அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Tuesday, February 10, 2009

கியூப டாக்டர்களிடம் அப்படி என்னதான் இருக்கிறது?



2004ம் ஆண்டு மார்ச் 30ம் தேதி அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் போல்ட்டன் கூறினார்கியூபா குறிப்பிட்ட அளவிற்கு உயிரி ஆயுதத்தின் விளைவுகளை ஏற்படுத்தி வருவதைப் பற்றி நாங்கள் கவலைப்படுகிறோம்.
ஆகஸ்ட் 2006ல் அமெரிக்காகியூப மருத்துவ நிபுணர்கள் தற்காலிக விடுவிப்பு திட்டம் என்ற ஒன்றை அறிவித்தது. அதன்படி அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறையின் புதிய விதிகள் மாற்றப்பட்டது. வெளிநாடு வாழ் கியூப டாக்டர்கள், முடநீக்கியல் நிபுணர்கள், சோதனை கூட ஊழியர்கள், செவிலியர்கள், விளையாட்டுப் பயிற்சியாளர்கள் அமெரிக்காவிற்கு வர நினைத்தால் விசேஷமான முறையில் கவனிக்கப்படுவார்கள் என்று மாற்றியது. (வெளிநாடுவாழ் 40,000 கியூப மருத்துவப் பணியாளர்களில் 200 பேர் கூட அமெரிக்காவின் இந்த ஆசை வார்த்தைக்கு பலியாகவில்லை)
2000ம் வருடம் கவுதமாலாவில் கம்யூனிஸ்ட் எதிர்ப்புப்படை சிக்லோ ஓஓஐ என்கிற தினசரிக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தது. ‘கவுதமாலாவில் பணிபுரியும் 459 கியூப டாக்டர்களும் உடனடியாக வெளியேற வேண்டும். அவர்கள் மிகப் புனிதமான மருத்துவத்தொழிலை தங்கள் நடவடிக்கையின் மூலமாக கம்யூனிசத்தை பரப்ப பயன்படுத்துகிறார்கள்.
2004ல் ஹெய்ட்டியில் ஜனநாயகப் பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் அரிஸ்டைடு கவிழ்க்கப்பட்டு புஷ் நிர்வாகத்தின் கைத்தடி, ஆட்சிப் பொறுப்பேற்றார். அமெரிக்கா ஹெய்ட்டியில் பணிபுரிந்த 525 கியூப டாக்டர்களை வெளியேற்ற நிர்பந்தித்தது. ஆயினும் அந்த அரசு அதற்கு இணங்கவில்லை.
2005ல் ஹோண்டுராசில் அதன் அதிபர் மகுரோ, அமெரிக்க தூதரகம் மற்றும் ஹோண்டுராஸ் மெடிக்கல் அசோசியேசனின் நிர்பந்தத்திற்கு பணிந்து கியூப டாக்டர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று அறிவித்தார். ஆனால் இந்த அறிவிப்பிற்கெதிராக அலைஅலையாக நாடு முழுவதும் தொழிற்சங்கங்களும், சமூக நல அமைப்புகளும் நடத்திய போராட்டங்களால் அந்த முடிவு கைவிடப்பட்டது.
அப்படி என்னதான் இருக்கிறது இந்த கியூப டாக்டர்களிடம். லத்தீன் அமெரிக்க நாட்டு மக்கள் ஆட்சியாளர்களை மீறி இவர்களின்பால் காதல் கொண்டிருப்பதற்கும், அமெரிக்கா உயிரி ஆயுதம் என்று வெறுப்பை உமிழவும்; வாய்ப்பு கிடைத்தால் பிறந்த நாட்டைவிட்டு வர ஆசை காட்ட தனது சட்டத்தை மாற்றுமளவிற்கு இவர்களிடம் என்ன இருக்கிறது. அது வெறும் மருத்துவத்திறன் சார்ந்தது மட்டுமல்ல மக்களை நேசிக்கும் குணம் சார்ந்த மகத்துவமும் இணைந்தது. கியூப அரசு, புரட்சி அரசு இதை சாதித்து காட்டியிருக்கிறது.
செல்வபுரி, வளர்ச்சியடைந்த நாடு என்று சொல்லப்படும் அமெரிக்காவில் 417 பேருக்கு ஒரு டாக்டர் இருக்கிறார்கள். மேற்கு ஐரோப்பிய நாடுகளில் 330 பேருக்கு ஒரு டாக்டர் இருக்கிறார். இந்த ஒப்பீட்டிற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 2007ம் ஆண்டில், கியூபாவில் 155 பேருக்கு அதாவது 50 வீட்டிற்கு ஒரு டாக்டர் இருக்கிறார். அதனால்தான் மிக வளர்ச்சியடைந்த நாடுகளுக்கிணையாகவும் அதை விஞ்சியும் பிறப்பின்போது குழந்தை இறப்பு விகிதம் பிரசவத்தின் போது தாய் இறப்பு விகிதம் குறைவாகவும், ஆயுட்காலம் அதிகமாகவும் கியூபாவில் உள்ளது.
இதை எப்படி சாதித்தார்கள். 1984-85ல் 120 முதல் 150 குடும்பங்களுக்கு ஒரு மருத்துவக்குழு உருவாக்கப்பட்டது. இதில் ஒரு டாக்டரும், ஒரு செவிலியரும் இருப்பார்கள். இவர்களுக்கு ஒரு மருத்துவமனை அமைத்துக்கொடுக்கப்பட்டது. இவர்கள் மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு மருத்துவம் செய்வதோடு நின்று விடவில்லை. மருத்துவமனைக்கு வராதோரை அவர்கள் வீடு தேடிச்சென்று பரிசோதனை நடத்தி ஆலோசனைகள், காப்பு நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சையளிப்பார்கள்.
மக்களை நேசிக்கும் ஒரு அரசியல் அமைப்பு முறையில் இது சாத்தியமே என்பதை நிரூபித்திருக்கிறது சின்னஞ் சிறிய கியூபா. 2004ல் இப்படி 99 சதம் மக்கள் டாக்டரைச் சந்திப்பதையும், டாக்டர்கள் மக்களைச் சந்திப்பதையும் சாத்தியமாக்கியிருக்கிறார்கள்.
இவர்கள் தன்நாட்டு மக்களுக்கு மட்டும் சேவை செய்பவர்கள் அல்ல. 1963ல் பிரான்ஸின் காலனியாக இருந்த அல்ஜீரியா விடுதலைபெற்ற போது அங்கு மருத்துவர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டபோது ஓடோடி உதவி செய்தது கியூபா. நிறவெறி தென் ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்க ஆதரவு படைகளால் தாக்கப்பட்ட போது அங்கோலாவிற்கு உதவி செய்தது கியூபா.
ஹெய்ட்டியை ஜார்ஜ் புயல் தாக்கிய போதும், கவுதமாலா மற்றும் ஹோண்டுராஸை மிட்ச் புயல் தாக்கியபோதும் உள்ளடக்கிய பகுதிகளில் உயிர் காக்கச் சென்றவர்கள் கியூப டாக்டர்கள். நவம்பர் 2008 கணக்குப்படி 75 நாடுகளில் 38,000 கியூப மருத்துவ ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் வேலை தேடி பிழைப்பு தேடி கூடுதல் சம்பளம் தேடி சொந்த நாட்டைவிட்டு ஓடியவர்கள் அல்லர். துயருறும் தன் சகோதரனுக்கு மருத்துவ உதவியளிக்கச் சென்றவர்கள். அதனால்தான் இவர்கள் வெனிசுலாவிற்குச் சென்ற போது அங்கிருந்த டாக்டர்கள் இவர்களுக்கெதிராய் போராட்டம் நடத்தினர். வெனிசுலா டாக்டர்களின் குற்றச்சாட்டு இது தான்டாக்டர் தொழில் புனிதமானது. கடவுளுக்குச் சமமானது. பக்தர்களைத் தேடி கடவுள் ஓடுவது கடவுளைக் கேவலப்படுத்துவது. மருத்துவத்தின் மேன்மை யாருக்கு புனிதமென்று படுகிறதோ யாரால் அடையமுடியுதோ அவர்கள் அடைந்து கொள்ளட்டும். ஆனால், அங்குள்ள மக்கள் வெனிசுலா டாக்டர்களுக்கெதிராய் போராடி முறியடித்தார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் 29,000 டாக்டர்களை கியூபா உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இது தவிர 24,000 வெளிநாட்டு மாணவர்களுக்கு இலவச மருத்துவக் கல்வி வழங்கி வருகிறது. இவர்களில் 100 பேர் அமெரிக்க மாணவர்கள். இது தவிர வெனிசுலாவின் உதவியுடன் இன்னுமொரு 17,000 பேருக்கு மருத்துவக்கல்வியளித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் மொத்தமாக கியூபா 70,000 டாக்டர்களை உருவாக்குகிறது. அமெரிக்கா முழுவதிலும் மருத்துவ மாணவர்கள் ஆண்டிற்கு 64,000 முதல் 68,000 வரை தான். கியூபாவில் மருத்துவக்கல்வி அயல்நாட்டவருக்கு உட்பட இலவசம்.. அமெரிக்காவில் ஒரு மருத்துவ மாணவன் படித்துவிட்டு வெளியேறும்போது சராசரியாக 1,40,000 டாலர் கடனுடன் வருகிறான். அதாவது இந்திய ரூபாயில் 70 லட்சம். மருத்துவம் தொழிலா? சேவையா? என்பதை கற்பிக்கும் முறையும் இடமும் செலவும் கற்றுக்கொடுத்து அனுப்புகின்றன. பணம் கொழிக்கும் மருத்துவத்தொழிலை இலவசமாக கற்பிப்பதா என்ற கேள்வி எழும். தொழில் கற்றுக்கொடுப்பதோடு மட்டுமல்ல. மனிதனை நேசிக்கவும் கற்றுக்கொடுக்கிறார்கள்.
சேகுவேரா சொன்னார்கேலி செய்யப்படும் வாய்ப்பிருக்கிறது என்ற போதும் நான் சொல்கிறேன் உண்மையான புரட்சிவாதி மனித இனத்தின் மீதான காதல் உணர்வாலேயே வழி நடத்தப்படுகிறான்.
2000ம் ஆண்டு மே தின விழாவில் தோழர் பிடல் காஸ்ட்ரோ பேசுகையில் குறிப்பிட்டார், “நம் நாட்டின் புரட்சி வென்றதற்கும், நீடிப்பதற்கும் நமது புரட்சியின் தனித்துவத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்குமான திறனை நாம் கொண்டிருக்கிறோம். அதற்கான காரணம்கருத்துப் போராட்டத்தை நடத்தவும் அதில் வெற்றி பெறவும் நமக்கிருக்கும் ஆர்வம் ஆம்! கியூபா மருத்துவத்துறையிலும் அதைத் தான் நடைமுறைப்படுத்தி வருகிறார்கள்.
கியூப கலாச்சாரத்துறை அமைச்சர் ஏபெல் பிரிட்டோ 2004ல்உலகமயம் பற்றி விளக்கியது இங்கு குறிப்பிடத்தக்கது. “நாங்களும் உலகமயத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறோம். உலகமயமாக்கப்பட வேண்டியது குண்டுகளும் வெறுப்புகளுமல்ல; அமைதி, ஒத்துழைப்பு, சுகாதாரம் அனைவருக்குமான கல்வி போன்றவையே உலகமயமாக்கப்படவேண்டும்.”
1960 ஆகஸ்ட் 19ல் சேகுவேரா புரட்சிகர மருத்துவம் பற்றிபேசும்போதுசில மாதங்களுக்கு முன்பு புதிதாக பட்டம் பெற்ற டாக்டர்களை கிராமப்புற சேவைகளுக்கு அனுப்பினோம். அவர்கள் கூடுதல் பணம் கேட்டார்கள். அதைக் கொடுத்த பிறகுதான் கிராமப்புற சேவைக்கு சென்றார்கள். இவர்கள் வசதியான வீட்டுப்பிள்ளைகள். ஏழை மக்களுக்கும், விவசாயிகளின் பிள்ளைகளுக்கும் வாய்ப்பு கிடைத்தால் அவர்கள் தங்கள் மக்களுக்குச் சேவை செய்ய உற்சாகத்துடன் ஓடுவார்கள். அதில் மட்டும் நாம் வெற்றி பெற்றால் ஒரு புதிய ஆயுதத்தை பெற்றவர்களாவோம். அது சகோதரத்துவம் என்னும் ஆயுதம் என்றார்.
கியூபா அந்த ஆயுதத்தை தயாரித்துக் கொண்டிருக்கிறது. லத்தீன் அமெரிக்காவில் அது வெற்றிவாகை சூடிக்கொண்டிருக்கிறது.
அந்த ஆயுதத்தின் விளைவுஉயிரி ஆயுதம் பயன்படுத்துவதைப் போன்றது அதைத்தடுக்க வேண்டும் என்று அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் போல்ட்டன் கூறுவதும் அதனால் தான்; ஹோண்டுராஸ், ஹெய்ட்டி, கவுதமாலா, வெனிசுலா இன்னும் பல நாட்டு மக்கள் அந்த ஆயுதத்தை நேசிப்பதும் அதனால்தான்.
தோழர் காஸ்ட்ரோ சொன்னது போல் புரட்சி என்பதுதான் மனிதனைப் போல் நடத்தப்படுவதும், மற்றவர்களை மனிதனைப்போல் நடத்துவதும் புரட்சி என்றார். இதை ஏற்போருக்கு இது காக்கும் ஆயுதம், எதிர்ப்போருக்குஉயிரி ஆயுதம். இவ்வாயுதம் உலகம் முழுவதும் பிரயோகிக்கப்படட்டும்.
(இக்கட்டுரை சகோதரத்துவம் என்னும் இறுதி ஆயுதம் என்கிற டீவ் ப்ரோவெர், ஜனவரி 2009 மன்த்லி ரிவ்யூ பத்திரிகையில் எழுதிய கட்டுரையைத் தழுவியது.)

ஷேக் அப்துல் காதர்

No comments: