அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Wednesday, October 26, 2011

இந்தியர்கள் உட்பட 15,000 மாணவர்களின் விசா ஆஸ்திரேலிய அரசு ரத்து

மெல்பர்ன் : கடந்த ஓராண்டில் ஆஸ்திரேலிய அரசு 15,066 வெளிநாட்டு மாணவர்களின் விசாவை ரத்து செய்துள்ளது. இதனால் ஆயிரக் கணக்கான இந்திய மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தேர்வில் தோல்வியடைந்தது அல்லது வகுப்பை புறக்கணித்த காரணத்தால் 3,624 மாணவர்களின் விசா ரத்து செய்யப்பட்டு தங்கள் சொந்த நாட்டுக்கு அனுப்பப்பட்டனர். 


மேலும், படிப்பதாகக் கூறிக்கொண்டு சட்டவிரோதமாக வேலை செய்த அல்லது விபசாரத்தில் ஈடுபட்டது ஆகிய காரணங்களால் 2,235 மாணவர்களின் விசா ரத்து செய்யப்பட்டது. இதுதவிர பல்வேறு காரணங்களுக்காக கடந்த ஓராண்டில் மொத்தம் 15,066 விசா ரத்து செய்யப்பட்டது. முந்தைய ஆண்டைவிட இது 37 சதவீதம் அதிகம். 

இதன் காரணமாக, ஆயிரக் கணக்கான இந்திய மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்திய மாணவர்களைவிட சீன மாணவர்கள் அதிக அளவில் இருந்த போதிலும், அவர்களது விசா அதிக அளவில் ரத்து செய்யப்படவில்லை.

ஆஸ்திரேலியாவில் கடந்த ஜூன் மாத நிலவரப்படி 3,32,709 வெளிநாட்டு மாணவர்கள் இருந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் நியூ சவுத்வேல்ஸ் மற்றும் விக்டோரியா மாகாணங்களில் வசித்தனர். இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பல்கலைக்கழக மாணவர்கள். 3ல் ஒரு பகுதியினர் தொழிற்கல்வி விசா பெற்று டிப்ளமோ படித்து வந்தனர். 
மொத்த வெளிநாட்டு மாணவர்களில் 6ல் ஒருவர் அதாவது 17 சதவீதம் பேர் இந்தியர்கள். தொழிற்பயிற்சி, பல்கலைக்கழக கல்வி, ஆங்கில கல்வி அல்லது பள்ளிக் கல்வி உட்பட மொத்தம் 8 பிரிவுகளின் கீழ் மாணவர் விசா வழங்குகிறது.

No comments: