் இறந்தார்கள் என்று இத்தாலியின் பொலோனா பல்கலை மனிதவியல் ஆராய்ச்சியாளர் ஜார்ஜியோ க்ரூபியானி ஆய்வு செய்து வருகிறார்.

No comments: